வியாழன், 4 செப்டம்பர், 2014

சிவகாசி : கைக்கடிகாரம் கட்டி வந்த தலித் மாணவரின் மணிக்கட்டு துண்டிப்பு.. மாணவர்கள் வெறி

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைக்கடிகாரம் கட்டி வந்ததற்காக அவரை தலித் அல்லாத பிற சமூக மாணவர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கி, மணிக்கட்டையும் வெட்டி விட்டனர். இந்த செயலால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர் திங்கள்கிழமை பள்ளிக்கு வந்தபோது கைக்கடிகாரம் கட்டி வந்ததற்காக ஜாதி வெறியில் இந்த வெறிச் செயலில் அந்த மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். திருத்தங்கல், திருவள்ளுவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பரஞ்சோதி. இவரது மகன் ரமேஷ். 16 வயதான ரமேஷ் திருத்தங்கல் அரசு ஆடவர் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார். திங்கள்கிழமையன்று பள்ளிக்கு வந்த ரமேஷ் கையில் கைக்கடிகாரம் கட்டியுள்ளார். இதைப் பார்த்த பிளஸ்டூ மாணவர்கள் சிலர் ஏன் கைக்கடிகாரம் கட்டி வந்தாய் என்று கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் கடிகாரத்தைக் கழற்றி தூக்கி கீழே போட்டு உடைத்துள்ளனர். இதை எதிர்த்து ரமேஷ் அவர்களுடன் சண்டைக்குப் போயுள்ளார். பின்னர் மற்ற மாணவர்கள் வந்து விலக்கி விட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு ரமேஷ், திருத்தங்கல் ரயில் நிலையம் அருகே நடந்து போய்க் கொண்டிருந்தபோது 15 மாணவர்கள் சேர்ந்து வந்து ரமேஷை மடக்கியுள்ளனர். பின்னர் அனைவரும் சேர்ந்து ரமேஷை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் ரமேஷ் நிலை குலைந்தார். இந்த நிலையில் திடீரென கத்தியை எடுத்து ரமேஷின் மணிக்கட்டை வெட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் அவர்களிடமிருந்து கடுமையாக போராடி தப்பி ஓடி வந்தார். பின்னர் தனியார் மருத்துவமனை ஒன்றில் முதலுதவி எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் வீடு திரும்பிய அவரை குடும்பத்தினர் சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று சேர்த்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியில் தீண்டாமைக் கொடுமை மாணவர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் உள்ளதாகவும், இதுதொடர்பாக அடிக்கடி அங்கு மோதல்கள் மூண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் செருப்பு போடக் கூடாது, கடிகாரம் கட்டக் கூடாது என்று பல வகையிலும் மற்ற சமூக மாணவர்களால் துண்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன. அடிக்கடி இதுதொடர்பாக ஏற்படும் மோதல்களை மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் தலையிட்டு அமைதிக் கூட்டம் நடத்தி கட்டுப்படுத்தி வருகிறார்களாம். ரமேஷ் தாக்குதல் குறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக