திங்கள், 25 ஆகஸ்ட், 2014

சென்னை பழைய கார் பவனி Vintage Cars' Exhibition In Chennai


சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாரம்பரிய கார்கள் கண்காட்சியில் இடம் பெற்ற எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் ஆகியோர் பயன்படுத்திய கார்கள். கண்காட்சியைக் காண வந்த பார்வையாளர்களில் ஒரு பகுதியினர்." சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாரம்பரிய கார்கள் கண்காட்சியில் இடம் பெற்ற எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் ஆகியோர் பயன்படுத்திய கார்கள். கண்காட்சியைக் காண வந்த பார்வையாளர்களில் ஒரு பகுதியினர். பாரம்பரிய கார்கள் அணிவகுப்பு, கண்காட்சி சென்னை எழும்பூர் டான் போஸ்கோ பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியில் இடம் பெற்றிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நடிகர் ஜெமினி கணேசன் கார்களின் முன்பு பார்வையாளர்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சென்னை பாரம்பரிய மோட்டார் சங்கம், மை டிவிஎஸ் சார்பில் 10-ஆவது ஆண்டு பாரம்பரிய கார்கள் கண்காட்சி, பேரணி, எழும்பூர் டான்போஸ்கோ பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் தாசரி இதனைத் தொடங்கி வைத்தார்.

130-க்கும் மேற்பட்ட கார்கள்: இந்தக் கண்காட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கருப்பு நிற தாஜ் கிங்ஸ்வே கார், அன்பே வா படத்தில் அவர் பயன்படுத்திய ஸ்டுடிபேக்கர் கார், டி.வி.எஸ்.சுந்தரம் ஐயங்கார் பயன்படுத்திய செவர்லே மாஸ்டர் (1933), நடிகர் ஜெமினி கணேசன் பயன்படுத்திய ஃபோர்டு பர்ஃபெக்ட்(1957), ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், எஸ்.எஸ்.வாசன் ஆகியோர் பயன்படுத்திய வாக்ஸ் ஹால் (1957) உள்பட 130-க்கும் மேற்பட்ட கார்கள், பழைய மோட்டார் சைக்கிள்கள் இடம் பெற்றிருந்தன. கடந்த 1980-ஆம் ஆண்டுகளில் புழக்கத்திலிருந்த ஆம்புலன்ஸ் ஒன்றும் காட்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மேலும் கடந்த 1926-ஆம் ஆண்டு முதல் 1976-ஆம் ஆண்டு வரை தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களால் பயன்படுத்தப்பட்ட கார்கள் தற்போது அவற்றின் உரிமையாளர்களால் நன்கு பராமரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
கடும் போட்டி: விடுமுறைநாள் என்பதோடு, அனுமதியும் இலவசம் என்பதால் கண்காட்சியைக் காண குழந்தைகள், பெரியவர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இந்தக் கண்காட்சி சில மணி நேரமே நடைபெற்றதால் தங்களைக் கவர்ந்த கார்களின் முன்பு புகைப்படம் எடுத்துக் கொள்வதில் பார்வையாளர்களிடையே கடும் போட்டி நிலவியது.
கண்காட்சியில் இடம்பெற்றிருந்த ஆஸ்டின் ரூபி, ஆஸ்டின் 7 ஆகிய கார்களின் உரிமையாளர் அமித் கோயல் கூறியது: என்னைப் பொருத்தவரை கார்கள் குடும்பத்தின் ஒரு அங்கம் போன்றவை. அதனால் கூடுதல் கவனம் செலுத்தி கார்களை சிறந்த முறையில் பராமரித்து வருகிறேன். கார்களுக்குத் தேவையான அசல் உதிரிப் பாகங்கள் எளிதில் கிடைக்கவில்லை. மிகுந்த சிரமத்திற்கு பிறகு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து கார்களில் பொருத்தினேன் என்றார்.
சிறந்த கார்களுக்குப் பரிசு: சென்னை அடையாறைச் சேர்ந்த தொழிலதிபர் டி.ஏ.எஸ்.ஜெயராமய்யா இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எம்.ஜி.டி.எல். (1947) என்ற காரை கண்காட்சியில் வைத்திருந்தார்.
அதிகாலை நேரத்தில் காற்று வாங்க தினமும் இந்த காரில்தான் 4 கிலோ மீட்டர் வரை சென்று வருகிறேன். தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 8 முதல் 10 கிலோ மீட்டர் வரை செல்ல முடிகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.5 லட்சத்துக்கு வாங்கப்பட்ட இந்தக் கார் தற்போது ரூ.70 லட்சம் மதிப்புள்ளது என்றார் ஜெயராமய்யா.
பிற்பகலில் நடத்தப்பட்டப் போட்டியில் கார்களின் சொகுசு, பராமரிப்பு, அசல் தன்மை உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கார்களின் உரிமையாளர்கள், வடிவமைத்த பொறியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக