செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

1993- 2004, 2006- 2013 காலகட்டத்தில் செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என்றும், எனவே அந்த ஒதுக்கீடுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நிலக்கரி ஒதுக்கீடுகள் செய்த கண்காணிப்பு கமிட்டியின் செயல்பாடுகள் நியாயமாகவும், வெளிப்படையாகவும் இல்லை. வரையறுக்கப்பட்ட நெறிகள் ஏதும் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் பின்பற்றப்படவில்லை. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் சட்டவிரோதமானவை. எனவே, 1993- 2004, 2006- 2013 காலகட்டத்தில் செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட நிலக்கரி படுகைகளை வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்கலாம் எனவும் அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

வழக்கு பின்னணி:
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடைசியாக விசாரணைக்கு வந்தபோது, நிறுவனங்கள் செய்துள்ள பெரிய முதலீட்டை மட்டுமே கருத்தில் கொண்டு உரிமங்களை ரத்து செய்வதை தவிர்க்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் சட்டவிரோதமான அனைத்து ஒதுக்கீடுகளையும் ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சிபிஐ பதிந்த எப்.ஐ.ஆர்.,கள்:
ஏ.எம்.ஆர். அயர்ன் அண்ட் ஸ்டீல், ஜெ.எல்.டி. யவத்மால் எனர்ஜி, வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக், ஜே.ஏ.எஸ். இன்ப்ரா கேபிடல் பிரைவேட் லிமிடெட், விகாஷ் மெட்டல்ஸ், கிரேஸ் இண்டஸ்ட்ரீஸ், ககன் ஸ்பாஞ், புஷ்ப் ஸ்டீல், ஹிண்டால்கோ, பி.எல்.ஏ. இண்டஸ்ட்ரீஸ், கேட்ரான் டெக்னாலஜீஸ், கேஸ்ட்ரான் மைனிங் ஆகிய நிறுவனங்கள் முறைகேடாக நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு பெற்றதாக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக