சனி, 14 ஜூன், 2014

உலக கோப்பை கால்பந்து கோலாகலமாக துவங்கியது !

சாவ்போலோ: உலக கோப்பை கால்பந்து போட்டி, வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக துவங்கியது. இதன் துவக்க விழாவை, உலகம் முழுவதும் 300 கோடி பேர் கண்டு ரசித்தனர்.சர்வதேச கால்பந்தாட்ட கழக கூட்டமைப்பு (பிபா) சார்பில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டிற்கான போட்டியை பிரேசிலில் நடத்துவதற்கான ஏற்பாடுகள், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கியது. போட்டியை சிறப்பாக நடத்தும் விதமாக, சகல வசதிகளுடன் கூடிய புதிய மைதானங்கள்,  வெளிநாட்டு வீரர்கள் தங்குவதற்கான வசதிகள், ரசிகர்களுக்கு தேவையான வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பிரேசில் நாட்டு அரசாங்கம் சுமார் ரூ.84 ஆயிரம் கோடியை செலவழித்தது.
இதற்கு உள்நாட்டில் கடும் எதிர்ப்பு நிலவியது. ஆனாலும், உலக கோப்பை கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து விதமான ஏற்பாடுகளையும் பிரேசில் நாட்டு அரசாங்கம் கடைசிவரை மேற்கொண்டது. உலகின் பல நாடுகளிலும் ஒரு மாதத்துக்கு முன்பாகவே கவுன்ட் டவுன் துவங்கிய நிலையில், அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த உலக கோப்பை கால்பந்து திருவிழா சாவ்போலோ நகரில் உள்ள எரீனா கோரிந்தியான்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு சம்பா நடனம், பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக துவங்கியது. இது துவங்குவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பாகவே ரசிகர்கள், போட்டியில் பங்கேற்கும் 32 நாடுகளை சேர்ந்த அணி வீரர்கள் மைதானத்தில் குவிந்தனர். சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அமரக்கூடிய அரங்கம் நிரம்பி வழிந்தது.

அமெரிக்க நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸ், பாப் பாடகர் பிட்புல் குழுவினர், பிரேசில் பாடகி கிளாடியா ஆகியோர் `அனைவரும் ஒன்றே` என்ற உலக கோப்பை கால்பந்துக்கான பாடலை பாடி அனைவரையும் மகிழ்வித்தனர். இந்நிகழ்ச்சியில், பிரேசில் நாட்டு அதிபர் தில்மா ரவுசெப், பிபா தலைவர் செப்பிளாட்டர், ஐநா சபை பொதுச்செயலாளர் பான்கி மூன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள், கால்பந்து நட்சத்திரங்கள், ஹாலிவுட் பிரபலங்கள், விவிஐபிக்கள் ஏராளமானோர் குவிந்து  கலைநிகழ்ச்சியை கண்டுகளித்தனர். அதுமட்டுமின்றி, டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட துவக்க விழா நிகழ்ச்சியை உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள சுமார் 300 கோடி ரசிகர்கள் விடிய விடிய கண்டு ரசித்தனர். கலைநிகழ்ச்சியை தொடர்ந்து போட்டி துவங்கியது. மாற்றுத் திறனாளி ஒருவர் போட்டியை துவக்கி வைத்தார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணிக்கு முதல் போட்டி துவங்கியது. முதல்போட்டியில் பிரேசில்-குரோஷியா அணிகள் மோதின. இந்த போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அபார வெற்றி பெற்றது. இதனை பிரேசில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர். இந்த உலக கோப்பை கால்பந்து போட்டி திருவிழாவில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா உள்ளிட்ட 32 அணிகள் பங்கேற்றுள்ளன. இப்போட்டி அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடக்கிறது. கால்பந்து திருவிழா நடைபெறும் இந்த ஒரு மாத காலமும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான் - tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக