திங்கள், 16 ஜூன், 2014

அ.தி.மு.க.,- - பா.ஜ., உறவு மீண்டும் ? தே.மு.தி.க., - பா.ம.க.,வினர் பதற்றம்

அ.தி.மு.க.,- - பா.ஜ.,விற்கு இடையே பல ஆண்டுகளுக்கு பின், மீண்டும் உறவு மலரும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தே.மு.தி.க.,வினரும் பா.ம.க.,வினரும் விரக்தியடைந்துள்ளனர்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அ.தி.மு.க.,- - பா.ஜ., இடையே நட்பு இருந்தது. ஆனால், கூட்டணி மாற்றம் ஏற்பட்டதால், இந்த உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன்பின், பா.ஜ.,வுடன் கூட்டணி வைப்பதை அ.தி.மு.க., தலைமை தவிர்த்து வருகிறது.கூட்டணி வாய்ப்பு
லோக்சபா தேர்தலில், பா.ஜ., பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பரான மோடி, பா.ஜ., கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டதால், பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.அதனால், தனித்து போட்டியிட அ.தி.மு.க., தலைமை முடிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில், அ.தி.மு.க.,- - தி.மு.க.,விற்கு மாற்றாக, தே.மு.தி.க.,- - பா.ம.க., - -ம.தி.மு.க.,- -கொ.ம.தே.க., --ஐ.ஜே.கே.,- புதிய நீதிகட்சி ஆகிய கட்சிகளுடன் பா.ஜ., கூட்டணி அமைத்தது.ஆனால், இக்கூட்டணிக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. இதனிடையே, மோடி பிரதமர் பதவி ஏற்பு விழாவில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பார் என கூறப்பட்டது.
ஆனால், பதவி ஏற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக் ஷே அழைக்கப்பட்டதை காரணம் காட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, விழாவை முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்தார்.

ஆதாயம் கிடைக்குமா?@@
அதேநேரத்தில், வரும் 3ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக, முதல்வர் ஜெயலலிதா டில்லி செல்லவுள்ளார்.இந்த சந்திப்பிற்கு பின், பா.ஜ., - -அ.தி.மு.க., இடையே மீண்டும் பழைய உறவு மலருவதற்கு வாய்ப்புள்ளதாக, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து தோல்வி அடைந்துள்ள நிலையில், கட்சியை வளர்க்க மத்திய அரசிடம் இருந்து ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில், தே.மு.தி.க., தலைமை உள்ளது. அதேபோல, ஒரு இடத்தை தவிர, போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் தோல்வி அடைந்திருக்கும் பா.ம.க.,வும், பா.ஜ., ஆட்சியில் இடம் பெற்று, தமிழகத்தில் கட்சியை நிலைக்க வைக்க, தலையால் தண்ணி குடித்துக் கொண்டிருக்கிறது.

இன்னொரு இடியாக@@
இதற்காக, பா.ஜ., தலைவர்களை சந்திக்க இரண்டு கட்சியினர் சார்பிலும் முட்டி மோதினர். ஆனால், அது நடக்கவில்லை. இந்த சோகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு, இன்னொரு இடியாக, தற்போது முதல்வர் ஜெயலலிதா, மோடியை சந்திக்க விருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.இருவரும் சந்திக்கும் போது, தமிழக நலன்கள் குறித்துத்தான், நிறைய பேசுவர் என்றாலும், இரு கட்சிகளும் எதிர்காலத்தில் இணைந்து செயல்படுவது குறித்து, பேசவும் வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முடியாத நிலை@@
அப்படியொரு சூழ்நிலை உருவானால், தமிழகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பா.ம.க., - தே.மு.தி.க., போன்றவை பா.ஜ., கூட்டணியில் தொடர்ந்து இடம் பெற முடியாத நிலை ஏற்படும் என்று, பா.ம.க, மற்றும் தே.மு.தி.க.,வினர் மத்தியில் திடீர் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இதுகுறித்து, பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., வட்டாரங்களில் கூறியதாவது:தற்போதைய சூழ்நிலையில், ராஜ்யசபாவில் பா.ஜ.,வுக்கு, மசோதாக்களை நிறைவேற்ற போதுமான அளவுக்கு உறுப்பினர் எண்ணிக்கை இல்லை. அதனால், ராஜ்யசபாவில், 10 உறுப்பினர்கள் வைத்திருக்கும் அ.தி.மு.க.,வின் ஆதரவும் பா.ஜ.,வுக்கு தேவைப்படுகிறது. இரண்டு கட்சிகளும் இணக்கமாக இருந்து செயல்பட வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. அதனால், மோடி -ஜெயலலிதா சந்திப்பிற்கு பின், இரு கட்சிகளும் கட்டாயம் இணைந்தே செயல்படும்.அதனால், தற்போது தமிழகத்தில் பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு, பா.ஜ., தலைமையிடம் முக்கியத்துவம் இல்லாமல் போகும். தமிழக அரசு மூலமாகவும், புதிதாக வழக்கு, வம்புகளும் வரலாம். அதெல்லாம் நினைத்துதான், கட்சியினர் கவலை அடைந்திருக்கின்றனர்.இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர்.

-- நமது சிறப்பு நிருபர் -- யாஹூ தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக