வியாழன், 21 ஆகஸ்ட், 2014

பலாத்கார வழக்கிற்கு ஆண்மை பரிசோதனை அவசியம் ,நித்தி வழக்கில் நீதிமன்றம் ! சோதனை மேல் சோதனை ?

புதுடெல்லி : ஆண்மை சோதனைக்கு நித்யானந்தா தயங்குவது ஏன்? என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் பலாத்கார வழக்கில், குற்றவாளிகளுக்கு ஆண்மை சோதனை அவசியம் என கருத்து தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள தியானபீட ஆசிரமத்தின் மடாதிபதி நித்யானந்தா மீது பலாத்காரம் உட்பட பல வழக்குகள் பதிவாகியுள்ளது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தனக்கு ஆண்மை இல்லை என கூறியிருந்தார். அதை மறுத்த பிடதி போலீசார், நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த கோரி ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதையேற்று பரிசோதனைக்கு ஒத்துழைக்கும்படி நித்யானந்தாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.இதை எதிர்த்து நித்யானந்தா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடியானது.
இதனால் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு கடந்த 5ம் தேதி தடை பெற்றார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. ஆண்மை சோதனை நடத்த வலியுறுத்த கூடாது என நித்யானந்தா சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:பலாத்கார சம்பவங்கள் இப்போது அதிகரித்து வருவதால், இது போன்ற சோதனைகள் அவசியம். பலாத்கார குற்றவாளியை, ஆண்மை பரிசோதனைக்கு ஏன் உட்படுத்த கூடாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை.  2010ம் ஆண்டு பதிவு செய்த வழக்கில், இவ்வளவு காலமாக இந்த சோதனையை நடத்தாமல் போலீசார் காலம் தாழ்த்தியது ஏன்? ஆண்மை சோதனையை எந்த குற்றவாளியும் தவிர்க்க முடியாது. நீங்கள் ஏன் இந்த சோதனைக்கு பயப்படுகிறீர்கள். இந்த வழக்கு தாமதமாவதை அனுமதிக்க முடியாது. விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும்.இவ்வாறு உச்சநீதிமன்றம் கூறியது. இந்த உத்தரவையடுத்து நித்யானந்தாவுக்கு விரைவில் ஆண்மை சோதனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக