வியாழன், 24 ஜூலை, 2014

ஓசூர் அசோக் ஆஸ்பத்திரியில் புகுந்து ஊழியருக்கு சரமாரி கத்திக்குத்து! Ashok hospital !

ஓசூர் : ஓசூரில் இன்று அதிகாலை தனியார் மருத்துவமனைக்குள் புகுந்த வாலிபர், அங்கிருந்த ஊழியரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு, பாகலூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (30) என்ற ஊழியர் நேற்று இரவு பணியில் இருந்தார். இன்று அதிகாலை 4.30 மணியளவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர், மருத்துவமனைக்கு வந்தார். இவர் பிரகாஷிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர், மருந்தக கதவை திறந்து உள்ளே சென்று கத்தியால் பிரகாசை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த பிரகாஷ் அலறினார். சத்தம் கேட்டு மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பி விட்டார்.
இந்த திடீர் தாக்குதலில் படுகாயமடைந்த பிரகாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் கூறுகையில், ‘தின்னூர் பகுதியை சேர்ந்த சசி என்பவர், மருத்துவமனைக்கு வந்து பிரகாஷ் எங்கு இருக்கிறார் என கேட்டார்.

அதற்கு நாங்கள், பார்மசியில் இருப்பதாக கூறினோம். உடனே அவர் அங்கு சென்று பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடி விட்டார்`` என்றனர். இந்த சம்பவம் பற்றி ஓசூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.அதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சசியின் உறவினர் பெண்ணுக்கு இந்த மருத்துவமனையில் பிரசவம் நடந்துள்ளது. அதற்கான பில் தொகை அதிகமாக இருப்பதாக கூறி, அப்போதே மருத்துவமனை ஊழியர்களிடம் சசி தகராறு செய்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலை மருத்துவமனைக்குள் சசி புகுந்து பிரகாசிடம் வாக்குவாதம் செய்து சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மருத்துவமனைக்குள் வாலிபர் சசி புகுந்தது முதல் பார்மசியில் இருந்த பிரகாஷை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை பார்த்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மருத்துவமனைக்குள் புகுந்த வாலிபர், ஊழியரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு சென்ற சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக