சனி, 12 ஜூலை, 2014

சென்னை கிரிகெட் கிளப்பில் வேட்டிக்கு தடை ! டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் !

டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நேற்று மாலை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி. பரந்தாமன், மூத்த வழக்கறிஞர் ஆர். காந்தி ஆகியோர் அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் அவர்கள் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்திருந்திருந்தது தானாம். உயர்நீதிமன்ற நீதிபதியும், மூத்த வழக்கறிஞரும் அவமதிக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. சென்னையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் மட்டுமின்றி, ஜிம்கானா கிளப், மெட்ராஸ் கிளப், போட் கிளப், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிளப்களில் வேட்டிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.


இங்கு வேட்டி அணிந்து செல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அனுமதி கிடையாது. அதே நேரத்தில் நாகரீக ஆடை அணிந்து செல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அனுமதி உண்டு. மொத்தத்தில் மனிதர்களை மதிக்காமல் அவர்களின் ஆடைகளுக்கு மதிப்பளிக்கும் மோசமான கலாச்சாரத்திற்கு இந்த அமைப்புகள் அடிமையாகி வருகின்றன.

தமிழுக்கும், தமிழ் பாரம்பரியத்திற்கு எதிராக செயல்படுவது தான் நாகரீகம் என்ற நஞ்சு கலந்த எண்ணம் மேல்தட்டு மக்களுக்கான இந்த கிளப்களின் நிர்வாகிகளிடையே நிலவுவது தான் இதற்கு காரணம் ஆகும். வேட்டிக்கு தடை விதித்துள்ள கிளப்களில் பெரும்பாலானவை வெள்ளையரால் தொடங்கப்பட்டவை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியர்கள் அடிமைகளாக கருதப்பட்டதால், அவர்கள் இத்தகைய கிளப்களில் நுழையக் கூடாது என்ற எண்ணத்தில் ஆடை விதிகள் என்ற பெயரில் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்று 68 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் - ஆங்கிலேயர் உருவாக்கிய கிளப்கள் பெரும்பாலும் தமிழர்களின் கைகளுக்கு வந்து விட்ட நிலையில், தமிழர்களின் ஆடை அணிந்தவர்களை அடிமைகளைப் போல கருதி உள்ளே நுழைய அனுமதி மறுப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இப்போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திய விடுதலை தொடர்பாக லண்டனில் நடைபெற்ற பல்வேறு பேச்சுக்களில் பங்கேற்பதற்காக மகாத்மா காந்தி வேட்டியில் தான் சென்றார். ஒருகாலத்தில் காந்தியை அவரது ஆடையின் அடிப்படையில் விமர்சித்த இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் கூட பின்னர் அதற்காக வருத்தம் தெரிவித்து, காந்தியை அவரது வழக்கமான உடையில் பேச்சுக்களில் பங்கேற்க அனுமதி அளித்தார்.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே. மணி கூட தமிழர்களின் பாரம்பரிய உடையில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார். தமிழ் நாட்டுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் கூட தமிழர்களின் பண்பாட்டைப் பற்றி அறிந்து, வேட்டி, புடவை போன்ற ஆடைகளை அணிவதை பெருமையாக கருதுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அவமதிக்கப்படுவது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.

சமுதாயத்தில் புகழ் பெற்ற மனிதர்கள் வேட்டி அணிந்து வந்ததற்காக கிளப்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவது இது முதல் முறையல்ல. 1980களில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான வி.ஆர். கிருஷ்ணய்யருக்கும் இதே போன்ற அவமதிப்பு நிகழ்ந்திருக்கிறது. அதன்பிறகும் அரசியல் கட்சித் தலைவர்களும், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் போன்றவர்களும் ஆடையை காரணம் காட்டி கிளப்களில் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய ஆடைகள் தொடர்ந்து அவமதிக்கப்படும் போதிலும் அதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது.

மேல்தட்டு மக்களுக்கான கிளப்கள் அரசின் எந்த சட்ட திட்டத்திற்கு கட்டுப்படாமல், தங்களுக்கென விதிகளை வகுத்துக் கொண்டு தனித்தீவாக செயல்படுவதை அனுமதிக்கக்கூடாது. சங்கங்களின் பதிவுச் சட்டப்படி தான் இவை ஒழுங்குப்படுத்தப்படுகின்றன. தமிழுக்கும், தமிழர்களின் கலாச்சாரம் மற்றம் பாரம்பரிய ஆடைகளுக்கு மரியாதை அளிக்காத கிளப்களை தடை செய்யும் வகையில், அதற்குரிய சட்டங்களில் தமிழக அரசு உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக