புதன், 11 ஜூன், 2014

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு ! பிரதமரிடம் முதல்வர் சித்தராமையா கோரிக்கை !

புதுடெல்லி: காவிரி பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகாவின் மேல் முறையீடு மனு நிலுவையில் இருப்பதால், நடுவர் மன்ற உத்தரவை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற கோரிக்கையை, பிரதமர் நரேந்திர மோடியிடம் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தலைமையிலான சர்வகட்சி தலைவர்கள் நேரில் கேட்டுக் கொண்டனர். இந்த கோரிக்கை அடங்கிய மனுவையும்  அவர்கள் கொடுத்தனர்.
காவிரி நடுவர் மன்ற உத்தரவை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய நீர்ப்பாசன அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா, இது தொடர்பாக மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், சட்ட நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நேற்று முன்தினம் பெங்களூரில் அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் காவிரி பிரச்னை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதல்வர் சித்தராமையா தலைமையிலான அனைத்து கட்சி குழுவினர், நேற்று காலை டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினர்.

பகல் 11.15 மணிக்கு சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு கொடுத்தனர். மேலும் பிரதமரிடம் கர்நாடகா - தமிழகம் இடையிலான காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னை பல ஆண்டுகளாக உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் கடந்த 1990ம் ஆண்டு அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பை 2007 பிப்ரவரி 5ம் தேதி வழங்கியது. அதில் காவிரி படுகையில் கிடைக்கும் 736 டி.எம்.சி. தண்ணீரில் கர்நாடகா வுக்கு- 272, தமிழகத்திற்கு- 419, கேரளாவுக்கு-30, புதுச்சேரிக்கு-5 மற்றும் இதர பணிகளுக்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

மேலும் தண்ணீர் திறப்பதை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல பரிந்துரைகள் செய்திருந்தது. காவிரி நடுவர் மன்றத்தின் இந்த தீர்ப்பால்   கர்நாடக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அதே ஆண்டு மே மாதம் உசநீதிமன்றத்தில் கர்நாடக அரசின் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளோம். அம்மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் செய்துள்ள பரிந்துரையை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எங்கள் மாநிலத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், அது கர்நாடக விவசாயிகளுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படும்.

குடிநீர் பஞ்சமும் ஏற்படும். ஆகவே மேலா ண்மை வாரியம் அமைக்கும் எந்த முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது என்று பிரதமரிடம் முதல்வர் சித்தராமையா எடுத்து கூறினார். சித்தராமையா திருப்தி: பிரதமர் மோடியை சந்தித்தபின் முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாநிலத்திற்கு பாதிப்பு ஏற்படும் எந்த முடிவும் எடுக்க மாட்டோம் என்று பிரதமர் உறுதியளித்தார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்பட எந்த முடிவும் எடுக்கமாட்டோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.பிரதமரின் பதில் திருப்தி அளித்துள்ளது என்றார்.


மக்களவையில் அமளி
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் நேற்று விவாதம் தொடங்கியது. விவாதத்தை தொடங்கி வைத்து பா.ஜ. கட்சியின் பிரதாப் ரூடி பேசினார். அதிமுக சார்பில் தம்பிதுரை பேசுகையில், காவிரி பிரச்னையில் கர்நாடக அரசும் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசும் நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமல் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். காவிரி பிரச்னை தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இருப்பதால் அவையில் இந்த பிரச்னையை எழுப்பக் கூடாது என்று கர்நாடகாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில், காவிரி பிரச்னை நீதிமன்றத்தில் இருப்பதால் அவையில் அது குறித்து பேச வேண்டாம் என்று தம்பிதுரையை அவைக்கு அப்போது தலைமை வகித்த தலைவர் சேத்தி கேட்டுக் கொண்டார். இதனால், சிறிய சலசலப்புக்கு இடையே மீண்டும் அவையில் விவாதம் தொடர்ந்தது. மாநிலங்களவையில், காவிரி பிரச்னையில் கர்நாடக அரசு நடுவர் மன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படுவதாக அதிமுக எம்.பி. மைத்ரேயன் குற்றஞ்சாட்டினார். மக்களவையில் பிரச்னை எழுப்ப எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மாநிலங்களவையில் இந்தப் பிரச்னை குறித்து பேச அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக