திங்கள், 11 ஆகஸ்ட், 2014

திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம் நிகழ்ச்சி

திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம், பேரம்பாக்கம் அரிமா சங்கம், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளின் கூட்டமைப்பு அறக்கட்டளை உள்ளிட்ட 8 தொண்டு நிறுவனங்கள் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம் வரம் நிகழ்ச்சியை நடத்தியது.
ஐ.ஆர்.சி.டி.எஸ். நிறுவனர் டைட்டஸ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சையத் ரவூப், பூந்தமல்லி எம்.எல்.ஏ. மணிமாறன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவ ராவ், வேணுகோபால் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 45 வயதுக்கு உள்பட்ட ஆண் மாற்றுத் திறனாளிகள், 40 வயதுக்கு உள்பட்ட பெண் மாற்றுத்திறனாளிகள் சுமார் 800–க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் பெருமாபாலானோர் தனியார் நிறுவனங்களில் பணி செய்யும் பட்டதாரிகள் ஆவர். மாற்றுத் திறனாளி பெண்கள் பட்டுச் சேலை, உடுத்தி மணப்பெண் போல் உற்சாகமாக வந்து இருந்தனர். மாற்றுத்திறனாளி ஆண்களும் தங்கள் துணையை தேர்வு செய்யும் மகிழ்ச்சியில் இருந்தனர். இதனால் திருமண மண்டமே கலகலப்பாக காணப் பட்டது.
வருங்கால வாழ்க்கை துணை குறித்து மாற்றுத் திறனாளிகள் கண்ணீர் மல்க பேசியது அனைவரையும் கண் கலங்க வைத்தது. மொத்தம் 22 ஜோடிகள் தங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்தனர். அங்கேயே இரு வீட்டாரும் திருமணம் நிச்சயம் செய்து கொண்டனர். மேலும் 19 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு இரு வீட்டாரும் கலந்து பேசி வருகிறார்கள்.
துணையை தேர்ந்தெடுத்து இரு வீட்டார் சம்மதம் கிடைத்ததும் புதுமண ஜோடிகள் ஆனந்த கண்ணீர் விட்டு எதிர்கால வாழ்க்கை குறித்து ஒருவருக்கொருவர் அன்பாக பேசிக் கொண்டு இருந்தனர். இதனை கண்ட பார்வையாளர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
சுயம்வரம் நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டியை அடுத்த காரணியை சேர்ந்த தேவிகா கலந்து கொண்டு, திருவள்ளூர் அருகே உள்ள வடமதுரை கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தனசேகரை வாழ்க்கை துணையாக தேர்வு செய்தார்.
பின்னர் தேவிகா கண்ணர் மல்க கூறியதாவது:–
நான் தனியார் செல்போன் ரிசார்ஜ் கடையில் வேலை பார்த்து வருகிறேன். எனது வேலைகளை நானே செய்கிறேன்.
கணவர், அவரது குடும்பத்தினர் விருப்பப்பட்டால் மீண்டும் வேலைக்கு செல்வேன். என்னை கணவர் மற்றும் குடும்பத்தினர் நல்ல படியாக பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். தனசேகர் கணவராக கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டமே. இதனால் எனது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிச்சயம் செய்யப்பட்ட ஜோடிகளுக்கு, நவம்பர் 6–ந் தேதி, சென்னை கீதா பவன் டிரஸ்ட் சார்பில் ராயப்பேட்டையில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது.
திருமணத்தின்போது 2 கிராம் தங்கத் தாலி, 51 வகையான சீர்வரிசைப் பொருட்கள், திருமண ஆடைகள், 2 மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் மற்றும் அரசு உதவித் தொகையான ரூ. 25 ஆயிரம், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ஆகியவை வழங்கப்படுகிறது.  maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக