சனி, 12 ஜூலை, 2014

10-ம் வகுப்பு மறுகூட்டலில் நாகர்கோவில் மாணவி மாநில சாதனை: கவனக்குறைவு மதிப்பீட்டுக்கு நடவடிக்கை பா

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் மறுகூட்டலில் மாநிலத்தில் 2-ம் இடமும், மாவட்டத்தில் முதலிடமும் பெற்று நாகர்கோவில் மாணவி சாதனை புரிந்துள்ளார்.
நாகர்கோவிலை அடுத்த ஈத்தாமொழியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகள் கவுசல்யா, நாகர்கோவில் அல்போன்ஸா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக் கிறார். கடந்த ஜூன் மாதம் வெளியான எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவில், கவுசல்யா தமிழ் பாடத்தில் 98, ஆங்கிலத்தில் 100, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 93 என 491 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
மாநில அளவில் முதலிடத்தை எதிர்பார்த்த கவுசல்யாவுக்கு தேர்வு முடிவு அதிர்ச்சியை தந்தது. தளராத நம்பிக்கையோடு, சமூக அறிவியல் விடைத்தாளை மட்டும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தார்.
இதற்கான முடிவு வெள்ளிக்கிழமை வெளியானது. இதில், சமூக அறிவியலில் 100 மதிப்பெண் பெற்றிருந்தார். இது முந்தைய மதிப்பெண்ணைவிட 7 அதிகம். ஏற்கெனவே மொத்த மதிப்பெண் 491 பெற்றிருந்த அவர், மறுகூட்டல் முடிவுக்கு பின் 498 மதிப்பெண் பெற்றுள்ளார்.

இதன் மூலம் கவுசல்யா மாநிலத்தில் 2-வது இடமும், குமரி மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். அவர் கூறும்போது `மொழிப்பாடம் நீங்கலாக மற்ற பாடங்களில் முழு மதிப்பெண் கிடைக்கும்.
மாநில அளவில் ரேங்க் பெறுவேன் என முன்னரே எதிர்பார்த்தேன். தேர்வு முடிவுகளை பார்த்ததும் அதிர்ந்து விட்டேன். இப்போது மாநிலத்தில் 2-வது இடம் பெற்றிருப்பதில் சந்தோஷமே’ என்றார்.
மறுகூட்டல் மூலம் சாதனை படைத்த மாணவி கவுசல்யாவை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் பாராட்டினார்.
கவனக்குறைவாக மதிப்பீடு: நடவடிக்கை பாயுமா?
‘தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி'க்கு சமம் என்பது புகழ்பெற்ற ஆங்கில வாசகம். ஏறக்குறைய அப்படியொரு நிலைதான் ஏற்பட்டிருக்கிறது நாகர்கோவில் கவுசல்யாவுக்கு. மாநில அளவில் 2-ம் இடமும்,குமரி மாவட்டத்தில் முதலிடமும் பெறும் அளவுக்கு மதிப்பெண் எடுத்த கவுசல்யா வெற்றிக்கான அங்கீகாரத்தை உரிய நேரத்தில் பெறமுடியாமல் போய்விட்டது.
நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவருக்கு வெறும் 93 மதிப்பெண்ணே பொதுத் தேர்வு முடிவில் வழங்கப்பட்டுள்ளது. மறுகூட்டலில் 7 மதிப்பெண்கள் கூடுதல் பெற்று மாநில தரத்திலும் இடம் பிடித்துள்ளார். இந்த மிகப்பெரிய தவறுக்கு காரணமானவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை பாய வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்து. இந்நிலையில் மாணவியின் விடைத்தாளை கவனக்குறைவாக மதிப்பீடு செய்த சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக