வெள்ளி, 20 ஜூன், 2014

இந்தி திணிப்பு : நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் !

நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது வாலைக் குழைத்துக் கொண்டு – தின்னத்தானே போகும். தமிழருவி, புரட்சிப்புயல், கேப்டன், மருத்துவர் அய்யா உள்ளிட்ட பல விளக்குமாருகள் சேர்ந்து, பாஜக வை சுத்தப்படுத்தி, சிங்காரித்து பதவியில் அமர வைத்தன. உட்கார்ந்தவுடனேயே அது தனது புத்தியைக் காட்டத் தொடங்கி விட்டது.
போர்ஜரி சர்டிபிகேட் புகழ், அன்னை சீதாதேவி, ஸ்மிருதி இரானி அம்மையார், “வேதம் மற்றும் உபநிடதங்களை பள்ளிப்பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார். அடுத்து வந்திருக்கிறது இந்தி திணிப்பு.
இந்து-இந்தி-இந்தியா என்ற தனது கொள்கையை திணிப்பதில் பார்ப்பன பாசிச கும்பலுக்கு உள்ள வெறித்தனத்தைப் பற்றி புதிதாக விளக்கத் தேவையில்லை. வாய்ப்பு கிடைத்தவுடனே அவற்றை சாத்தியமான வழிகளில் எல்லாம் திணிப்பதுதான் பார்ப்பன இந்துத்துவா சக்திகளின் நடைமுறை. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்தித் திணிப்பை பிற பெரும்பான்மை இந்தி பேசாதவர்கள் மீது துவங்கி உள்ளனர். வெளியுறவுத் துறையில் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைத் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பு ஏற்கெனவே வந்திருந்தது.

தற்போது கடந்த மே 27 ஆம் தேதி பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், வெளியுறவுத் துறை உள்ளிட்ட எல்லா அமைச்சகங்களின் அதிகாரிகள் துவங்கி அலுவலர்கள் வரை சமூக வலைத்தளங்களில் அனைத்தையும் இந்தியில் எழுத வேண்டும் என்று  உள்துறை அமைச்சகத்திலிருந்து உத்திரவிட்டிருக்கின்றனர். அடுத்து வெளியான ஒரு சுற்றறிக்கையில் இப்படி கறாராகப் பின்பற்றும் முன்னணியான ஊழியர்களுக்கு பரிசுத் தொகையையும் உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
உடனடியாக கருணாநிதி இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ”ஒருவரது விருப்பத்திற்கு மாறாக அவர் மீது அரசாணை மூலம் இந்தி மொழியைத் திணிக்கும் செயலின் ஆரம்பம்தான் இது” என்று அதில் குறிப்பிட்டிருந்தார். ”1938ல் இந்தியை கட்டாய பாடமாக்கிய போதும், 1965ல் இந்தி ஆட்சி மொழிச்சட்டம் நடைமுறைக்கு வருமென்று அறிவித்த போதும் ஏற்பட்ட பேரெழுச்சிகளையும், கிளர்ச்சியையும் வரலாறு விரிவாக பதிவு செய்திருக்கிறது.” ”மொழிப் போர்க்களங்கள் இன்னும் உலர்ந்து போகவில்லை” எனக் காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
”எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் சமமாகப் பாவிக்க வேண்டும். அனைத்தையுமே மத்திய ஆட்சி மொழிகளாக மாற்ற வேண்டும். இந்திக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பதன் மூலம், இந்தி பேசாத இந்திய மக்களிடையே பேதங்களைப் புகுத்தி, அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கிடும் முயற்சியின் முதற்கட்டமே இது” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் கருணாநிதி.
தமிழகம் மட்டுமின்றி பரூக் அப்துல்லா, மாயாவதி, ஒடிசாவில் பிஜூ ஜனதா தள் எனப் பலரும் தங்களது எதிர்ப்பை இம்மொழித்திணிப்புக்கெதிராக பதிவு செய்துள்ளனர். பல இடங்களிலும் இதற்கு எதிர்ப்புகள் பெருகவே, வேறு வழியில்லாத ஜெயலலிதாவும் மோடிக்கு ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக தொடருவதற்கு 1963ல் மத்திய அரசால் தரப்பட்ட உறுதிமொழியை நினைவுபடுத்தி, உத்திரவை வாபசு பெறும்படி கடிதம் எழுதியிருக்கிறார்.
கருணாநிதியின் அறிக்கைக்கு யோக்கியமாக பதில் சொல்ல வக்கில்லாத காவி கிரிமினல்கள் தங்களது வழக்கமான வார்த்தை பித்தலாட்டத்தில் இறங்கி விட்டனர். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், மத்திய உள்துறை அமைச்சர் தனது ட்விட்டரில் ”அமைச்சகம் நாட்டின் எல்லா மொழிகளையும் முன்னேற்றப் பாடுபடும்” என்று உறுதியளிக்கிறார். இந்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறோம் என்று சமாளிக்கிறார்கள்.
தமிழ் இந்து நாளேடோ, ”மொழிப் போர்க்களங்கள் இன்னும் உலர்ந்து போய் விடவில்லை” என்ற வாக்கியத்தை மேற்கோள் காட்டி, கருணாநிதியை கிண்டல் செய்யும் சாக்கில் தமிழகத்தின் மொழிப் போராட்டத்தை கிண்டல் பண்ணியிருக்கிறது. தமிழ், தமிழினம், தமிழிசை, தமிழ் வழிபாடு, தமிழ் ஆட்சிமொழி என்று சொன்னவுடனேயே பார்ப்பனக் குஞ்சுகளின் செவியில் அது நராசராமான வார்த்தைகளாகத்தான் ஒலிக்கும் என்பதற்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு.
1938ல் தாளமுத்து நடராசன் துவங்கி, 1965ல் சின்னச்சாமி என்ற திமுக தொண்டன் துவங்கி ஏறக்குறைய 70க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்தி ஆட்சிமொழிக்கெதிராக தீக்குளித்துப் போராடிய தமிழகம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டது. அந்த மரபின் தொடர்ச்சிதான், தமிழ் இசைக்கான போராட்டம், ஆலயத்தில் தமிழ் வழிபாட்டுக்கான போராட்டம், தில்லையில் தேவாரம் பாடும் போராட்டம், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கான போராட்டம் ஆகிய அனைத்தும். தமிழ் மக்களின் இந்தப் போராட்டங்கள் அனைத்திற்கும் அன்று முதல் இன்று வரை பார்ப்பனக் கும்பல் எதிரியாகத்தான் இருந்து வந்திருக்கிறது.
தற்போது ஆட்சியதிகாரத்தில் பார்ப்பன பாசிசம் அமர்ந்து விட்டது. இல்லை, தமிழருவி, வைகோ, ராமதாசு, விஜயகாந்த் போன்ற தமிழின விரோதிகள் மோடிக்கு பல்லக்குத் தூக்கி பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள். குடியைக் கெடுத்த இந்தக் கோடரிக் காம்புகள் இப்போது இந்தி திணிப்புக்கு எதிராக கண்டன அறிக்கை விடுகிறார்கள். இந்த அறிக்கை பிரிவினைக்கு வித்திடும் என்று எச்சரிக்கை விடுகிறார் கோமாளி வைகோ. குறைந்த பட்சம் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து மதிமுகவின் பிரிவினையை வைகோ அறிவிக்கட்டும். தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபை நாசமாக்கும் விதத்தில் பாரதிய ஜனதாவுக்கு காவடி எடுத்த இந்த துரோகிகளை தமிழ் மக்கள் அடையாளம் காண வேண்டும்.
இந்து-இந்தியா என்ற இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவதும் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடுவதும் வேறு வேறல்ல. மோடியின் பார்ப்பன பாசிச ஆட்சிக்கு எதிரான முதல் குரல் தமிழகத்திலிருந்து எழும்பட்டும். vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக