ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

சேலத்தில் 144 தடை உத்தரவு ரத்து! அதிரடி தீர்ப்பு ! விடுதலைசிறுத்தைகளின் கல்வி உரிமை மாநாடு தடையில்லை !

சேலத்தில் 144 தடை உத்தரவு ரத்து :சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு சேலம் அடுத்த கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கல்வி உரிமை மாநில மாநாடு இன்று மாலை 4 மணிக்கு மேல் நடக்கிறது. இந்த மாநாட்டை நடத்துவதற்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் அனுமதி மறுத்து உத்தரவிட்டார். சுதந்திர தினம் முடிந்து உடனடியாக மாநாடு நடத்தப்படுவதால், உடனடியாக பாதுகாப்பு பணிக்கு போலீசாரை ஈடுபடுத்துவது கடினம் என்றும் காரணம் கூறப்பட்டது.
மாநாடு நடத்த போலீசார் அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சேலம் மாவட்ட செயலாளர் நாவரசன் ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாநாடு நடத்த அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து அனுமதி வழங்கிட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.

மனுக்களை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன், சில நிபந்தனைகளுடன் மாநாடு நடத்திட அனுமதி வழங்கினார். அதாவது, மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள், பஸ், வேன் போன்ற வாகனங்களில் மேல் கூரை இல்லாத திறந்த நிலை வாகனத்தில் பயணம் செய்யக்கூடாது. உருட்டுக்கட்டை, இரும்புக்கம்பி போன்ற ஆயுதங்களை எடுத்து செல்லக்கூடாது. தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. மாநாடு நடக்கும் இடம் அருகே உள்ள நீர்நிலைகளுக்கு சேதம் ஏற்படுத்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் கல்வி உரிமை மாநாட்டுக்கு மேடை அமைக்கும் பணி தொடங்கியது. ஆங்காங்கே கொடி, தோரணங்களும் கட்டப்பட்டன. இந்த நிலையில் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டு திடலுக்கு வரும் தொண்டர்கள் வாடகை வாகனங்கள் மற்றும் டிராக்டர், இருசக்கர வாகனங்களில் வருவதற்கு அனுமதி இல்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான ஆணையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலுக்கும் பிறப்பித்துள்ளார்.
 அதில், 144(1) மற்றும் 3 சி.ஆர்.பி.சி. பிரிவின் கீழ் நேற்று மாலை 6 மணி முதல் நாளை(திங்கட்கிழமை) காலை 6 மணி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த உத்தரவில், சுற்றுலா மோட்டார் வாகனம், ஆம்னிபஸ், வாடகை வாகனங்கள், அகில இந்திய சுற்றுலா அனுமதி பெற்ற வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்கள் ஆகியவற்றில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநாடு நடக்கும் திடலுக்கு நாற்காலிகள் மற்றும் இதர பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களும் தற்காலிகமாக சிறப்பு அனுமதி பெற்றிருக்க வேண்டும். மேலும் தொண்டர்கள் மாநாடு திடலுக்கு டிராக்டர், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாவில் வருவதற்கும் மாவட்டம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  மனுவை விசாரித்த நீதிபதி,  144 தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.  அவர் மேலும்,  வாகன கட்டுப்பாட்டையும் நீக்கினார்.nakkheeran.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக