செவ்வாய், 23 செப்டம்பர், 2014

அகதிகள் முகாமிலும் தங்கி இருந்து அருண் செல்வராசன் வேவு பார்த்தான் !

தூத்துக்குடி: எட்டயபுரம் இலங்கை அகதிகள் முகாமில் பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசன் தங்கியிருந்து தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் 3 இடங்களில் வேவு பார்த்து ரகசிய தகவல்கள் சேகரித்தது என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்காக தமிழகத்தில் உளவு பார்த்த இலங்கையை சேர்ந்த அருண் செல்வராசனை தேசிய புலனாய்வு துறையினர்(என்ஐஏ) சமீபத்தில் சென்னையில் கைது செய்தனர். இலங்கையில் இருந்து வந்த இவர், சாலிகிராமத்தில் குடியேறி, பல விஐபிகளுடன் தொடர்பு ஏற்படுத்தியிருக்கிறார். பின்னர், இதை பயன்படுத்தி உளவு வேலைகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், என்ஐஏ அதிகாரிகள் கடந்த வாரம், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாப்பாத்தியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமில் ரகசியமாக விசாரணை நடத்தியுள்ளனர். சென்னை மற்றும் ஐதராபாத்தில் இருந்து வந்த இரு என்ஐஏ அதிகாரிகள் இங்கு வந்து இலங்கை தமிழர்களிடம் விசாரித்தனர். அவர்களை தொடர்ந்து மேலும் 4 அதிகாரிகள், முகாம் அதிகாரிகளுக்கே தெரியாமல் விசாரணை நடத்தியுள்ளனர். அருண் செல்வராசன் பயன்படுத்திய செல்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை நடந்துள்ளது.அருண் செல்வராசன் கடந்த ஜூலையில் இந்த முகாமுக்கு வந்து, இப்பகுதியைச் சேர்ந்த ‘திடீர் தொழிலதிபர்’ ஒருவர் வாங்கிக் கொடுத்த சிம்கார்டை பயன்படுத்தியுள்ளார். பின்னர் அதனை அவரிடமே கொடுத்துவிட்டு அடுத்த முறை வரும்போது பயன்படுத்திக் கொள்வதாக கூறி சென்றுள்ளார்.

கடந்த 6ம் தேதி தூத்துக்குடி போலீசாருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தப்பாத்தி முகாமை சேர்ந்த விஜய பிரபாகரன் (23) என்ற லாரி கிளீனர் கைது செய்யப்பட்டார். அவருடனும் அருண் செல்வராசன் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இங்கு வந்திருந்தபோது விஜய பிரபாகரனிடம் சில வேலை கொடுத்ததுடன், பைக் திருட்டில் வல்லவரான அவரை ஒரு தூதுவன் போல பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. மேலும், அருண் உத்தரவுப்படி விஜய பிரபாகரன் சில இடங்களுக்கு திருட்டு பைக்கில் சென்று பணம் கொடுத்தும், பெற்றும் வந்துள்ளதையும் என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் விஜய பிரபாகரன் பயன்படுத்திய செல் நம்பர்கள் குறித்தும் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவை தவிர தாப்பாத்தி முகாமில் அதிகாரிகள் துணையுடன் சட்டவிரோத செயல்கள் நடந்து வருவதும், அதனால் அருண் செல்வராசன் வந்து சென்றதை அவர்கள் பொருட்படுத்தவில்லை என்பதும் விசாரணையில் தெரிந்துள்ளது. தாப்பாத்தி முகாமில் 3 நாட்கள் தங்கியிருந்த அருண் செல்வராசன், சில தகவல்களை சேகரிக்க பணத்தை தண்ணீராக வாரி இறைத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கடல்பகுதி, சூரங்குடியில் உள்ள கடற்கரையில் உள்ள ஒரு சிவன்கோயில் மற்றும் அதனையொட்டியுள்ள ஆழமான கடற்பகுதி மற்றும் பழைய துறைமுகமான கொற்கை ஆகிய பகுதிகள் குறித்து தகவல்களை திரட்டியுள்ளார். இதற்காக அவர் முகாமிலுள்ளவர்களை பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த 3 பகுதிகள் குறித்து அவர் எதற்காக தகவல்கள் திரட்டினார்? வேறு உளவாளிகள் யாரேனும் எளிதாக ஊடுருவ வசதியாக இருக்கும் என்பதற்காக தகவல்கள் சேகரித்து அனுப்பினாரா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
/tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக