வெள்ளி, 6 ஜூன், 2014

காட்சிகளை ஸ்பொன்ஸர் செய்து இலவசமாக தியேட்டர்களில் மலையாளப்படம் ! புதியமுறை திரைப்பட விநியோகம்

இந்தியா மட்டுமல்லாது, உலகெங்கிலும் சினிமா தொழில் என்பது வணிகம்
என்ற ஒற்றை அச்சாணியை மட்டுமே மையமாக கொண்டு இயங்கி வருகிறது. நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பெரிய தொகையை சம்பளமாக தந்து திரைப்படம் தயாரிக்கும் நிறுவனங்கள், படத்தை ஏரியா வாரியாக விற்பனை செய்வதன் மூலம் போட்ட முதலீட்டை திருப்பி எடுக்கின்றன. அப்படி, ஏரியா உரிமம் எதிர்பார்த்த விலைக்கு போகவில்லை என்றால், தயாரிப்பு நிறுவனங்களே திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து, படத்தை திரையிட்டு, டிக்கெட் கட்டணத்தின் மூலம் முதலீட்டு தொகையில் ஒரு பகுதியை சம்பாதித்து விடுவதுண்டு. தற்போது வரை இவை இரண்டு மட்டுமே சினிமா தொழிலின் சுழற்சி முறையாக இருந்து வருகிறது. ஆனால், இந்த தொழில் மரபை தகர்க்கும் ஒரு புதிய முயற்சி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் வரும் 13ம் தேதி நிகழவுள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்களுக்கு ‘ஸ்பான்ஸர்கள்’ இருப்பது போல், திரையரங்குகளில் காட்டப்படும் படத்துக்கும் விளம்பரதாரர்களை ஸ்பான்ஸர்களாக்க மனோஜ் குமார் என்ற தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.
எஸ்.வினோத் குமார் இயக்கத்தில் நந்து, முன்னா, மகாலட்சுமி ஆகியோரின் நடிப்பில் ‘டெஸ்ட் பேப்பர்’ என்றொரு படத்தை இவர் தயாரித்துள்ளார். இந்த படத்தை கேரளா முழுவதும் மக்களுக்கு டிக்கெட் இல்லாமல் இலவசமாக திரையிடப் போவதாக மனோஜ் குமார் அறிவித்துள்ளார்.

இந்த நவீன முயற்சியின் முதல் கட்டமாக வரும் 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் மட்டும் ‘டெஸ்ட் பேப்பர்’ படம் திரையிடப்படும். இந்த படம் ஓடும் போது திரையிடப்படும் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் கட்டணம் வாயிலாக மக்கள் டிக்கெட்டுக்கு செலுத்துவதற்கு நிகரான லாபம் கிடைத்து விடும் என்று இவர் கூறுகிறார்.

டி.வி. நிகழ்ச்சிகளில் வருவதைப் போல், 10 நிமிடத்துக்கு ஒரு முறை விளம்பரங்களை திரையிட்டு ‘கழுத்தறுக்காமல்’ படம் தொடங்குவதற்கு முன்னரும், இடைவேளையின் போதும் மட்டும் விளம்பரங்கள் திரையிடப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

தங்கள் பகுதியில் ‘டெஸ்ட் பேப்பர்’ படம் ஓடும் திரையரங்கத்தில் பெயரைக் கூறி தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இலவச டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக