வெள்ளி, 12 செப்டம்பர், 2014

தமிழகத்தில் பயங்கர தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ., சதி திட்டம்:கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் வாக்குமூலம்

ஐ.எஸ்.ஐ., எனப்படும், பாக்., உளவு அமைப்பு ஆதரவுடன், இலங்கையில் தளம் அமைத்து செயல்படும் பாக்., பயங்கரவாத அமைப்பு, தமிழகத்தில் தாக்குதல் நடத்தும் சதி திட்டத்தை, அரங்கேற்ற இருப்பதாக, கைது செய்யப்பட்டுள்ள, பாக்., உளவாளி, 'பகீர்' வாக்குமூலம் அளித்து உள்ளான்.
பாக்., பயங்கரவாதிகள், நம் நாட்டில், நாசவேலையை அரங்கேற்ற, பல்வேறு வழிகளில் சதி திட்டம் தீட்டி வருகின்றனர். அதற்காக, சென்னை, மும்பை, டில்லி, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில், உளவாளிகளை ஊடுருவச் செய்துள்ளதாக, அவ்வப்போது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.அடுத்தடுத்து கைது:இந்த உளவாளிகள், தமிழகத்தில் ஊடுருவி இருப்பது பற்றி, கடந்த 2012ல், 'க்யூ' பிரிவு போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு (என்.ஐ.ஏ.,) ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, திருச்சி விமான நிலையம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மனோகரா சுற்றுலாத் தலம், தஞ்சை, விமான படைத்தளம் உள்ளிட்டவற்றை, ரகசியமாக படம் பிடித்து, இலங்கையில் உள்ள, பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அதிகாரிகளுக்கு அனுப்பிய, தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த தமீம் அன்சாரியை, தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.
அதையடுத்து, சென்னை மண்ணடியில், மருந்து மற்றும் துணி வியாபாரி போல் பதுங்கி இருந்த, இலங்கை கண்டியை சேர்ந்த, பாக்., உளவாளி, ஜாகீர் உசேனை, 37, 'க்யூ' பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மலைப்பு:அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, ஆவணங்களை பார்த்து, போலீசார் மலைத்துப் போயினர்.சென்னை விமான நிலையத்தில் இருந்து, எத்தனை நிமிடத்தில், அமெரிக்க துணை துாதரகத்தை வந்தடையலாம் என்பது பற்றிய, துல்லியமான கணிப்புகள் அவனிடம் இருந்துள்ளன. தொடர்ந்து, சென்னை தி.நகரில் பதுங்கி இருந்த, அப்துல் சலீம், ரபீக், ராமாபுரத்தில் இருந்த சிவபாலன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் ஒருவர் கைது:இந்நிலையில், சென்னை சாலிகிராமம், கே.கே.சாலையில், அறை எடுத்து பதுங்கி இருந்த, இலங்கைத் தமிழரான, அருண் செல்வராஜ், 26, என்பவரை, தேசிய புலனாய்வு அமைப்பினர், நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.தேசிய புலனாய்வு அமைப்பினரிடம், அருண் செல்வராஜ் அளித்துள்ள வாக்குமூலம்:இலங்கை தலைநகர், கொழும்பில் உள்ள, பாக்., துணை துாதரக அதிகாரிகள் அமீர் சுபேர் சித்திக், பாஸ் என்ற ஷா ஆகியோர் தான், எங்களை வழி நடத்தினர்.ஜாகீர் உசேன் கைதுக்கு பின், நிலைமை அப்படியே தலைகீழாகி விட்டது. சங்கேத மொழியில், யார், யாரோ தொடர்பு கொள்வார்கள். அவர்களை, நாங்கள் நேரடியாக பார்த்தது இல்லை.
தமீம் அன்சாரி கைது செய்யப்படுவதற்கு முன்பே, தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள், சுற்றுலா தலங்கள், ராணுவ பகுதிகள், ஊடுருவும் விதம், தப்பிப்பது எப்படி என்பது குறித்த தகவல்கள் அனைத்தும், பாக்., உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., வசம் போய் சேர்ந்து விட்டது.நான், ஜாகீர் உசேன், சிவபாலன் உள்ளிட்டோர் அனுப்பிய தகவல்கள் அனைத்தும், கூடுதல் தகவல்களே. தமிழகத்தை தகர்க்கும் சதி திட்டம், ஐ.எஸ்.ஐ.,யிடம் தயார் நிலையில் உள்ளது.எப்போது வேண்டுமானாலும், அவர்கள், சதி திட்டத்தை அரங்கேற்றலாம். என்னைப் போல், இன்னும் பலர் ஊடுருவி உள்ளனர். அவர்களை எளிதில் கண்டுபிடிக்க இயலாது.
எங்களுக்கு, எங்கிருந்து பணம் வருகிறது என்பதே தெரியாது. கட்டளையிடுவார்கள்; பணிகளை நிறைவேற்றுவோம்.முதலில், விமானம் ஓட்டும் பயிற்சி பள்ளியில் சேர்ந்தேன். அதன்பின், யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க, 'ஐஸ் ஈவென்ட்' என்ற மக்கள் தொடர்பு அலுவலகத்தை துவங்கினேன்.அதன் மூலம், என்.எஸ்.ஜி., கமாண்டோ தளம், கடலோர காவல் படை அலுவலகம், சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி அலுவலகத்திற்கு சென்று ரகசிய தகவல்களை சேகரித்து, இணையதளம் மூலம், இலங்கையில் உள்ள பாக்., துாதரக அதிகாரிகளுக்கு, அனுப்பி வைத்தேன்.
தாக்குதல் எங்கே?:துாதரக அதிகாரிகள் அமீர் சுபேர் சித்திக், பாஸ் என்ற ஷா ஆகியோரின் பெயர்கள், வெளியில் தெரிந்து விட்டதால், சாந்தோ என்பவர் மூலம், ரகசிய தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.தாக்குதல் பட்டியலில், தஞ்சை பெரிய கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பிரபல கோவில்களும், சென்னையில் உள்ள துணை துாதரகம், விமான நிலையங்கள், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் துணை துாதரகம் இடம் பெற்றுள்ளன.மேலும், சென்னை கோட்டைக்குள் எப்படி ஊடுருவுவது என்பது பற்றி, நாங்களே நேரடியாக சென்று முன்னோட்டம் பார்த்துள்ளோம்.இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்.
காவல் நீட்டிப்பு:ஏற்கனவே கைது செய்யப்பட்ட, ஜாகீர் உசேன், சிவபாலன், அப்துல் சலீம், ரபீக் ஆகியோரை, தேசிய புலனாய்வு அமைப்பினர், நேற்று காலை, பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை, வரும் 25ம் தேதி வரை, காவல் நீட்டிப்பு செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.நேற்று மாலை, அருண் செல்வராஜ், நீதிபதி மோனி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரையும், 25ம் தேதி வரை, கோர்ட் காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.
- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக