திங்கள், 2 ஜூன், 2014

புதிய தெலங்கான அமைச்சரவை சந்திரசேகர ராவின் குடும்ப அமைச்சரவையானது ?

ஹைதராபாத்: நாட்டின் 29வது மாநிலமான தெலுங்கானாவின் முதலாவது முதல்வராக சந்திரசேகர ராவ் இன்று பதவியேற்றுக்கொண்ட நிலையில், அவரது அமைச்சரவை உருவாக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரவையில் குடும்ப ஆதிக்கம் அதிகம் இருப்பதுடன் ஒரு பெண்ணுக்கு கூட வாய்ப்பு அளிக்கப்படவில்ல தெலுங்கானாவின் முதலாவது முதல்வராக 11 அமைச்சர்களுடன் சந்திரசேகரராவ் பதவியேற்றுக்கொண்டார். அமைச்சரவையில் அவரது மகன் ராமாராவ் மற்றும் உறவுக்காரர் ஹரிஷ் ராவ் ஆகியோருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
சந்திரசேகரராவ் மற்றும் அவரது உறவினர்கள் அம்மாநிலத்தின் உயர்ஜாதி பிரிவான வேலமா சமூகத்தை சேர்ந்தவர்கள். மற்றொரு முன்னேறிய ஜாதி பிரிவான ரெட்டி சமூகத்தை சேர்ந்த 4பேருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம், தலித் ஆகிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. பெண் ஒருவர்கூட அமைச்சரவையில் இடம்பெறவில்லை. சார்புதன்மையுடன் அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ள விமர்சனம் குறித்து ராமாராவிடம் நிருபர்கள் கேட்டதற்கு "இந்த விமர்சனத்துக்கு எங்கள் செயல்பாட்டின் மூலம் பதிலடி கொடுப்போம். இப்போதுதான் ஆட்சியை ஆரம்பித்துள்ளோம், இப்போதே எங்களைப்பற்றிய ஒரு முடிவுக்கு வர வேண்டாம். அமைச்சரவை விரிவாக்கம் வரும் 18ம்தேதி நடைபெறுகிறது. அப்போது விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தெலுங்கானா முதல்வரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும், அவர்தான் வரவில்லை" என்றார். ஆனால் அழைப்பிதழ் எப்படி அளிக்கப்பட்டது என்பதை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார். விமர்சனங்களை தவிர்க்கவும், ஓட்டு வங்கியை பலப்படுத்தவும், அமைச்சரவையிலுள்ள ஒரே ஒரு இஸ்லாமியரான முமகது அலி மற்றும் தலித் சமூகத்தை சேர்ந்த ராஜய்யா ஆகிய இருவரையும் துணை முதல்வர்களாக்க சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக