வெள்ளி, 4 ஜூலை, 2014

தினமலர் மீது ஜெயலலிதா வழக்கு ! இடிந்த கட்டிட வீதிமீறலை சுட்டி காட்டியது குற்றமாமே ?

சென்னை அருகே பலரை பலிகொண்ட 11 மாடிக் கட்டிடம் தொடர்பாக செய்தி வெளியிட்ட தினமலர் மீது
முதல்வர் ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா, அவரது அமைச்சர்கள் மற்றும் அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக நல விரும்பிகள் பேசினாலோ, எழுதினாலோ வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. அதேபோல பத்திரிகைகள் மீதும் வழக்குத் தொடுக்கப்படுவதும் சர்வ சாதாரணம்.
இந்த வழக்குகளில் ஒரேயொரு நல்ல பலனாக, வேலையின்றி அலுவலகத்தில் தூங்கி வழியும் அரசு வழக்கறிஞர்களுக்கு இதன் மூலம் வேலை கிடைக்கிறது.
தமிழகத்தில் தனது அரசியல் எதிரியான விஜயகாந்த், அவரது மனைவி ஆகியோர் மீது அரசுக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக அதிகபட்சமாக 40க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், ராமதாஸ் ஆகியோர் மீதும் அவதூறு வழக்குகள் பாய்ந்துள்ளன.

எதிர்க்கட்சிகள் மீது 2014ம் ஆண்டு ஜூலை வரை தொடுக்கப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை சுமார் 180. தமிழகம் முழுவதும் தொடுக்கப்பட்ட வழக்குகளில் விஜயகாந்த், கருணாநிதி ஆகியோர் மீதான வழக்குகளை ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுதவிர, நக்கீரன், முரசொலி, இந்து (ஆங்கிலம்), ஜூனியர் விகடன், தினமலர் ஆகிய பத்திரிகைகள் மீதும் அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
அரசுக்கு எதிராகச் செய்தி வெளியிட்ட தினமலருக்கு மட்டும் அரசின் விளம்பரங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
2011ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது தினமலருக்கு அரசு விளம்பரங்கள் வந்துகொண்டுதான் இருந்தன. ஆனால், அரசையும் அதிகாரிகளையும் விமர்சித்து செய்தி வெளியிட்டதால் அரசு விளம்பரங்கள் மறுக்கப்பட்டுள்ளன.
ஆனால், தினமலர் நிர்வாகம் எப்படியும் அரசிடமிருந்து விளம்பரங்கள் பெற்றே தீர வேண்டும் என்ற குறிக்கோளில் செயல்பட்டு வருகிறது. பத்திரிகைகள் இரண்டு விதமான உத்திகளைக் கையாள்கின்றன. ஒன்று ஆதரித்தே (ஜால்ரா போட்டு) எழுதி விளம்பரம் வாங்குவது. விளம்பரம் தராவிட்டால் அவர்களுக்கு எதிராக (துரும்பைக்கூட தூணாக்குவது) செய்திகளை தொடர்ந்து எழுதி மிரட்டல் தொனியில் விளம்பரம் பெறுவது.
இதுதான் இன்றைய தமிழ் பத்திரிகைகளின் நிலைமை.
அரசு விளம்பரம் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் பறிபோனதால் வருத்தப்படும் தினமலர் நிர்வாகம், தொடர்ந்து முதல்வருக்கு எதிரான செய்திகளை எழுதுவதன் மூலம் அரசின் விளம்பரம் கிடைக்கட்டும், இல்லாவிட்டால் பத்திரிகைக்கு மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கட்டும் என நினைத்து எழுதி வருகிறது.
ஒரு காலத்தில் திமுகவின் ஆதரவுப் பத்திரிகையாக இருந்த தினகரன், மாறன் சகோதரர்கள் கைக்கு மாறிய பின் ஆளுங்கட்சியாக திமுக இருக்கும் வரையில் அரசை ஆதரித்தும், ஜெயலலிதாவை எதிர்த்தும் எழுதி வந்தது.
2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதாவைப் பற்றிய எதிரான செய்திகளை பெரிதுபடுத்தி எழுதுவதில்லை. மாறன் சகோதரர்களுக்கு நிறைய தொழில்கள் இருப்பதால் ஜெயலலிதாவுக்கு எதிராக எழுதி அவரைப் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை.
இத்தனைக்கும் தினகரன் நாளிதழுக்கு சிங்கிள் கால அரசு விளம்பரம்கூட கிடைப்பதில்லை. அரசு விளம்பரம் கிடைக்காவிட்டால்கூட பரவாயில்லை, எதிர்த்து எழுதி இருக்கும் தொழிலைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது என கூட்டல், கழித்தல் கணக்குப் போடுகின்றனர் அவர்கள்.
ஏற்கெனவே, அரசு கேபிளில் சன் நியூஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. இதனால், சன் நியூஸ் ரேட்டிங்கில் இருந்து கீழே சாய்ந்துவிட்டது. இந்த நிலையில், ஜெயலலிதாவை எதிர்த்து எழுதி எதற்கு வம்பை விலைக்கு வாங்க வேண்டும் என மாறன் சகோதரர்கள் நினைத்துவிட்டனர்.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து திமுகவின் உயர்மட்டக் குழுவில் பேசிய பலரும், “திமுகவுக்கு என தனியாக பத்திரிகை இல்லை. அனைத்துப் பத்திரிகைகளும் அதிமுகவையே ஆதரித்து எழுதுகின்றன. அரசின் தவறைக்கூடச் சுட்டிக்காட்டுவது இல்லை.
தலைவரின் குடும்பத்தினர் நடத்தும் தினகரனில்கூட அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி எழுதுவதில்லை. தினகரனின் உரிமையாளராக கே.பி. கந்தசாமி இருந்தவரை முழுக்க அதிமுக அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டியதோடு கட்சியின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
ஆனால், இப்போது அப்படி இல்லை. எனவே, திமுகவுக்குகென தனிப் பத்திரிகை அதாவது பொதுமக்கள் அனைவரும் வாங்கும் வகையில் புதிதாக பத்திரிகை தொடங்க வேண்டும்” என  வெளிப்படையாகப் பேசினர்.
இந்நிலையில், சென்னையில் 11 மாடி வீடு இடிந்த செய்தி வெளியிட்டது தொடர்பாக தமிழக முதல்வர் சார்பில், ‘தினமலர்’ நாளிதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு எதிராக, சென்னை, முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெகன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், கடந்த, 30ம் தேதி, தினமலர் நாளிதழில், ‘அவலம்’, இடிந்த கட்டடத்திற்காக விதிகளைத் தளர்த்தி, 2 அரசாணைகள். – சி.எம்.டி.ஏ., மீது தவறில்லை என்கிறார் முதல்வர் ஜெ.’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது.
இது, தமிழக முதல்வருக்கு எதிரான, அவதூறான செய்தி. விதிகள் தளர்த்தப்பட்டு, நில உரிமையாளருக்கு சாதகமாக, அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதில், உண்மையில்லை. அது, பொய்யானது.
இரண்டு அரசாணைகளும், கட்டிடத்தின் கட்டுமானத்துக்கோ, கட்டிடத்தின் உறுதித்தன்மைக்கோ, விதிகளைத் தளர்த்தவில்லை. நில விரிவாக்கம் தொடர்பாகத்தான், அந்த அரசாணைகளில் கூறப்பட்டுள்ளது.
எனவே, கட்டிடத்தின் வடிவமைப்பு, கட்டிடத்தின் பாதுகாப்புத் தன்மைக்கு விதிகளைத் தளர்த்தியதாகக் கருதக் கூடாது.
பத்திரிகையில் வந்த செய்தியானது, முதல்வரின் நடவடிக்கையை குற்றம் சாட்டுவதாக உள்ளது” என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.
ஆனால், செய்தியில், இடிந்து விழுந்த கட்டிடத்துக்கு திட்ட அனுமதி வழங்கும்போது, சாலை அகலம், பக்கவாட்டு காலியிடம், அங்கீகாரமில்லாத வகையில் செய்யப்பட்ட மனை உட்பிரிவு ஆகியவற்றுக்கான சில விதிகளை தளர்த்தி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றே கூறப்பட்டிருந்தது.
சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் மீதுதான் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஆனால், முதல்வர் தனது பேட்டியில் சி.எம்.டி.ஏ. அனுமதி அளித்ததில் தவறில்லை என கூறியிருந்தார்.
எதையுமே விசாரிக்காத நிலையில் முதல்வர் எப்படி அவ்வாறு தவறு இல்லை என பேட்டி கொடுக்க முடிந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சி.எம்.டி.ஏ. மீதுதான் தவறு என குற்றம்சாட்டப்பட்டால் தனது அரசுக்கு கெட்ட பெயர் என நினைத்த முதல்வர் ஜெயலலிதா, முந்திக்கொண்டு சி.எம்.டி.ஏ. மீது தவறு இல்லை என அதிகாரிகளைக் காப்பாற்ற முனைந்திருக்கிறார்.
11 மாடிக் கட்டிடம் இடிந்தது தொடர்பாக உண்மையிலேயே விசாரணை நடத்தி தவறு யார் மீது இருக்கிறது என்பதை முதல்வர் ஜெயலலிதா முழுமையாகத் தெரிந்துகொண்டு கூறினால் பரவாயில்லை. ஆனால், அவசர அவசரமாக சி.எம்.டி.ஏ. மீது தவறில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால், நாம் விசாரித்த வகையில், சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் மீதும், கட்டுமான நிறுவனத்தின் மீதுமே தவறுகள் உள்ளன. இதனால்தான், இந்த பெரிய விபத்து நடந்துள்ளது.
அனைத்து மெகா சர்குலேஷன் பத்திரிகைகளுக்கும் இப்போது அரசின் விளம்பரங்கள் கிடைப்பதால் அவை ஆதரித்தே எழுதுகின்றன.
அதிமுக அரசை ஆதரித்து எழுதினால் முதல்வர் ஜெயலலிதா இப்போதைக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஒரு கட்டத்தில் முதல்வருக்கு தவறுகள் அனைத்தும் மறைக்கப்படும். தவறாகச் செய்தால்கூட, தான் செய்யும் செயல்கள் அனைத்தும் சரி என்றே தோன்றும்.
‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரிலானுங் கெடும்’ என்ற வள்ளுவரின் குறள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிந்திருந்தால், சரி.
viruvirupu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக