திங்கள், 8 செப்டம்பர், 2014

அமெரிக்கா அதிரடி திட்டம்: ஐ.எஸ்.திவிரவாதிகள் மீது உச்சகட்ட தாக்குதல்

சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும். ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.


இதன் முதல்கட்டமாக சிரியாவின் எல்லையோரம் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய இவர்கள் அங்கிருக்கும் கிருஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை ஊரை விட்டு அடித்து விரட்டி விட்டு இஸ்லாமிய அரசை அமைத்துள்ளதாக அறிவித்தனர்.

சிரியாவின் ரக்கா நகரை ஏற்கனவே கைப்பற்றி தங்களது தலைமை பீடமாக அமைத்துக் கொண்டு, வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் பல பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இதன் அடுத்தகட்டமாக, அலெப்போ மாகாணத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டர்க்மென், பரே, அக்தரின் ஆகிய நகரங்களையும் அவற்றை ஒட்டியுள்ள சில கிராமங்களையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

அப்பகுதிகளில் வாழ்ந்த மக்களை வெளியேற்றியும், மதம் மாற மறுத்த மக்களை துப்பாக்கிகளா சுட்டும், தலையை துண்டித்தும் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றனர்.

ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் பகுதிகள் மற்றும் அவர்களின் மறைவிடங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றது. இதற்கு பழி வாங்கும் நோக்கில் சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த இரு பத்திரிகையாளர்களின் தலையை துண்டித்து ஐ.எஸ்.தீவிரவாதிகள் படுகொலை செய்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ளது.

இந்த சூழ்நிலையில் ஈராக் மற்றும் சிரியாவில் பேராதிக்கம் செலுத்தும் ஐ.எஸ்.திவிரவாதிகள் மீது உச்சகட்ட தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு வரும் புதன்கிழமை விரிவான விளக்கம் அளிக்கவும் ஒபாமா முடிவு செய்துள்ளார்.

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எந்தெந்த நாடுகளில் எல்லாம் தீவிரவாதக் குழுக்கள் உள்ளனவோ, அந்நாடுகளை ஆக்க்கிரமித்து விடலாம் என்று அமெரிக்கா எண்ணவில்லை. ஆனால், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் அரசுக்கு துணையாக நிற்பது நமக்கு முன் இருக்கும் மிகப்பெரிய கடமையாக பார்க்க வேண்டியுள்ளது.

வரும் மாதங்களில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை முறியடித்து, முனை மழுங்கிப் போகச் செய்வதுடன், அவர்களின் பலத்தை குறைத்து, அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை மீட்போம் என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக