செவ்வாய், 8 ஜூலை, 2014

பட்ஜெட் : முதல் நாளே லோக்சபா ஒத்திவைப்பு ! விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளே, விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, லோக்சபாவில் நேற்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், நாள் முழுவதும் சபை ஒத்திவைக்கப்பட்டது.பட்ஜெட் கூட்டத்தொடருக்காக, பார்லிமென்ட் நேற்று கூடியது. சபை துவங்கியதும், ஆந்திரா எரிவாயு கசிவு விபத்து, சென்னை அடுக்குமாடி குடியிருப்பு விபத்து ஆகியவற்றில் பலியானவர்களுக்கு, அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, சபாநாயகர் சுமித்ரா மகாஜன், கேள்வி நேர அலுவல்களை துவங்க முயற்சித்தார். ஆனால், காங்., உள்ளிட்ட, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும், ஆவேசமாக எழுந்தனர்.'விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க, 'நோட்டீஸ்' கொடுக்கப்பட்டு உள்ளது. அதுகுறித்து விவாதிக்க வேண்டும். அதன்பின், மற்ற அலுவல்களை தொடரலாம்' என, அவர்கள் சபாநாயகரை வலியுறுத்தினர்.அவர்களின் கோரிக்கையை பொருட்படுத்தாமல், சபாநாயகர் கேள்வி நேரத்தை துவங்க முயன்றார். இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ரகளையை துவங்கினர். காங்கிரசை சேர்ந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா தலைமையில், இளம் எம்.பி.,க்கள் திரண்டனர். காங்கிரஸ் ஆட்சியின் போது இந்த எதிர்கட்சிகள் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டதை ஒப்பிட்டால் இது வெறும் ஜுஜுப்பீ 


காங்., எம்.பி.,க்களுடன், திரிணமுல் காங்., தேசிய வாத காங்., இடதுசாரிகள், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி போன்ற முக்கிய கட்சிகளின் எம்.பி.,க்கள், அணிவகுத்து, அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால், சபையில் கூச்சல் குழப்பம் அதிகமானது. சபாநாயகரின் இருக்கையை, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் முற்றுகையிட்டு, கடும் கோஷங்களை எழுப்பினர். அப்போது, அ.தி.மு.க., பிஜு ஜனதா தள எம்.பி.,க்கள் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

கூச்சலில் ஈடுபட்ட எம்.பி.,க்களிடம், ''பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளே, இப்படி நடக்க வேண்டாம்,'' என, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறினார். ஆனால், அது பலனளிக்கவில்லை. இதனால், சபை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும், 12:00 மணிக்கு சபை துவங்கியபோதும், ரகளை ஆரம்பமாகவே, மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு, உணவு இடைவேளைக்கு பின் கூடியது.
அப்போதும் அமைதி ஏற்படாமல் போகவே, வேறு வழியின்றி, நாள் முழுவதற்கும் சபை
ஒத்திவைக்கப்பட்டது. கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு, விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்துவதற்கு, அரசு தயாராகவே இருந்தது. இதற்காக, இரண்டரை மணி நேரம் ஒதுக்க திட்டமிடப்பட்டிருந்தது.எதிர்க்கட்சிகளோ, வெறும் விவாதமாக இல்லாமல், ஓட்டெடுப்புடன் கூடிய விவாதமாக இருக்க வேண்டுமென வலியுறுத்துகின்றன. இதை, அரசு தரப்பு ஏற்க மறுப்பதே, முட்டுக்கட்டைக்கு காரணம்.

இன்று காலையில், கேள்வி நேரம் முடிந்ததும், ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள், தங்களின் கோரிக்கையில் இருந்து, பின்வாங்குமா அல்லது பட்ஜெட் தாக்கலின் போதும், ரகளையில் இறங்குமா என்ற பரபரப்பு உருவாகி உள்ளது.

ராகுலிடம் ஏற்பட்ட மாற்றம்:




*காங்., துணைத் தலைவர் ராகுல், லோக்சபாவில் எதிர்க்கட்சியினருக்கான மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்தார்.
*காங்., - எம்.பி.,க்கள் சபையின் மையப் பகுதிக்கு எழுந்து வந்தபோது, ராகுலும் எழுந்து வந்து, அவர்களுடன் ஒரு ஓரத்தில் நின்றார்.
*அரசுக்கு எதிராக, மற்ற எம்.பி.,க்கள் கோஷமிட்டபோது, ராகுல், அதை அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.
*ராகுலின் நடவடிக்கைகளை, காங்., எம்.பி.,க்கள் மட்டுமல்லாமல், ஆளுங்கட்சி
எம்.பி.,க்களும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
*காங்., - எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டபோது, சோனியாவும், மல்லிகார்ஜுன கார்கேயும் இருக்கையில் அமர்ந்தபடியே, அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.


காங்., தான் காரணம் ஜெட்லி குற்றச்சாட்டு:

ராஜ்யசபாவிலும், விலைவாசி உயர்வு குறித்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. விலைவாசி உயர்வு குறித்த விவாதத்துக்கு பதிலளித்து, நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது:எப்போதுமே, அத்தியாவசிய பொருட்களின் தேவைக்கும், கையிருப்புக்கும் இடையில், சமமான நிலை ஏற்பட வேண்டும். கடந்த, 10 ஆண்டு கால ஐ.மு., கூட்டணி ஆட்சியில், இந்த சமன்பாடு சரிவர நிர்வகிக்கப்படவில்லை. அதுதான், தற்போதைய விலைவாசி உயர்வுக்கு காரணம்.ரயில்வே துறையில் கற்பனைக்கு எட்டாத அளவில், நஷ்டம் ஏற்படுகிறது. தினமும், பல நூறு கோடி ரூபாய், நஷ்டம் ஏற்பட்டால், அதை சரிசெய்ய வேண்டாமா? ரயில் கட்டணங்களை உயர்த்தும் முடிவை எடுத்ததே, முந்தைய ஆட்சியாளர்கள் தான். கடந்த பிப்ரவரி மாதமே, ரயில் கட்டணங்களை உயர்த்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டுவிட்டது.தேர்தலில் தோல்வி என தெரிந்தவுடன், 'இந்த கட்டண உயர்வு உத்தரவை, புதிய அரசு அமல்படுத்தும்' என, அப்போதைய ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டு சென்று விட்டார்.ஈராக்கில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு சண்டையால், கச்சா எண்ணெய் விலை, பல மடங்கு அதிகரித்துவிட்டது. ஆனாலும், எத்தகைய நிலைமைகளையும் சமாளிக்க, அரசாங்கம் தயாராகவே உள்ளது. உணவுப்பொருட்களுக்கு வெளிச் சந்தைகளில், தட்டுப்பாடு ஏற்பட்டுவிட கூடாது என்பதில், அரசு உறுதியாக உள்ளது. பொதுமக்கள், பீதி அடைய தேவையில்லை. இவ்வாறு, அவர் பேசினார்.
ஆனால், 'அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை' எனக் கூறி, காங்., பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட் கட்சி
எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பா.ஜ., ஆட்சிக்கு வந்து, ஒன்றரை மாதம் தான் ஆகிறது. அதற்குள், அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்ந்து விட்டன. ரயில் கட்டணம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் என, அனைத்து அத்தியாவசிய தேவைகளின் விலைகளும் உயர்ந்து விட்டன. சாதாரண மக்களின் தலைகளில், சுமையை ஏற்றுவதை, மத்திய அரசு கைவிட வேண்டும்.
குலாம் நபி ஆசாத்,ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் - காங்.,

பருவமழை பொய்த்து உள்ளது. இன்னும் சில நாட்களில், உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படப்போவது உறுதி. ஆனாலும், பதுக்கல்காரர்கள் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது, ஆச்சர்யம் அளிக்கிறது. இனிமேல், இனிமையான நாட்கள் வரப்போவதில்லை. தினமும், விலை உயர்வு குறித்த அறிவிப்புகள் தான் வரப்போகின்றன.
மாயாவதி,பகுஜன் சமாஜ் தலைவர்

பட்ஜெட் தாக்கல் வரை பொறுமையாக இருக்க முடியாதா? அதற்குள்ளாகவே மக்களுக்கு கசப்பு மருந்து என்ற பெயரில், ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டுமா? இப்போது, அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்துவிட்டன. இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், நியாயப்படுத்த முயற்சிக்க கூடாது.

- நமது டில்லி நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக