வியாழன், 21 ஆகஸ்ட், 2014

பா.ஜ க முதல்வர் வேட்பாளர் ரஜினி ? லிங்கா இனி நல்ல விலைக்கு போகும் !

நடிகர் ரஜினிகாந்துடன் பா.ஜ., அகில இந்திய தலைவர், அமித் ஷா, போனில் தொடர்பு கொண்டு பேசிய தகவல், வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகி இருக்கிறது.நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகவிருக்கும், 'லிங்கா' படத்தின் சூட்டிங், கர்நாடகாவில் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக, கர்நாடகாவில் தங்கியிருக்கும் நடிகர் ரஜினிகாந்தை, இரண்டு வாரத்துக்கு முன், பா.ஜ., தலைவர் அமித் ஷா, போனில் தொடர்பு கொண்டு பேசினார்.அதன் தொடர்ச்சியாக, நடிகர் ரஜினியை முன் வைத்து, பல்வேறு விதமான செய்திகள், அரசியல் அரங்கில் பேசப்படுகின்றன.  சும்மா ஜாலியாக இருந்த ரஜினிக்கு  இனிமேல் பிரச்சனை ஆரம்பம்.விஜய்க்கு நடந்தது என்னவோ அது ரஜினிக்கும் நடக்கும் ஆடி மாசம் முடிஞ்சி ஆவணி மாசத்தில இந்த செய்தி வந்து இருக்குறதால அமித்சா நல்லா வருவாருங்கோ...
தமிழக பா.ஜ.,வை, அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கு தயார்படுத்தும் பணியில், அமித் ஷா, தீவிரமாக இருக்கிறார். அதனால் தான், தமிழகத் தலைவராக இருந்த, பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சராக்கப்பட்டதும், புதிய தலைவராக, தமிழிசை சவுந்திரராஜன் அறிவிக்கப்பட்டார்.இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்தையும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக களமிறக்கி, அவரை வைத்து, தமிழகத்தில், ஆட்சி அதிகாரத்தை பிடிக்க, பா.ஜ., தலைவர்கள் முயற்சிக்கின்றனர். அதற்காக, நடிகர் ரஜினியை பா.ஜ., தரப்பில், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் திட்டமிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆட்சியை பிடிக்க...:

இதுகுறித்து, அரசியல் வட்டாரங்களில் கூறப்படுவதாவது: லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., தலைமையில், வலுவான கூட்டணி அமைந்தது. ஆனால், இந்திய அளவில் பா.ஜ.,வுக்கு கிடைத்த வெற்றி, தமிழகத்தில் கிடைக்கவில்லை. பா.ஜ., கூட்டணி சார்பில் இருவர் மட்டுமே வெற்றிடைந்தனர். ஆனால், குறிப்பிட்டு சொல்லக் கூடிய அளவுக்கு, ஓட்டுகளைப் பெற்றனர். இதனால், சரியாக அரசியல் செய்தால், அடுத்து, தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியும் என்கிற நம்பிக்கை, பா.ஜ., தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.அதற்காக, பல வழிகளிலும் அவர்கள் திட்டமிட்டு பணியாற்ற ஆரம்பித்திருக்கின்றனர். அதன் ஒரு வழி தான், நடிகர் ரஜினிகாந்தை பா.ஜ.,வுக்கு அழைத்து வரும் திட்டம். அடுத்ததாக அவரை, பா.ஜ., முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் திட்டம் இருக்கிறது.அந்த அடிப்படையில் தான், அமித் ஷா, சமீபத்தில், நடிகர் ரஜினிகாந்திடம் பேசியிருக்கிறார். அப்போது, பா.ஜ.,வின் எண்ணங்களை அவர், தெள்ளத் தெளிவாக, ரஜினியிடம் சொல்லி, ஒப்புதல் பெற்று விட்டதாக கூறுகின்றனர். அதற்கேற்றவாறு, நடிகர் ரஜினியும், கர்நாடகாவில், சமீபத்தில் நிருபர்களை சந்தித்தபோது, அரசியலில் இறங்குவது குறித்து பேசியிருக்கிறார். 'நீங்கள் அரசியலில் களமிறங்கி, தமிழக முதல்வர் ஆவீர்களா?' என, நிருபர்கள் கேட்டதும், 'மக்கள் மனசு வைத்தால், அது நடக்கும்' என, சொல்லி சந்தோஷப்பட்டிருக்கிறார்.வழக்கமாக, இப்படிப்பட்ட கேள்விகள் எழும்போது, 'ஆண்டவன் மனசு வைத்தால், நடக்கும்' என்பது தான், ரஜினியின் பதிலாக இருக்கும்.இம்முறை மாற்றி, மக்களை குறிப்பிட்டு சொன்னதற்கான காரணம், ரஜினி, அமித் ஷா பேச்சு, என்கின்றனர்.இதற்கிடையில், 'லிங்கா' படத்தில், அரசியல் சம்பந்தப்பட்ட 'பஞ்ச்' வசனங்கள் இடம்பெற, ரஜினி விருப்பம் தெரிவித்திருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் செயல்பாடுகளை, ஜாதியின் பெயரால் தடுக்கக் கூடாது; ஜாதியை வைத்து சமூகத்தை பிளக்கக் கூடாது; நாட்டின் வளர்ச்சியை தடுக்கக் கூடாது என்பது போன்ற, அரசியல் வசனங்கள் இடம்பெறுகிறது. இது எல்லாமே, பிரதமர் மோடியை வைத்து எழுதப்பட்ட வசனங்கள்.

வரவேற்போம்:

இதுதவிர, இன்றைய அரசியலின் யதார்த்தங்களை சொல்லும், அதிரடி வசனங்கள் படம் முழுக்க இடம் பெறுகிறது.'லிங்கா' படம் வெளியாகி, பரபரப்பாக ஓட ஆரம்பிக்கும் நிலையில், ரஜினி, அரசியலில் களமிறங்க திட்டமிட்டிருக்கிறார். அதேபோல, நடிகை குஷ்புவையும், பா.ஜ., பக்கம் அழைத்து வர, பேச்சு நடக்கிறது.இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர்.

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங் களில் கூறுகையில், 'ரஜினி போன்ற பிரபலங்கள், தமிழகபா.ஜ.,வுக்கு எப்போது வந்தாலும், அவர்களை வரவேற்போம். தமிழகத்தில் பா.ஜ.,வை ஆட்சிப் பொறுப்புக்கு கொண்டு வரும் வகையில், நிறைய முயற்சிகள்எடுக்கப்படுகின்றன. அதில், ரஜினியும் ஒருவர்' என்றனர்.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக