ஞாயிறு, 13 ஜூலை, 2014

திமுக மெகா கூட்டணி அமைக்க முயற்சி ?

முதல்வர் ஜெயலலிதாவை, அரசியல் ரீதியாக, எதிர்க்கும் தலைவர்களை, தன் தலைமையில் ஒருங்கிணைக்கும் முயற்சியில், தி.மு.க., தலைவர் கருணாநிதி ஈடுபட்டுள்ளார்.அடுத்த முதல்வர் வேட்பாளர் போட்டியில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி, ம.தி.மு.க., பொது செயலர் வைகோ போன்றவர்கள் இடம் பெற்றிருப்பதால், தி.மு.க., அமைக்கும், 'மெகா' கூட்டணி வியூகம் கைக்கூடுமா? என்ற கேள்வி, கட்சி வட்டாரங்களில் எழுந்துள்ளது.வரும் 2016 சட்டசபை தேர்தலில், 234 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உள்ள சட்டசபைகளில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., ஒருவர் கூட இடம் பெறாத சட்டசபையாக, தமிழகம் இருக்க வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா, கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் போலவே, சட்ட சபை தேர்தலிலும் தனித்து போட்டியிட முடிவெடுத்திருப்பதாக, கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா, கட்சியின் செயற்குழுவில் தெரிவித்திருக்கிறார்.லோக்சபா தேர்தலை ஒட்டி, அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறலாம் எனக் கருதி, காங்கிரஸ், பா.ம.க., - ம.தி.மு.க., போன்ற கட்சிகள், அ.தி.மு.க.,வை கடுமையாக எதிர்க்க முன்வராமல் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அனைத்து கட்சிகளையும், 'அம்போ' என, கழட்டி விட்டார். இதனால், அந்த கட்சிகள் சட்ட சபை தேர்தலிலும், அ.தி.மு.க.,வோடு கூட்டணி அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவே நினைக்கின்றன.மத்திய அரசின் பட்ஜெட்டை முதல்வர் ஜெயலலிதா பாராட்டி உள்ள தால், பா.ஜ.,வும் அ.தி.மு.க.,வும் நேர்கோட்டில் அரசியல் செய்வதாக, பா.ம.க., - ம.தி.மு.க., போன்ற கட்சிகள், பா.ஜ., தரப்பு மீது அதிருப்தியில் இருக்கின்றன.இதனால், அந்த இரண்டு இயக்கங்களும் பா.ஜ., கூட்டணியில் இருந்து விரைவிலேயே வெளியேறும் வாய்ப்பு இருப்பதாக சொல்கின்றனர். தே.மு.தி.க.,வை பொறுத்தவரையில், ஓட்டு சதவீதம் தொடர்ந்து குறைந்து வருவதால், அக்கட்சியின் எதிர்காலம் குறித்து, விஜயகாந்த் ரொம்பவும் கவலைப்படுகிறார்.

விமர்சனம்:

இதனால், வரும் சட்டசபை தேர்தலிலும் அவர் கூட்டணி அமைத்து போட்டி போடவே விரும்புகிறார். அதற்கு, தி.மு.க., கூட்டணிதான் சரியாக இருக்கும் எனவும் அவர், நினைக்க ஆரம்பித்திருக்கிறார். தொண்டர்களுடன் நடத்தி வரும் 'உங்களுடன் நான்' நிகழ்ச்சியில் அதை, தொண்டர்களும் அவரிடம் வலியுறுத்தி இருக்கின்றனர். அதேபோல், தன் மகன் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு அதிகமாக இருக்கிறது. அதனாலேயே அவர் மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்திருக்கிறார். கூடவே, அவர் தமிழக அரசையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதேபோலவே, வைகோவும் லோக்சபா தேர்தலில் கடுமையாக தோல்வி அடைந்ததும், அடுத்த அரசியல் என்ன என்ற கேள்வியில் சிக்கித் தவிக்கிறார். ஜெயலலிதா தனித்தே சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் சூழ்நிலையில், அவருக்கும் அங்கு இடம் இல்லை. அதனால், அவரும் ஜெயலலிதாவுக்கு எதிராக பலமான கூட்டணி அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறார். அதற்கு தி.மு.க., தலைமையில் பலமான கூட்டணி அமைந்தால், அதில் இடம் பெறலாம் என்கிற யோசனையிலும் இருப்பதாக, கட்சியினர் சொல்கின்றனர்.அந்த அடிப்படையில்தான், தமிழக அரசுக்கு எதிராக அவர் கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.சென்னை மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து, 61 பேர் பலியான சம்பவத்திற்கு, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்று, தி.மு.க.,வைப் போலவே தே.மு.தி.க., - பா.ம.க., போன்ற கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.இது தொடர்பாக கருணாநிதி வெளியிடும் அறிக்கைகளில், மக்கள் பிரச்னைகளில் தன்னுடைய நிலைப்பாட்டிலேயே பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகள் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையில், தி.மு.க.,வை கடுமையாக வசைபாடிய, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழாவுக்கு, தி.மு.க., அமைப்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவனை, கருணாநிதி அனுப்பி வைத்துள்ளார்.முதல்வர் ஜெயலலிதாவை, அரசியல் ரீதியாக எதிரியாக கருதும் கட்சிகளின் தலைவர்களை, தன் தலைமையில் ஒருங்கிணைத்து, அ.தி.மு.க., அரசுக்கு எதிராக நடத்தும் போராட்டங்களில் மற்ற கட்சிகளையும் பங்கேற்க வைக்க வேண்டும் என, கருணாநிதி விரும்புகிறார்.அதன் வெளிப்பாடுதான், ஆளும்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, சட்டசபையில் நடந்து கொள்கின்றன.இந்த இணக்கமான சூழ்நிலையை வைத்து, சட்டசபை தேர்தலுக்கு முன், ஆளும்கட்சிக்கு எதிராக 'மெகா' கூட்டணியை உருவாக்கி விட வேண்டும் என நினைக்கிறார் கருணாநிதி.

-நமது நிருபர்- dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக