வியாழன், 4 செப்டம்பர், 2014

கட்ட பஞ்சாயத்து' : எதிர்த்த சிறுமி கற்பழிக்கப்பட்டு படுகொலை ! மேற்கு வங்கத்தில் கொடூரம் !

கோல்கட்டா: மேற்கு வங்க கிராமம் ஒன்றில், பஞ்சாயத்தார் உத்தரவை மதிக்காத, 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, 13 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேற்கு வங்கத்தின், துப்குரி என்ற கிராமத்தில், விவசாயி ஒருவர், டிராக்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தார். வாடகை கொடுப்பதில் தகராறு ஏற்படவே, டிராக்டர் உரிமையாளருக்கும், விவசாயிக்கும் மோதல் ஏற்பட்டது.இந்த விவகாரம் கிராம பஞ்சாயத்துக்கு சென்றது. வாடகை கொடுக்க மறுத்த விவசாயியை, ஆளும் கட்சியை சேர்ந்த பெண் பஞ்சாயத்து தலைவி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அடித்துள்ளனர். அதை பார்த்த அந்த விவசாயியின், 15 வயது மகள், ஓடிச் சென்று தடுக்க முயன்றுள்ளார்.அந்தச் சிறுமியை தடுத்த கும்பல், தங்களை தாக்கியதாக சிறுமி மீது பொய் புகார் கூறி, அதற்காக, தங்களின் எச்சிலை நக்குமாறு, அந்த சிறுமியை நிர்ப்பந்தித்துள்ளது. அந்த தண்டனையை சிறுமி ஏற்கவில்லை; பஞ்சாயத்து கலைந்தது.மறுநாள் காலையில், அந்தச் சிறுமி யின் உடல், அருகில் உள்ள ரயில் பாதையில் சிதைந்து கிடந்தது.
உடலில் ஆடை இல்லாமல், நிர்வாணமாக இருந்ததை கண்ட சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். பஞ்சாயத்து தலைவியின் கணவர் உட்பட, 13 பேர் மீது அளிக்கப்பட்டுள்ள புகாரில், தங்களின் மகளை, கற்பழித்து படுகொலை செய்து, ரயில் தண்டவாளத்தில் போட்டு, ரயில் மோதி இறந்ததாக ஜோடிக்க முயற்சி நடந்ததாக, சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள பஞ்சாயத்து தலைவியின் கணவர் உட்பட அனைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக