செவ்வாய், 24 ஜூன், 2014

மும்பை போலீஸ் தகுதிதேர்வில் 4 பேர் பலி ! இண்டர்வியுவே ஒரு என்கவுண்டரா ?

மும்பையில் போலீஸ் பணிக்கான தகுதி தேர்வில் 4 பேர் பலியானது தொடர்பாக மராட்டிய உயர் போலீஸ் அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. 4 பேர் சாவு மராட்டிய மனித உரிமைகள் நலசங்கம் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:- போலீஸ் ஆட்சேர்ப்பு, உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டு பலியான 4 பேர் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினருக்கு மராட்டிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், போலீஸ் தேர்வில் பங்குபெற வந்தவர்களுக்கு குடிநீர், உணவு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மராட்டிய அரசு ஏற்படுத்தி தரவில்லை.


இதன் காரணமாக அவர்கள் திறந்தவெளியில் தூங்க நேர்ந்தது. பல்வேறு தேர்வு மையங்களில் மைதானங்கள் குறுகிய அளவில் இருந்ததால், சாலைகளில் தேர்வு நடத்தி வருகின்றனர். மராட்டிய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஐகோர்ட்டு உத்தரவு

இந்த மனு தலைமை நீதிபதி மொகித் ஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, போலீஸ் ஆட்சேர்ப்பு தேர்வுக்கு தடை கோரும் இந்த வழக்கில் மராட்டிய டி.ஜி.பி.சஞ்சீவ் தயாள் மற்றும் மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து 3 வாரத்துக்குள் விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களின் சிகிச்சை செலவை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் மராட்டிய அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக