திங்கள், 23 ஜூன், 2014

Swiss கருப்புப் பணம் – ஃபிலிம் காட்டும் பாஜக !

எம்.பி.ஷாசுவிஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல், புலனாய்வில் முக்கியமான உதவியாக இருக்கும் என்று கருப்பு பணம் பற்றிய சிறப்பு புலனாய்வு குழு தலைவர் நீதிபதி எம்.பி. ஷா கூறியிருக்கிறார். ஆனால் இந்த புலனாய்வு என்ன சாதித்து விடும்?
எம்.பி.ஷா
வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் திருட்டுத்தனமாக பதுக்கியுள்ள கருப்பு பணம் பற்றிய விபரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி ராம் ஜெத்மலானி உள்ளிட்ட பலர் உச்சநீதி மன்றத்தில் 2009-ல் வழக்கு தொடுத்திருந்தனர். 2011 ஜூலை 2-ம் தேதி ஓய்வுபெற்ற உச்சநீதி மன்ற நீதிபதிகள் எம்.பி ஷா, அரிஜித் பசாயத் ஆகியோர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு, அப்போதிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, உச்சநீதி மன்றம் உத்திரவிட்டது.
அந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு போட்ட மனுவை கடந்த மே 1-ம் தேதி தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம் மூன்று வாரத்திற்குள் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என உத்திரவிட்டது. சாதனை ஏதும் நிகழ்த்தவியலாத, இத்தகைய சட்டத்தின் பொந்து விளையாட்டைக் கூட ஆளும் வர்க்கம் விரும்பவில்லை. எனினும் உச்சநீதிமன்றம் அந்த விளையாட்டை கொஞ்சம் அதிகமாய் விளையாட விரும்பியது.

இந்நிலையில் மே 27-ம் தேதி மோடி தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது பற்றி முடிவு செய்யப்பட்டது. இக்குழுவில் நீதிபதிகளைத் தவிர ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர், மத்திய நேர்முக வரிகள் வாரிய தலைவர், வருவாய் துறை செயலர், சிபிஐ மற்றும் ஐபி இயக்குநர்கள் ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழுவும் உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படியே அமைக்கப்பட்டிருந்தாலும், பாஜக ஆதரவு கோயாபல்ஸ்சுகள் இதை ஏதோ மோடியின் மாபெரும் கருப்புப் பண மீட்பு சாகச நடவடிக்கையாக கிளப்பி வந்தனர்.
ராம்போ மோடி
படம் : நன்றி http://www.mid-day.com
உத்தரகாண்ட் பேரழிவின் போது தானே விமானத்தில் சென்று, இனோவா கார் மூலம் 15,000 குஜராத் மக்களை காப்பாற்றியது போன்ற அரசியல் கிராஃபிக்ஸ் விளம்பரங்கள் மூலம் அம்பலப்பட்டு நின்ற மோடி, வெளிநாடுகளில் முறைகேடாக பதுக்கப்பட்டுள்ள இந்திய பணத்தையும் ‘அது போலவே’ எடுத்து வருவார் என்பது போல தற்போதும் செய்திகள் வெளியாகின்றன. உண்மை நிலவரம் என்ன?
அரசியல்வாதிகள் சுவிஸ் வங்கியில் போட்டிருப்பது வெறும் 3 சதவீதம் கருப்பு பணத்தைத்தான். போதை மருந்து உள்ளிட்ட சட்டவிரோத கும்பலிடம் தான் 33 சதவீத கருப்பு பணம் இருக்கிறது. பெரும்பான்மையான 64 சதவீத கருப்பு பணத்தின் இருப்பிடமே அமெரிக்காவின் டெலாவர் மாநிலம்தான். அங்குள்ள பன்னாட்டு முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் தான் இதன் ஊற்றுமூலம். இவை தாராளமாக நாடுகளுக்குள் வந்துபோக சட்டபூர்வமாகவே தாராளமயம் தனியார்மயம் காலகட்டத்தில் அனுமதி தரப்பட்டு விட்டதால் இனி கடத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட வேண்டிய அவசியமே அவர்களுக்கு இல்லை.
இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 35 லட்சம் கோடி ரூபாய் வரை கருப்பு பணம் திரட்டப்படுகிறது. 2002 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து  எடுத்துச் செல்லப்பட்ட கருப்பு பணம் ரூ 21 லட்சம் கோடி. 2011-ல் மட்டும் ரூ 5 லட்சம் கோடி வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாக வாஷிங்டனைச் சேர்ந்த ரிசர்ச் அண்டு அட்வகசி அமைப்பு கூறுகிறது. மேலும் கருப்பு பணத்தை வரியில்லா சொர்க்கங்களில் பதிவான லெட்டர் பேடு கம்பெனிகளுக்கு கிடைக்கும் லாபத்தில் ஈவுத் தொகை அளிப்பதன் மூலமாகவும், உரிமத் தொகை அளிப்பதன் மூலமாகவும் வெள்ளையாக்கும் நடவடிக்கைகளும் சட்டபூர்வமாகவே நடந்து வருகின்றன.
ஆண்டுதோறும் உருவாக்கப்படும் கருப்பு பணத்திற்கு கார்ப்பரேட் முதலாளிகளும், நிறுவனங்களும் முறையாக வரி கட்டினால் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ 7.5 லட்சம் கோடி ரூபாய் வசூலாகும் என்றும், அது ஆண்டு தோறும் வசூலாகும் மொத்த வரிப்பணத்தை (ரூ.6.4 லட்சம் கோடி) விட அதிகம் என்றும் கூறுகிறார் ‘இந்தியாவின் கருப்பு பொருளாதாரம்’ என்ற நூலின் ஆசிரியர் பேராசிரியர் அருண்குமார். கருப்பு பணம் என்பதே கார்ப்பரேட்டுகளின் பணம் தான் என்பதை புள்ளிவிபர ஆதாரங்களுடன் சுட்டி காட்டுகிறார்.
ருய்யா - அம்பானிகார்ப்பரேட்டுகளின் மீதான அதீத வரிவிதிப்பு காரணமாகத்தான் கருப்பு பணம் உருவாவதாக முதலாளித்துவ ஆதரவாளர்கள் சொல்லி வரும் மாய்மாலத்தையும் தனது ஆய்வில் போட்டு உடைக்கிறார் குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிட்டி என்ற நிறுவன ஆய்வாளர் தேவ்கர்.  தனியார்மயம் தாராளமயம் உலகமயம் ஆகியன அமல்படுத்தப்பட்டு, 1991 முதல் முதலாளிகளுக்கு நேர்முக வரிகள் படிப்படியாக குறைக்கப்பட்ட பிறகுதான் வரி ஏய்ப்பும், கருப்பு பண வெளியேற்றமும் அதிகரித்தன என்கிறார் தேவ்கார்.
உண்மையில் கருப்பு பணம் வங்கிக் கணக்குகளில் நிரந்தரமாக பதுக்கி வைக்கப்படுவதில்லை. கருப்பு பணம் பரிமாறப்படும் உலக வர்த்தகத்திற்கான வழித்தடம் மட்டுமே அது. அந்த தீவுகளில் பெயர்ப்பலகை மட்டுமே இருக்கும். அந்நிறுவனத்தின் பெயரால் உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தை, அன்னியச் செலவாணி சந்தை, சரக்கு சந்தை இவற்றில் நடக்கும் சூதாட்டம்தான் முக்கியமானது.
இந்த சூதாட்டத்தில் வெற்றிபெற வல்லுநர்களையும், அவர்களைக் கொண்டு புதிய சூதாட்ட கருவிகளையும் உருவாக்க பன்னாட்டு நிதி நிறுவனங்களும், தரகு முதலாளிகளும் தொடர்ந்து முயன்று வருகின்றனர். நாடுகளின் சட்ட ஓட்டைகளை பயன்படுத்தி எப்படித் தப்பிப்பது என்று கண்டு கொண்டிருக்கிறார்கள். டாட் காம் குமிழியை 2000-ல் உருவாக்கியது, அதற்கு முன்னரே தென் கிழக்காசியாவை திவாலாக்கியது, சப்பிரைம் குமிழியை உருவாக்கியது, கிரீசையும், ஸ்பெயினையும் திவாலாக்கியது இவர்கள்தான்.
கருப்புப் பண முதலைகள்உலக கோடீசுவரர்களின் செல்வம் 1997-ல் 5.7 லடசம் கோடி டாலராக (சுமார் ரூ 300 லட்சம் கோடி) இருந்து 2009-ல் 32.8 லட்சம் கோடி டாலராக (சுமார் ரூ 1900 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. இதை வைத்து உலகின் வரியில்லா சொர்க்கத் தீவுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பண மதிப்பு மட்டும் 21 லட்சம் கோடி முதல் 32 லட்சம் கோடி டாலர் வரை (சுமார் ரூ 1200 லட்சம் கோடி முதல் ரூ 1900 லட்சம் கோடி வரை) இருக்கும் என்கிறது டாக்ஸ் ஜஸ்டிஸ் நெட்வொர்க்.
கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக, அத்வானி ரத யாத்திரை நடத்திக் கொண்டிருந்த 2011-ல் கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தை சேர்ந்த சஞ்சீவ் பிரசாத், சுனிதா பல்தாவா, அமித் குமார் ஆகியோர் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டனர். 2009-10ல் 3,800 கோடி டாலராக இருந்த எஞ்சினியரிங் பொருட்களின் ஏற்றுமதி 2010-11ல் 6,800 கோடி டாலராக உயர்ந்திருந்தது. ஆனால் இந்திய பங்குச்சந்தையை மையப்படுத்தி அனைத்து எஞ்சினியரிங் நிறுவன கணக்குகளை பரிசீலித்துப் பார்த்தபோது ஏற்றுமதி 138 கோடி டாலர் மட்டுமே அதிகரித்திருந்தது தெரிய வந்தது. அப்படியானால் மீதியுள்ள 2,862 கோடி டாலர் எங்கிருந்து வந்தது? அது போலவே 2009-10ல் ரூ 8,500 கோடி ரூபாய்க்கு நடந்த தாமிரம் ஏற்றுமதி 2010-11ல் ரூ 36,700 கோடியாக உயர்ந்திருந்தது. இந்த மதிப்பு இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த தாமிர உற்பத்தியை விட பல மடங்கு அதிகம்.
2008-ல் 22 லட்சம் டாலர்களாக இருந்த பஹாமா தீவுகளுக்கான இந்திய ஏற்றுமதி 2010-ல் 280 கோடி டாலர்களாக உயர்ந்தது. காரணம் ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் நிறுவனங்கள் பஹாமா தீவுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்ததாக கள்ளக்கணக்கு காட்டியிருந்தனர். இவ்வளவுக்கும் அந்த தீவின் மொத்த மக்கட்தொகையே வெறும் 3.5 லட்சம் தான். நிச்சயமாக இவ்வளவு பெட்ரோல் அங்கு தேவையே படாது. அதாவது அம்பானி கருப்பை வெள்ளையாக்கும் உத்திகளில் இதுவும் ஒன்று.
கருப்புப் பண பிசினஸ்2007-ல் ஹட்ச் எஸ்ஸார் லிமிடெட் என்ற இந்திய டெலிகாம் நிறுவனத்தின் 67% பங்குகளை தன்வசம் வைத்திருந்த ஹட்சிசன் டெலிகாம் இன்டர்நேசனல் என்ற பன்னாட்டு நிறுவனம் அவற்றை ரூ 52,300 கோடி ரூபாய்க்கு வோடாஃபோன் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு விற்றது. இந்தியாவில் இருந்த ஹட்ச் நிறுவன சொத்துக்களும் வோடாஃபோன் நிறுவனத்தின் கைகளுக்கு மாறியது. இந்த விற்பனை மீது ரூ 11,000 கோடி மூலதன ஆதாய வரியாக பிடித்தம் செய்து தம்மிடம் தருமாறு வோடாஃபோன் நிறுவனத்துக்கு இந்திய வருவாய்த்துறை உத்திரவிட்டது.
இதற்கு வருவாய்துறைக்கு அதிகாரம் இல்லையென மும்பை உயர்நீதி மன்றத்தில் மனு செய்தது ஹட்சிசன் எஸ்ஸார் இந்திய நிறுவனத்தின் 67% பங்கு உரிமையாளர் கேமென் தீவினை சேர்ந்த சி.ஜி.பி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிமிடெட். பரிவர்த்தனை கேமென் தீவுக்குள் நடந்திருப்பதால் இதற்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே இப்பரிவர்த்தனையில் இந்திய அரசுக்கு வரி விதிக்கும் அதிகாரமும் கிடையாது என்று வாதிட்டது வோடாஃபோன் நிறுவனம்.
மும்பை உயர்நீதி மன்றம் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து வோடாஃபோன் நிறுவனம் உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்தது. வோடோஃபோனுக்காக காங்கிரசின் அபிஷேக் சிங்வி, ஹரிஷ் சால்வே போன்ற கார்ப்பரேட் வழக்கறிஞர்களும், லண்டனில் இருந்து வந்த சட்ட வல்லுநர்களும் சேர்ந்து வேலை செய்து வாதாடினர். ஜனவரி 20, 2012-ல் தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான மூவர் அமர்வு வோடாஃபோனுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. வோடாஃபோனுக்கு விதிக்கப்பட்ட வரியை ”மூலதனத்தின் மீதான மரண தண்டனை” என்று கண்டித்திருந்தார் நீதிபதிகளில் ஒருவரான ராதா கிருஷ்ணன். காங்கிரசு, பாஜகவோடு, நீதிபதிகளும் கருப்புப் பணம் மற்றும் மோசடிப் பணம் மீது கொண்டிருக்கும் மரியாதையை இந்த மரண தண்டனை கவலை எடுத்தியம்புகிறது.
சூப்பர்மேன் மோடி
படம் : நன்றி http://www.tehelka.com
இந்தியாவின் உண்மை பொருளாதாரத்தைப் போல 7 மடங்கு பணம் பங்குச்சந்தை, நாணய சந்தை, ஆன்லைன் வர்த்தகத்தில் வைத்து சூதாடப்படுகிறது. இதில் யாருடைய பணம் எனத் தேடிப் போனாலும் திருடனை ஆதாரத்துடன் பிடிக்கவே முடியாது. அப்படியே நிரூபிக்க முடிந்தாலும் அதற்கான வரிப்பணத்தை பெற்றாலே பெரிய விசயம்தான்.
சிறப்பு புலனாய்வுக் குழுவோ, நேர்மையான சில நீதிபதிகளோ இவற்றை தடுத்து நிறுத்தி விட முடியாது என்பதுடன், “சூப்பர் மேன்” மோடி இந்த கருப்புப் பணத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை இன்னும் துரிதப்படுத்துவதற்காகத்தான் அவரது கார்ப்பரேட் ஆதரவாளர்களால் நிதி கொடுத்து ஆட்சியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். அடுத்த சில மாதங்களுக்கு வெளிநாட்டு வங்கிகளுக்கு கடிதம் எழுதுதல், வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்வது, வருமான வரித் துறை பதிவுகளை ஆய்வு செய்வது என பல்வேறு வழிகளில் சிறப்பு புலனாய்வுக் குழு புலனாய்வு செய்தாலும் கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பண பாய்ச்சலில் கை வைக்கப் போவதில்லை. இறுதியில் இந்திய மேட்டுக்குடி அதிகார வர்க்கம் சில பல வெளிநாடுகளுக்கு சுற்றுலா போய் சரக்கு அடித்து விட்டு வந்த செலவுதான் மிஞ்சப் போகிறது. அம்பானி, அதானிகளின் நலனுக்காக நடத்தப்படும் இந்த செலவையும் இந்திய மக்களே எற்க வேண்டும்.
ஒருவேளை ஐரோப்பிய வங்கிகளும், நாடுகளுமே தகவல்களை தர முன்வந்தாலும் அவை ராணுவ ரகசியம் போலத்தான் காப்பாற்றப்படுமே தவிர, அதுபற்றிய தகவல்கள் வெளிவரவோ அல்லது கருப்பு பணம் அரசால் கைப்பற்றப்படுவதோ நடக்கவே போவதில்லை. உச்சநீதி மன்றம் இப்படி வரும் தகவல்களை வருவாய் துறை செயலருக்கு இணையான பதவிகளில் இருப்பவர்களிடம் மட்டுமே கொடுத்து வைத்து அரசு ரகசியமாக காப்பாற்ற வேண்டும் என உத்திரவிட்டுள்ளது. இந்த உண்மையை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைமை காங்கிரசுக்கு ஏற்பட்டது என்றால், பா.ஜ.க ஆரம்ப கட்டத்தில் சீன் போடுகிறது. அவ்வளவுதான் வித்தியாசம். திருடர்களை அம்பலப்படுத்தாமல் இராணுவ ரகசியத்தைப் போல காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன?
கருப்புப் பணம்கருப்பு பணம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சாஸ்திரி பவனில் நிகழ்ந்த தீ விபத்தில் அழிந்து விட்டதாக குற்றம் சாட்டிய ராம் ஜெத்மலானிக்கு பதில் சொன்ன பழைய சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் அனைத்து ஆவணங்களும் பத்திரமாக புதுதில்லி வடக்கு பிளாக்கில் இருப்பதாக கூறியிருந்தார். பத்திரமாக இருக்குமே தவிர மக்களின் பார்வைக்கு வெளியிடப்படாது என்பதை சொலிசிட்டர் ஜெனரல் போகிற போக்கில் ஒரு கவிதையைப் போல சொல்லி விட்டு போகிறார்.
அப்போது நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி வெளிநாடுகளில் இருந்து 36 ஆயிரம் தகவல்களை கருப்பு பண விவகாரம் தொடர்பாக பெற்றிருப்பதாகவும், வெளியிட மாட்டோம் என்று உறுதியளித்துதான் பெற்றுள்ளதாகவும், மீறி வெளியிட்டால் இன்னுமுள்ள தகவல்கள் கிடைக்காது என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இப்படிப் பெற்ற தகவல்களும் கூட ஜெர்மன், பின்லாந்து போன்ற பெரிய நாடுகளே தந்திருந்தாலும் அவை அதிகாரப்பூர்வமற்றவை என்பதால் நடவடிக்கை எடுக்க இயலாது என்று அப்போதைய காங்கிரசு அரசு தெளிவாக கூறி விட்டது. இதற்கு பதிலாக கையில் இருக்கும் விவரத்துடன் வருமான வரித்துறையில் சம்பந்தப்பட்ட நபர் சொல்லியுள்ள வருமானத்தை ஒப்பிட்டுப் பார்த்து, மீதிப் பணத்திற்கு அவரிடம் வரி வசூலிக்க சொல்லி இருக்கிறார்கள்.
இரண்டாவதாக, இப்போது சுவிஸ் வங்கிக்கு போய் பணம் போடுவது என்பதே காலாவதியான முறையாகி விட்டது. கருப்பு பணத்தை கையாளும் சந்தையில் ஸ்விஸ் வங்கி மூன்றாம் இடத்தில்தான் இருக்கிறது. முதல் இடத்தை பிடித்திருப்பது அமெரிக்காவில் ஒரே முகவரியில் 2.17 லட்சம் நிறுவனங்களை பதிவு செய்து வைத்திருக்கும் டெலாவர் மாநிலம்தான். இரண்டாம் இடம் ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்ப்பரேட் வரி ஏய்ப்பு மற்றும் நிதி சுதந்திர மையமான லக்சம்பர்க். நான்காவது இடம் சில ஆயிரம் மக்களை மட்டுமே கொண்ட கேமன் தீவுகள் என்ற வரியில்லா சொர்க்கம். ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பது காலனிய காலத்தில் கொள்ளையடித்த இங்கிலாந்து கோடீஸ்வரர்களின் பணத்தை இப்போதும் மூலதனமாக பராமரிக்கும் சிட்டி ஆஃப் லண்டன் என்ற லண்டனுக்குள்ளேயே இயங்கும் நிழல் நகரம்.
டெலாவர்இப்போது அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமெரிக்காவின் டெலாவருடனும், நிழலுலக லண்டன் மாநகரத்துடனும் பொருளாதார ரீதியிலான உறவுகளை துண்டிக்க முடியாது. அல்லது அங்கு வைக்கப்பட்டுள்ள இந்திய தரகு முதலாளிகளின் இலட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் பெறுமான வங்கிக் கணக்குகளை முடக்கவும் இயலாது.
மூன்றாவதாக, பார்ட்டிசிபேட்டரி நோட் (பங்கேற்கும் குறிப்பு) மூலமாக முதலீடு செய்பவர் யார் எனத் தெரிவிக்காமலே அந்நிய நாட்டில் இருந்து யார் வேண்டுமானாலும் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய இப்போது முடியும். கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் ரூ 1.73 லட்சம் கோடி ரூபாய் இந்த வழியாக இந்தியாவுக்குள் வந்துள்ளதாக மத்திய பொருளாதார புலனாய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த வழிமுறை மூலமாகத்தான் கார்ப்பரேட்டுகளும், மூலதன சூதாடிகளும், பண முதலைகளும் தங்களுக்கு தேவையான கருப்பு பணத்தை கொண்டு வரவும், வெளியேற்றவும் செய்கின்றனர். பங்குச் சந்தையில் ஏற்படும் திடீர் ஏற்ற இறக்கங்களும், ரூபாய் மதிப்பில் ஏற்படும் சுனாமிகளும் சேர்ந்து இந்த பணப் பரிமாற்றத்துக்கு உதவி செய்கின்றன. இப்படியான தாராளமயத்தை சேர்ந்து பாஜகவும் ஆதரிக்கிறது. எனவே இந்த 64 சதவீத பணத்தை இப்போதைய மோடி அரசும் கைப்பற்றப் போவதில்லை.
நான்காவதாக, வரியில்லா சொர்க்கங்களான மொரிசியஸ் போன்ற குட்டி தீவுகள் மூலமாக இந்தியாவுக்குள் கொண்டு வரப்படும் அந்நிய நேரடி முதலீடுகள் கருப்பு பண பொருளாதாரத்தின் முக்கிய அடிப்படையாக உள்ளன.. இந்தியாவுக்குள் 2009-ல் இப்படி வந்த முதலீடு நாட்டுக்குள் வந்த மொத்த அந்நிய முதலீட்டில் 21%. 2000-11 வரை வந்துள்ள அந்நிய முதலீடுகளில் 41.8% மொரிசியசிலிருந்தும், 9.17% சிங்கப்பூரில் இருந்தும் வந்துள்ளன. இந்தியாவின் மொத்தப் பொருளாதாரத்தில் பாதி கருப்பு பணம்தான்.
இவ்வாறு வரியில்லா சொர்க்கம் மூலமாக வந்து போகும் அந்நிய முதலீடுகளை சிறப்பு புலனாய்வுக் குழுவோ மோடி அரசோ நிறுத்த முடியாது. ஏனெனில் இதெல்லாம் சட்டப்படி சரி எனத் தம்மை நிறுவிக் கொண்டவை. அரசே டாஸ்மாக் கடையை திறந்த பிறகு எப்படி கள்ளச் சாராயத்துக்கு தேவையில்லாமல் போய் விட்டதோ, அதே போல தாராளமயம் வந்த பிறகு கருப்பு பணம் என்று தனியாக ஏதுமில்லாமல் போய் விட்டது.
2000-ல் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் மூலமாக இந்திய தரகு முதலாளிகளும் இங்கிருந்தபடியே இந்தியாவுக்குள் முதலீடு செய்து மோசடியைக் கண்டுபிடித்த சில வருவாய்த் துறை அதிகாரிகள் இந்நிறுவனங்களுக்கு மூலதன ஆதாய வரியையும், வரி கட்ட தவறியதற்காக அபராதத்தையும் செலுத்தும்படி தாக்கீது அனுப்பினர். உடனடியாக மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் கீழிறங்கத் துவங்கியது. இந்தியாவில் இருந்து வெளியேறப் போவதாக அந்நிய முதலீட்டாளர்கள் மிரட்ட துவங்கினர். உடனடியாக அப்போது நிதியமைச்சராக இருந்த பா.ஜ.க.வின் யஷ்வந்த் சின்கா ”மொரிசியஸ் நாட்டில் பதிவு செய்த கம்பெனிகள் எவையும் இந்தியாவில் வரி செலுத்த தேவையில்லை” என மத்திய நேர்முக வரிகளுக்கான வாரியத்தின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பினார்.
இதற்கு எதிராக டெல்லி உயர்நீதி மன்றத்தில் ‘ஆசாதி பச்சாவோ ஆந்தோலன்’ என்ற அமைப்பு பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தது. ”இந்திய வருமான வரிச்சட்டத்துக்கு எதிரானது, வரி ஏய்ப்பை  ஊக்குவிப்பதுதான் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம்” என்று கூறி டெல்லி உயர்நீதி மன்றம் யஷ்வந்த் சின்காவின் சுற்றறிக்கையை ரத்து செய்தது. ”அந்நிய முதலீடுகளை ஈர்க்க வேண்டுமானால் இத்தகைய சலுகைகளை கொடுத்தே ஆக வேண்டும்” என்று உச்சநீதி மன்றத்தில் பாஜக அரசு மேல்முறையீடு செய்தது. உச்சநீதி மன்றமும் அரசுக்கு ஆதரவாக வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஒரு சட்டபூர்வ நடவடிக்கைதான் என்று தீர்ப்பளித்தது.
2012 மே மாதம் வரி தவிர்ப்பு ஒப்பந்தங்களை பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க ஒரு சட்டமே கொண்டு வந்தார் அன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. அந்த சட்டத்தில் வரி ஏய்ப்பு குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பை வருவாய்த் துறைக்கு மாற்றி விட்டது அரசு. வரி ஏய்ப்பு செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியத்திலிருந்து கார்ப்பரேட்டுகளை காப்பாற்றியிருந்தது அரசு.
இச்சட்டம் வரப் போவதாக சொன்னவுடனேயே அமெரிக்கா இந்தியாவை மிரட்டத் துவங்கியது, முதலாளித்துவ பத்திரிகைகளோ பன்னாட்டு நிதி முதலீடுகளுக்கான வாய்ப்பை இந்தியா இழந்து விட்டதாக அலறின. உடனடியாக இந்த சட்ட அமலாக்கத்தினை ஓராண்டுக்கு தள்ளிவைப்பதாக அறிவித்தார் பிரணாப் முகர்ஜி.
மோடி சிறப்பு புலனாய்வுக் குழுவின் மூலம் கருப்புப் பணத்தை இந்தியாவுக்குள் கட்டி இழுத்து வருவார் என்கின்றன ஊடகங்கள். நடப்பது சூதாட்டம், இதில் நியாயமாக வரி கட்டிய பிறகுதான் சூதாடியிருக்கிறானா என்பதை மட்டும்தான் இவர்கள் விசாரிக்கப் போகிறார்கள். சட்டப்படியே சூதாட்ட கிளப்புகளை நடத்த அரசு அனுமதி தந்த பிறகு யாரைப் போய் பிடிக்கப் போகிறார்கள் இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவினர் என்பது தான் நம்முன் உள்ள மையமான கேள்வி.
எப்படியோ விரைவில் யார் இந்த மோடி, எதற்காக இந்த பாஜக அரசு போன்ற கேள்விகளுக்கு நாம் சொன்ன விடையை இனி மக்கள் தமது சொந்த அனுபவத்தில் உணரப் போகிறார்கள்.
மோடிக்கு கொடிபிடித்த அறிஞர் கூட்டம் மட்டும் அதை ஏற்காமல் தமது அம்மணத்தையே உடை என சாதிக்க கூடும்!
-    கௌதமன். vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக