செவ்வாய், 29 ஜூலை, 2014

ஆபாசமாகும் பதிவுகளும் முன்னெச்சரிக்கையும்! இணையத்தில் வெட்டி ஒட்டப்படும் படங்கள்

சம்பவம் 1: தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடன் நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காட்டி, அவற்றை 'இணையத்தில் வெளியிட்டு விடுவேன்' என்று காதலன் மிரட்டியிருக்கிறார். இதனால் மனமுடைந்த கீதா தற்கொலைக்கு முயன்றார்.
சம்பவம் 2: சிதம்பரத்தைச் சேர்ந்தவர் செல்வராணி (28). இவருக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக கணவரை பிரிந்து மகனுடன் தனிமையில் வாழ்ந்து வந்தார் செல்வராணி. தான் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த ஒருவடன் நட்பு கொண்டிருக்கிறார் செல்வராணி. இவர்கள் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அந்தப் பகுதியில் சிலரது செல்போனுக்கு பரிமாறப்பட்டுள்ளது. இதையறிந்த செல்வராணி தற்கொலை செய்துகொண்டார்.
"நமக்கு நெருக்கமானவர்கள் மீது வைத்த கண்மூடித்தனமான நம்பிக்கை, அடிப்படை அறிவையும் மழுங்கடிக்கச் செய்கிறது என்பதையே இவ்விரு சம்பவங்களும் உணர்த்துகின்றன.
இதுபோன்ற சம்பவங்கள் நமது சமூகத்தில் ஒன்றும் புதிதானதல்ல. இதில் யாரை குறை சொல்ல முடியும்? தொழில்நுட்பத்தையா? ஆண்களையா அல்லது சிக்கித் தவிக்கும் பெண்களையா?
பெண்ணுரிமையையும், சமத்துவத்தையும் பற்றி அதிகம் பேசும் நாம், பெண்களுக்கு போதிய விழிப்புணர்வை மறுக்கிறோம், இதில் அவர்கள் சூழ்நிலைக் கைதிகள் ஆகிறார்கள்.
பெண்கள் வெளியே செல்லும்போது, அவர்கள் தங்களை கவனித்து கொள்ளவேண்டும். மற்ற ஆண்களுடன் பழகும்போது, மிகக் கவனமாக சூழலைக் கண்காணிக்க வேண்டும். 'இவர் என் காதலர்தானே என்ன செய்திடுவார்?' என்ற எண்ணத்தை தள்ளி வைத்துவிட்டு, ஒரு பெண்ணாக யோசித்து பார்ர்தால் இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து மீள முடியும்.
சில நிமிட குதூகலத்துக்காக எடுக்கப்படும் சில வீடியோக்கள், புகைப்படங்கள் அப்போது வேண்டுமானால் மகிழ்ச்சித் தரக்கூடிய நினைவுகளாக இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் அதுவே நம்மை பெரும் சங்கடத்திற்கு ஆளாக்கிவிடும்" என்று எச்சரிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
யாரை குறை சொல்வது?
இந்தப் பிரச்சினைகளைப் பற்றியும், அவற்றை எதிர்கொள்வது குறித்தும் சொல்கிறார், மனநல ஆலோசகர் டாக்டர் தேவகி:
"இதுபோன்ற சம்பவங்களில் ஆண்தான், பெண்தான் என்று குறிப்பிட்டு குறைகூற முடியாது. இது ஓர் இக்கட்டான சூழல். இதற்கு அவர்களது மனநிலையும், அவர்களின் குருட்டு தையிரியமும்தான் காரணம். அதிகமாக ஆபாசப் படங்களை பார்ப்பதோ அல்லது நண்பர்களின் தவறான ஆலோசனையயை கேட்டு அதன்படி நடப்பதோ, அவர்களை நம்பி வந்த பெண்ணின் வழ்க்கையை அடியோடு அழித்துவிடலம்.
தவிர்ப்பது எப்படி?
இது போன்ற விவகாரங்களைத் தடுப்பது கடினம். ஏனென்றால் அனைத்து அலைபேசியிலும் புகைப்படம் எடுக்கும் வசதி வந்துவிட்டது. பெண்கள்தான் தன்னைத் தானே பதுகாத்துக்கொள்ள வேண்டும். அண்களும் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும்.
நம் சமூகத்தில் பாலியல் கல்வி அவசியம் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. குறிப்பாக, பெண்களுக்கு மிக முக்கியமானது. இதனால் அவர்கள் அதி கவனத்துடன் இருக்கலாம்.
ஒருவேளை பாதிக்கப்பட்டால்..?
சமூகம் பெண்களை ஒரு போகப் பொருளாகத்தான் பார்க்கிறது. ஒரு பெண்ணின் அந்தரங்க விஷயத்தில் தலையிட்டு, அதனை சமூகத்துடன் பரிமாரிக் கொள்ளும்போது, அந்தச் சமூகத்தின் மீது அவள் வைத்திருந்த நம்பிக்கை உடைக்கப்படுகிறது. அதனால்தான் பல பெண்கள் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். மற்றவரின் அந்தரங்கத்தினுள் நுழைய யாருக்கும் உரிமையில்லை.
எவ்வளவு அன்பானவர், நம்பிக்கைக்கு உரியவர் என்றாலும், தனிமைச் சூழல்களில் சந்தேகப் பார்வையுடன் செயல்படுவது மட்டுமே ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பாக இருக்கும். எந்தப் பிரச்சினை என்றாலும், நம்முடன் பழகும் நம்பிக்கைக்குரிய ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களிடம் அனுபவங்களைப் பகிர்வதும் நல்லது.
எல்லாவற்றையும் மீறி, பாதிப்பு ஏற்பட்டால், தற்கொலை முடிவைத் தழுவுவது கோழைத்தனம். இப்பிரச்சினைகளை தைரியமாக காவல் துறையிடமும், சைபர் குற்றப் பிரிவிடமும் கொண்டு செல்ல வேண்டும். தவறு செய்வதற்கு முன்புதான் யோசிக்க வேண்டுமே தவிர, அது நடந்த பிறகு தயக்கம் கூடாது" என்கிறார் டாக்டர் தேவகி.
இணையத்தில் வெட்டி ஒட்டப்படும் படங்கள்
இயல்பு வாழ்க்கையோடு ஒப்பிடும்போது, இணையத்தில் - சமூக வலைத்தளத்தில் உலா வரும் பெண்களுக்கு வேறு விதமான பிரச்சினை நிலவுகிறது.
ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் தங்களது பக்கத்தில் அதிக ரெசல்யூஷனுடனுடன் கூடிய க்ளோசப் படங்களை வெளியிடும் பெண்கள் வேறுவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அப்படி வெளியிடப்படும் படங்களை போட்டோஷாப் உதவியுடன் ஆபாசப் படங்களாக்கி, உள்நுழையக் கூடாத வலைத்தளங்களில் பதிவேற்றும் வேலைகளை சில விஷமிகள் கூட்டம் செய்வது உண்டு.
இத்தகைய குரூர புத்திசாலிகளின் செய்கைகளை எப்படி அணுகுவது என்பதை, பிரபல ஃபேஸ்புக் பதிவர் தமிழ்ப்பெண் விலாசினி பதிந்த நிலைத்தகவல் சக தோழிகளுக்குச் சொல்லித் தரலாம். அந்த நிலைத்தகவல் இதுதான்:
"ஒரு நண்பர் என் ப்ரொஃபைல் படங்களை ஏதோ ஓர் ஆபாச இணையதளத்தில் உபயோகப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தார். என்னுடைய புகைப்படங்களை வழக்கம் போலவே (க்ளோஸப்போ, குழந்தைகளுடனோ, கணவருடனோ, நண்பர்களுடனோ என் அன்றைய மனநிலைக்கு எது பிடித்திருக்கிறதோ) இங்கே பதிவேற்றுவேன்.
ஒரு பெண் க்ளோஸப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இடுவதுகூட அவளுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், அதற்கு இந்த சமூகம்தான் வெட்கப்பட வேண்டும். எனக்கு எந்த அறிவுரைகளும் நண்பர்களிடமிருந்து வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நாளை ஒருவேளை வேறு வலைதளங்களிலும் அவர்கள் அதைப் பயன்படுத்தக்கூடுமென்றாலும் எனக்குக் கவலையில்லை. வெட்கப்பட வேண்டியது அவர்களும், நம்பி என்னை 'அழைக்கலாம்' என்று ஏமாறுபவர்களும்தான்! எனக்கு எள்ளளவும் இழப்பு இல்லை."tamil.hindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக