திங்கள், 16 ஜூன், 2014

ராமநாதபுரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கைது: தமிழக பாஜக கண்டனம்

ராமநாதபுரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கைது செய்யப்பட்டதற்கு, பாஜக மாநிலத் தலைவரும், மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டணத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு மாநில ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் இரண்டு நாள் கூட்டத்தின்போது, அதன் முக்கிய தலைவர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட தொண்டர்களை காவல் துறையினர் கைது செய்தது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.
மாநில ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தேவிப்பட்டணத்திலுள்ள விவேகானந்தா வித்யாலய மெட்ரிக் பள்ளியில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர். அகில இந்தியப் பொறுப்பாளர்கள், தென் பாரத அமைப்பாளர்கள் உட்பட தமிழகமெங்குமுள்ள முக்கிய ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

காலையிலிருந்து நடைபெற்ற கூட்டத்தின் ஒரு நிகழ்ச்சியாக மாலை நேரத்தில் தேவிப்பட்டணம் நவபாஷான நவக்கிரக சந்நிதியில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களைப் பார்த்து இங்கு கூட்டம் கூடக் கூடாது கலைந்து செல்லுங்கள் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்.
அதனை ஏற்று ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் நவக்கிரக சந்நிதியிலிருந்து கலைந்து சென்று கொண்டிருந்த போது அவர்களை வழிமறித்து எவ்விதக் காராணமும் கூறாமல் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு பொது நல அமைப்பு என்பதும், அதற்கான கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்படுவதும் வழக்கமான ஒன்று. நாட்டின் எப்பகுதியிலும் ஆர்.எஸ்.எஸின் செயல்பாடுகளுக்கும், நடைமுறைகளுக்கும் எந்தத்தடையும் இல்லாத நிலையில் தேவிப்பட்டணத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் எவ்விதக்காரணமுமின்றி கைது செய்யப்பட்ட சம்பவம் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க தமிழகக் காவல்துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்  tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக