சனி, 13 செப்டம்பர், 2014

கோவில் முதல் மரியாதை தகராறு: நடிகை ரோஜாவுக்கு கத்திவெட்டு

ஆந்திர மாநிலம் நகரியில் கங்கை அம்மனை கொண்டாடும் வகையில் ‘ஜாத்திரை திருவிழா’ ஆண்டு தோறும் நடப்பது உண்டு. ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த விழாவில் நேற்று கிராம தெய்வமாக வணங்கப்படும் தேசம்மா, ஓடு குண்டலம்மா வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.
அங்குள்ள ஈஸ்வரன் கோவிலில் 2 அம்மனையும் அலங்கரித்து வீதி வீதியாக ஊர்வலமாக எடுத்து வருவார்கள். விடிய விடிய இந்த வீதி உலா நடைபெறும்.

விழாவில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா கலந்து கொண்டார். இதற்காக அவர் 500 பெண்களுடன் சீர்வரிசை தட்டு ஏந்தி கோவிலுக்கு சென்றார். 2 அம்மனுக்கு அணிவிக்க விலை உயர்ந்த பட்டுப்புடவையை நடிகை ரோஜா சீர் தட்டில் எடுத்துச் சென்றார்.
இதில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நகராட்சி தலைவர் சாந்தி, அவரது கணவர் குமார் மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு ரவிக்கை துணியுடன் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் மற்றும் மஞ்சள் கயிறு ஆகியவைகளை ரோஜா வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.வும் தேர்தலில் நடிகை ரோஜாவை எதிர்த்து போட்டியிட்டவருமான முத்துகிருஷ்ண நாயுடுவும், வியாபாரிகள் சங்கம் சார்பிலும் தனித்தனியாக அம்மனுக்கு புடவை கொண்டு வந்தனர். இதில் தெலுங்கு தேசம் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
அம்மன் அலங்காரம் முடிந்து ஊர்வலம் செல்ல பூஜை நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ. என்கிற முறையில் முதல் ஆரத்திக்காக ரோஜா பூஜை தட்டை வழங்கினார்.
அப்போது கிராம தலைவர் குமரேசன் முதலியார் எங்களுக்கு தான் முதல் ஆரத்தி வழங்க வேண்டும் என்று தகராறு செய்தார். இதனால் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது. ரோஜா நீட்டிய பூஜை தட்டை எதிர் தரப்பினர் தள்ளி விட்டனர்.
அப்போது யாரோ நடிகை ரோஜா கையில் கத்தியால் வெட்டினார். இதில் அவரது வலது கையில் 3 செ.மீ. நீளத்துக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ரோஜாவை வெட்டியது யார் என்று தெரியவில்லை.
இதனால் ரோஜா ஆவேசம் அடைந்தார். தெலுங்கு தேசம் கட்சியினர் திட்டமிட்டு இந்த தகராறில் ஈடுபட்டு உள்ளனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.
விழாவுக்கு சரியான பாதுகாபபு வழங்கவில்லை என்று போலீசை கண்டித்து ரோஜா மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் பெண்களுடன் ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கையில் ரத்தம் சொட்டும் நிலையில் ரோஜா மறியலில் ஈடுபட்டார்.
சம்பிராதயபடி எங்களுக்கு தான் முதல் ஆரத்தி கொடுக்க வேண்டும் என்று ரோஜா வற்புறுத்தினார். ஆளுங் கட்சியினருக்கு சாதகமாக டி.எஸ்.பி. கிருஷ்ணகிஷோர் ரெட்டி நடப்பதாக குற்றம் சாட்டினார். இதனால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய அம்மன் ஊர்வலம் தாமதமானது.
மறியல் நடத்தியவர்களை அப்புறப்படுத்த போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் பெண்கள் சிதறி ஓடினார்கள். ஆனால் ரோஜாவும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகளும் கலைந்து செல்லவில்லை. அப்போது மழை கொட்டியது. கொட்டும் மழையிலும் போராட்டத்தை கைவிடாமல் ரோட்டில் அமர்ந்திருந்தார்.
நீண்ட நேர போராட்டத்துக்கு பின் முதல் ஆரத்தி எடுக்க ரோஜா அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து 12.30 மணி அளவில் அம்மன் ஊர்வலம் புறப்பட்டது.
இதுபற்றி நடிகை ரோஜா கூறியதாவது:–
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விழாவில் பட்டாசுகளை பயன்படுத்தி உள்ளனர். எனது அருகிலேயே பட்டாசு வெடித்தனர். அதன் தீப்பொறிபட்டால் எனக்கு பெரிய காயம் ஏற்பட்டு இருக்கும். இதனை போலீசார் கண்டு கொள்ளவே இல்லை.
எம்.எல்.ஏ.வான எனக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்களுக்கு இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு கிடைக்கும்.
தெலுங்கு தேசம் கட்சியினர். திட்டமிட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளனர். நான் முதல் மரியாதை எதிர்பார்த்து வரவில்லை. சம்பிராதயப்படி தான் நடந்து கொண்டேன். ஆனால் எதிர் தரப்பினருக்கு அது பிடிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக