புதன், 23 ஜூலை, 2014

நைஜீரியா தீவிரவாதிகள் கடத்திய 11 மாணவிகளின் பெற்றோர் நெஞ்சு வலி மரணம் !

லாகோஸ்: நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் சிலர் பிள்ளைகளை பறி கொடுத்த அதிர்ச்சியில் மாரடைப்பு, ரத்த அழுத்தம், கோமா உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. போர்னோ மாவட்டத்தில் உள்ள மைடுகுரி நகரில் இருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சிபோக் பகுதியில் பெண்கள் உறைவிட மேல்நிலைப் பள்ளி உள்ளது. அப்பள்ளி விடுதிக்குள் தூங்கிக் கொண்டிருந்த சுமார் 200 இளம் வயது மாணவிகளை நைஜீரிய போக்கோஹரம் தீவிரவாதிகள் சில மாதங்களுக்கு முன்பு பலவந்தமாக வாகனங்களில் தூக்கிப்போட்டுக் கொண்டு கடத்திச் சென்றனர். இன்னும் தவிக்கும் சிறுமிகள்: கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கடத்தப்பட்ட மாணவிகளில் சில மாணவிகள் தப்பி வந்த நிலையில் பெரும் எண்ணிக்கையிலானோர் இன்னமும் தீவிரவாதிகளின் பிடியில் தான் சிக்கிக்கொண்டுள்ளனர். பெற்றோர் மரணம்: இந்நிலையில் மாணவிகள் கடத்தப்பட்ட சோகத்தில் 11 மாணவிகளின் பெற்றோர் மரணமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாங்க முடியா சோகம்: அவர்களில் பெரும்பாலானோர் நெஞ்சு வலி மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக மரணத்தைத் தழுவியதாக கூறப்படுகிறது. மன அழுத்த மரணம்: குறிப்பாக கடத்தப்பட்ட இரண்டு பெண்களுக்கு தந்தையானவர் ஒரு வகையான கோமாவில் சிக்கி மாணவிகளின் பெயரை தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்துள்ளார். சில தினங்களுக்கு பின் அவரும் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. அதிபர் ஆறுதல்: இதனை அறிந்த அந்நாட்டு அதிபர் மாணவிகளின் பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் யாரும் தவறான முடிவெடுக்க வேண்டாம் என்றும் வேண்டுதல் விடுத்துள்ளார்.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக