வியாழன், 19 ஜூன், 2014

விசா இன்றி வங்கதேச மக்களை அனுமதிக்க அசாம் எதிர்ப்பு

வங்கதேசத்தில் இருந்து அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களைக் கண்டுபிடித்து வெளியேற்றுவோம் என்று பா.ஜனதா வாக்குறுதி அளித்தது. அதன்படி வங்காளதேசத்தவர்களை தங்கள் நாட்டிற்கு அனுப்புவதில் மாநில பா.ஜனதா எம்.பி.க்கள் முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள் விசா இல்லாமல் இந்தியாவிற்கு வர அனுமதிப்பது, ஒரே விசாவில் பன்முக நுழைவு உள்ளிட்ட சில திட்டங்களை மத்திய அரசு தயாரித்துள்ளது. பின்னர் அதனை அசாம் மாநில அரசுக்கு அனுப்பி கருத்து கேட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் தருண் கோகாய் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-


விசா தளர்வு உள்ளிட்ட சில திட்டங்கள் பற்றி மத்திய அரசு கருத்து கேட்டிருக்கிறது. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள் விசா இல்லாமல் இந்தியாவிற்கு வர அனுமதிப்பது, ஒரே விசாவில் பன்முக நுழைவு ஆகிய திட்டங்களுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.

ஏற்கனவே முறையான விசா வைத்துக்கொண்டு இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டவர்களை கண்டுபிடிப்பதற்கே கடினமாக உள்ள நிலையில், விசா இல்லாமல் வருபவர்களை கண்டுபிடிப்பது அரசு அதிகாரிகளுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.

டாக்காவில் இருந்து ஷில்லாங் வழியாக கவுகாத்திக்கு பஸ் சர்வீஸ், தண்ணீர் போக்குவரத்து ஆகிய திட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வங்காளதேசத்தவர்களுக்கு பணி அனுமதி வழங்கும் திட்டத்திற்கும் அசாம் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது   maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக