புதன், 20 ஆகஸ்ட், 2014

தயாளு அம்மாளுக்கு நீதிமன்றம் ஜாமீன் ! வழக்கில் இருந்து விடுவிக்க மறுப்பு !

திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள்| கோப்புப் படம்.2ஜி வழக்கில் திமுக தலைவர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாளுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. எனினும், இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தயாளு அம்மாளின் ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஓ.பி.சைனி, "2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக அமலக்கப்பிரிவினர் தொடர்ந்த வழக்கில் தயாளு அம்மாளுக்கு இந்த நீதிமன்றம் ஜாமீன் வழங்குகிறது.
சொந்த ஜாமீனக்காக ரூ.5 லட்சம் பிணைத் தொகையை அவர் செலுத்த வேண்டும். இதே மதிப்பீட்டில் மேலும் இரண்டு பேர் தயாளு அம்மாளுக்காக உறுதித் தொகையை அளிக்க வேண்டும். இரண்டு நாட்களுக்குள், தயாளு அம்மாள் தரப்பு ஜாமீன் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்" என்றார்.
வழக்கில் இருந்து விடுவிப்பு கிடையாது:
வயோதிகம் காரணமாக ஞாபகசக்தி குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2ஜி வழக்கில் இருந்தே தன்னை விடுவிக்க வேண்டும் என்று தயாளு அம்மாள் மனு தாக்கல் செய்திருந்ததார். ஆனால், தயாளு அம்மாளுக்கு ஜாமீன் வழங்கியபோதும் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. தயாளு அம்மாளுக்கு 83 வயதாகிறது.
2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்படுமா அல்லது சிறையில் மீண்டும் அடைக்கப்படுவார்களா என்பது இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தெரியவரும்.
முன்னதாக, அமலாக்கப் பிரிவு தொடர்ந்துள்ள வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுக்கள் மீது, சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி இம்மனுக்கள் மீது ஆகஸ்ட் 7-ம் தேதியே தீர்ப்பு வழங்குவதாக இருந்தது.
இந்நிலையில், தீர்ப்பு நிறைய பக்கங்களுக்கு இருப்பதால், இன்னும் தயாராகவில்லை என்று கூறி, ஆகஸ்ட் 20-ஆம் தேதி (இன்றைக்கு) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று ஜாமீன் மனுக்கள் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. கருணாநிதி மனைவி தயாளு அம்மாளுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
வழக்கு பின்னணி:
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு உரிமம் வழக்கு தொடர்பாக, சட்ட விரோத பணப்புழக்கத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கப் பிரிவு சார்பில் தனியாக வழக்கு தொடரப்பட்டது.
இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள், அமிர்தம், கலைஞர் ‘டிவி’ முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்ட 10 பேர் மீதும், கலைஞர் ‘டிவி’, ஸ்வான் டெலிகாம், டிபி குழும நிறுவனம் உள்ளிட்ட ஒன்பது நிறுவனங்கள் மீதும் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், ஜாமீன் கோரி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக