செவ்வாய், 1 ஜூலை, 2014

மவுலிவாக்கம் 80 வீதமான மீட்பு பணிகள் நடைபெறவில்லை ! சந்திரபாபு நாயுடு காட்டம் : விதிமீறலே விபத்துக்கு காரணம் !

மவுலிவாக்கம் கட்டிட விபத்து பகுதியை நேரில் பார்வையிட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மீட்புப் பணிகள் வெறும் 20% அளவிலேயே நடந்துள்ளது என்றும், தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினரை பெருமளவில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.
போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாலை 11 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில், 17 பேர் பலியாகினர். 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த, படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் ஆந்திரம் மாநிலம் விஜியநகரம், ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் ஏவுதல் நிகழ்வை நேரில் பார்வையிட்ட பின்னர், சென்னை விரைந்தார் சந்திரபாபு நாயுடு.
முதலில் விபத்து நடந்த மவுலிவாக்கம் பகுதிக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக உள்துறை செயலருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் கூறினார்.
மீட்புப் பணிகள் 20% அளவிலேயே நடந்துள்ளதாகவும், எனவே, தேசிய பேரிடர் மேலாண்மை படையினரை பெருமளவில் ஈடுபடுத்துமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
பின்னர், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்துதரப்படும் என உறுதியளித்ததோடு மீட்புப் பணிகள் போர்க்கால் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றார்.tamil.hindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக