திங்கள், 13 அக்டோபர், 2014

30 ஆயிரம் கோடி முடக்கம் ! அடுக்குமாடி குடியிருப்புகள்,வீட்டு மனைகள் விற்பனை தேக்கம் !

சென்னை, புறநகர்ப் பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் விற்பனையாகாமல் தேங்கி உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளால் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் முடங்கி உள்ளன. இதனால் கட்டுமானம், இதனைச் சார்ந்த துறைகளில் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவும் மந்தநிலை, கடந்த சில ஆண்டுகளாகவே உற்பத்திச் சார்ந்த தொழில் துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் பெரியளவில் ஏற்படுத்தப்படாதது ஆகிய காரணங்களால் நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது.
இதன் விளைவாக, சென்னை, புறநகர்ப் பகுதிகளில் சுமார் 1 லட்சம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டு ஓராண்டாக்கு மேலாகியும் விற்பனையாகாமல் தேங்கி உள்ளன. ரியல் எஸ்டேட் துறையினரின் சொர்க்க பூமியாகக் கருதப்படும் ஜி.எஸ்.டி. சாலை, பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய பகுதிகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.

சென்னை, புறநகர்ப் பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், அவை அமைந்துள்ள இடம், அவற்றின் அளவு ஆகியவற்றுக்கு ஏற்றாற்போல் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.75 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சந்தை மதிப்பின்படி, இவற்றின் தேக்கத்தால், சிறிய, பெரிய அளவில் முதலீடு செய்துள்ள ஆயிரக்கணக்கான கட்டுமானர்கள், கட்டுமான நிறுவனங்களின் ரூ.30 ஆயிரம் கோடி அளவிலான முதலீடுகள் முடங்கி உள்ளன.
கட்டுமானர்களில் பெரும்பாலானோர் வங்கியில் கடன் பெற்றே தங்களின் அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தாங்கள் கட்டிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் மாதக்கணக்கில் விற்பனையாகாமல் உள்ளதால் கடனுக்கான மாத வட்டியை தொடர்ந்து செலுத்த முடியாத இக்கட்டான நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சில பெரிய கட்டுமான நிறுவனங்கள் வட்டியை செலுத்தாததால், அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான அடுக்குமாடி கட்டடங்களை சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகங்கள் ஏலம் விடவும் செய்கின்றன.
இதனால் தங்களின் முதலீட்டுக்கு ஏற்றாற்போல், லட்சம், கோடிக்கணக்கில் இழப்பைச் சந்தித்து வரும் கட்டுமானர்கள் மேற்கொண்டு தொழில் செய்யமுடியாத நிலைக்கு ஆளாகி உள்ளனர். இதனால், லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது.
ரியல் எஸ்டேட் துறை மீண்டும் எழுச்சி பெறுவததன் மூலமே லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும். இதற்கு உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கட்டுமானத் துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வீட்டுமனைகள் விற்பனையிலும் தொய்வு

ரியஸ் எஸ்டேட் தொழில் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினரைச் சார்ந்தே உள்ளது. கடந்த ஓரிரு ஆண்டுகளாக இவர்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளதன் விளைவாக, சென்னை, புறநகர்ப் பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் விற்பனையில் பெரியளவில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், ஜி.எஸ்.டி. சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, பெங்களூரு நெடுஞ்சாலை உள்ளிட்ட புறநகர் பகுதிகளை ஒட்டிய இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள வீட்டுமனை திட்டங்களில், மனைகளை ஓராண்டுக்கு முந்தைய விலைக்கே விற்கவேண்டிய நிலை உள்ளதாகவும், இந்த விலை மேலும் குறையும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பதால், வீட்டுமனைகள் விற்பனையிலும் தோய்வு ஏற்பட்டுள்ளதாகவும் ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக