திங்கள், 28 ஜூலை, 2014

Stem cell bank in chennai சென்னையில் "ஸ்டெம்செல்' சேமிப்பு வங்கி தொடக்கம்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பொது ஸ்டெம் செல் வங்கியைத் தொடங்கி வைத்த நடிகை ஐஸ்வர்யா ராய். உடன், லைஃப்செல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர் அபயா.
ஸ்டெம் செல் எனப்படும் மூல உயிரணுவைச் சேகரித்து பாதுகாக்கும் லைஃப்செல் நிறுவனத்தின், பொது ஸ்டெம் செல் சேமிப்பு வங்கியை, இந்த நிறுவனத்தின் தூதரும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
ரத்தப் புற்றுநோய், தலசீமியா, ஏபிளாஸ்ட்டி அனீமியா போன்ற ரத்த அணுக்கள் தொடர்பான பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் ஸ்டெம் செல் முக்கியப் பங்கு வகிக்கிறது. குழந்தை பிறந்த 10 நிமிஷத்துக்குள் அதன் தொப்புள் கொடியிலிருந்து ஸ்டெம் செல்லை எடுத்து அதனை பிரத்யேகமாக பாதுகாப்பதன் மூலம், எதிர்காலத்தில் அந்தக் குழந்தையோ, அதன் உறவினர்களோ ரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட ரத்த அணுக்கள் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட ஸ்டெம் செல்லைக் கொண்டு எளிதில் சிகிச்சை அளிக்க முடியும்.

இதனைக் கருத்தில் கொண்டு, இந்திய அளவில் கடந்த 10 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளிடமிருந்து பெறப்பட்ட ஒரு லட்சம் ஸ்டெம் செல் அலகுகளை (யூனிட்) லைப்ஃசெல் எனும் நிறுவனம் பிரத்யேகமாகப் பாதுகாத்து வருகிறது. இந்த நிறுவனத்தின் 10-ஆம் ஆண்டு நிறைவையொட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியில், தொப்புள்கொடி பொது ஸ்டெம் செல் வங்கியை பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், லைஃப்செல் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி வி.ரவிசங்கர் பேசியது:
இந்தியாவில் ஸ்டெம் செல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் முதல்கட்டமாக பல்வேறு மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பொது, தனியார் மகப்பேறு மருத்துவமனைகளில் ஸ்டெம் செல் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். இதன் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 10 ஆயிரம் ஸ்டெம் செல் அலகுகளைச் சேகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
ரத்த தானத்தைப் போன்று இது எளிதானது என்பதால் ஸ்டெம் செல்லை தானம் செய்ய நாம் அச்சப்படத் தேவையில்லை. விருப்பமுள்ள பெற்றோரிடமிருந்து நாங்கள் இதனை இலவசமாகப் பெறத் தயாராக உள்ளோம் என்றார்.
நடிகை ஐஸ்வர்யா ராய் கூறுகையில், நான் தாய்மை அடைந்தபோது ஸ்டெம் செல் தானம் தொடர்பாக லைஃப்செல் நிறுவனத்தினர் என்னை அணுகினர். எங்கள் உறவினர்கள், நண்பர்கள், மருத்துவர்களைக் கலந்தாலோசித்த பின்னர், தொப்புள்கொடி ஸ்டெம் செல்லை தானமாகத் தர முடிவு செய்தேன்.
இதன் மருத்துவ முக்கியத்துவத்தை உணர்ந்து ஒவ்வொரு பெற்றோரும் ஸ்டெம் செல்லை தானமாக தர முன்வர வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், லைஃப்செல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர் அபயா உள்ளிட்டோர் பங்கேற்றனர். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக