வியாழன், 10 ஜூலை, 2014

மோடி அரசு மீது ஜெ., மென்மையான போக்கு: வழக்குகளில் இருந்து தப்பிக்கவா; கம்யூ.,சந்தேகம்

மோடி அரசு மீது ஜெயலலிதா மென்மையான போக்கை கடைப்பிடிப்பது வழக்குளில் இருந்து தப்பிக்கவா என சந்தேகப்படுவதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயற்குழு கூட்டம் இரண்டு நாட்கள் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடந்தது. கூட்டத்தில் மேற்கொண்டு தீர்மானங்கள், முடிவுகள் குறித்து மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பயண கட்டண, சரக்கு கட்டண உயர்வு விலைவாசி உயர்வை ஏற்படுத்தும். வெளிநாட்டு கம்பெனிகளை ரயில்வே துறையில் முதலீட்டிற்கு அனுமதிப்பது மோசமான விளைவுகளை உருவாக்கும். இதற்கு எதிராக இயக்கம் நடத்தப்படும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருகிறது. தமிழக அரசு நியமனத்தில் லஞ்சம் நீடிக்கிறது. மவுலிவாக்கம் 11 மாடி கட்டடம் இடிந்துவிழுந்த சம்பவத்தில், தரப்பட்ட லே-அவுட் அனுமதியில் முறைகேடுகள் நடந்திருக்கிறது. இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை உறிஞ்சும் பெப்சி நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்திருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இதை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளோம். மத்தியில் காங்.,,அரசு இருந்தபோது பெட்ரோல்,டீசல் விலையேற்றம் செய்தபோதும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை ஐந்து சதவீதத்தை விற்கும் அறிவிப்புகள் வரும்போதும் முதல்வர் ஜெயலலிதா அதனை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். ஆனால் தற்போது பா.ஜ.,வின் மோடி அரசின், மக்களை பாதிக்கும் ரயில்வே பட்ஜெட்டை வரவேற்றுள்ளார். ஒருவேளை தம் மீதான வழக்குகளில் இருந்து தப்பிக்க ஜெயலலிதா இத்தகைய நிலையை கடைப்பிடிக்கிறாரோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது, இவ்வாறு, ராமகிருஷ்ணன் தெரிவித்தார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக