புதன், 24 செப்டம்பர், 2014

20 ஆண்டுகளாக துப்பரவு பணியாளர்கள் சம்பளம் வெறும் 100 ரூபாய் மாத்திரமே ! ம்ம்ம் மங்கல்யான் செவ்வாயை தொடுகிறது !

அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு, மாதத்திற்கு வெறும், 100 ரூபாய் மட்டுமே, தமிழக அரசு சம்பளம் வழங்கி வருகிறது. 'கடைநிலை ஊழியர்களின் பிரச்னையை, தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது' என, துப்புரவு பணியாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த, 1990களுக்கு முன் வரை, கல்வித்துறை, உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. வட்டார வளர்ச்சி அலுவலகம் (பி.டி.ஓ.,) மூலம் தான், ஆசிரியர்கள் சம்பளம் பெற்றனர். கல்வித்துறை, தனியாக உருவாக்கப்பட்ட பின், கல்வித்துறை அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர் அனைவரும், கல்வித்துறையின் கீழ் சேர்க்கப்பட்டனர். ஆனால், பள்ளிகளில், துப்புரவு வேலை பார்த்த பணியாளர்களை மட்டும், கல்வித்துறை கீழ் கொண்டுவராமல் விட்டு விட்டனர்.இதனால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்போதும், வெறும், 100 ரூபாய் சம்பளம் பெறும் அவலத்தில், துப்புரவு பணியாளர்கள் இருக்கின்றனர்.   சம்பளத்தை உயர்த்துவது மட்டும் போதாது...கட்டாயம் இந்த உயர்வு 20 ஆண்டு காலம் முன்தேதி இட்டு,,,அதற்கான வட்டியும் முதலுமாக சேர்த்து சில பல லகரங்களை இத்தனை ஆண்டு காலம் பொறுமையோடு இந்த கொடுமைகளை அனுபவித்தவர்களுக்கு உடனே வழங்கப்பட வேண்டும்??? ஆசிரியர், தலைமை ஆசிரியர்,டி இ ஒ , சீ இ ஒ ,தாசில்தார்,கலெக்டர், கவுன்சிலர், எம் எல் எ , எம் பீ....தோளான் துருத்தி ஒருத்தருக்குமா இவர்கள் நிலை இதுவரை தெரியவில்லை.... ஏழைகள் என்றால் என்ன அவ்வளவு இளப்பமா???
திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட வட மாவட்டங்களில் உள்ள, அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், கணிசமான எண்ணிக்கையில், துப்புரவு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான சம்பளம், தொடக்க கல்வித்துறையில் இருந்து, ஊரக வளர்ச்சித் துறையிடம் வழங்கப்படுகிறது. பின், பி.டி.ஓ., அலுவலகத்திற்கு சென்று, கடைசியில், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மூலமாக, துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள துப்புரவு பணியாளர்எண்ணிக்கை குறித்த விவரம், கல்வித்துறையிடம் இல்லை. இவர்களின் பிரச்னையை தீர்க்க, ஊரக வளர்ச்சித் துறையோ, கல்வித்துறையோ, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.பள்ளி கல்வித்துறை கீழ் இயங்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், முறையான சம்பளம் பெறுகின்றனர்.தொடக்க கல்வித்துறை கீழ் பணிபுரியும் பணி புரியும் துப்புரவு பணியாளர்களில், ஒரு தரப்பினர், 1,000 ரூபாய் சம்பளம் பெறுகின்றனர்.இந்த முரண்பாடுகள் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்க, இதுவரை, தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது, தொழிலாளர்களிடம், குமுறலை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஜெ., தலையிட்டால் மட்டுமே, பிரச்னை தீரும் என, துப்புரவு தொழிலாளர்கள் நம்புகின்றனர்.

இதுகுறித்து, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, சில தொழிலாளர்கள் கூறியதாவது: 'அரசின் எந்த துறையிலும், மூன்று ஆண்டுகள், தினக்கூலி அடிப்படையிலோ, தொகுப்பூதிய அடிப்படையிலோ பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை, பணிவரன் முறை செய்து, முறையான சம்பளம் வழங்கலாம்' என, கடந்த, 2010, அக்டோபர், 1ம் தேதி, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது.இந்த அரசாணையின் பலன், இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. தொடக்க கல்வித்துறை, மாநிலம் முழுவதும், முறையான சம்பளம் இல்லாமல் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து, எங்களை, கல்வித்துறைக்கு மாற்றவும், பின், முறையான சம்பளம் நிர்ணயிக்கவும்,நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் தலையிட்டால், எங்களது பிரச்னை தீரும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக