புதன், 18 ஜூன், 2014

4 மகள்களுக்கு சீதனமாய் 4 பொறியியல் கல்லூரிகள் !

professor-chandrasekarஇந்த மாநாட்டில் பேச வாய்ப்பளித்தமைக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். சரியான தருணத்தில் அவசியமான தலைப்புகளில் இந்த மாநாடு நடைபெறுகிறது. தமிழகத்தில் எங்கும் இல்லாத சூழலில் கடலூர் மாவட்டத்தில், விருத்தாசலத்தில் பெற்றோர் சங்கம் இத்தகைய மாநாட்டை நடத்துகிறது. கல்வி வணிகமயமாகி வருகிறது. எந்த தொழிலிலும் 200 சதவீதம், 300 சதவீதம் லாபம் கிடையாது. பங்குச் சந்தையில்கூட குறியீடு அதிகரிக்கும் போது இவ்வளவு அதிக லாபம் கிடைக்காது. ஆனால் இந்திய அளவிலும், தமிழகத்திலும் பள்ளிக்கூடம் நடத்தினால், கல்வி நிறுவனங்கள் நடத்தினால் பல மடங்கு உத்திரவாத லாபம் பெற முடியும். பள்ளிக்கல்வியை போல் உயர் கல்வியும் இத்தகைய சீரழிவுக்கு ஆளாகி இருக்கிறது. தமிழகத்தில் 19 அரசு மருத்துவ கல்லூரிகள் இருக்கின்றன. கல்வி கட்டணம் ஆண்டுக்கு 12,900 ரூபாய் மட்டும் தான். ஆனால் சுயநிதி கல்லூரிகளில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இதை ஊழல் என்றுதான் சொல்ல வேண்டும்.
பள்ளிக் கல்வியை எடுத்து கொண்டால் நாட்டின் உண்மையான செல்வம் மனித வளம்தான். அந்த வகையில் டீன் ஏஜ் என்று சொல்லக்கூடிய பதின்பருவம் வரையிலான 12 ஆண்டு படிப்பு இன்றியமையாதது. அதை எவ்வாறு வழங்க வேண்டும்?
கல்வி சேவை என சொல்லுகிறார்கள்.  பல ஊர்களில் செல்வந்தர்கள் தங்களது நிலங்களை பள்ளிகளுக்கு தானமாக கொடுத்து அனைவரும் கல்வி கற்பதை வளர்த்தனர். கல்வி சேவை உண்மையாக விளங்கியது. இன்று கல்வியை விற்பவர்கள் யார்? சாராயம் விற்றவர்கள், காவல் துறையால் எச்சரித்து விரட்டபட்டவர்கள், எந்த வேலைக்கும் தகுதியற்றவர்கள் இவர்கள்தான் இன்று கல்வி தந்தைகள், கல்வி வள்ளல்கள்.
சென்னையில் ஒரு கல்வி நிறுவன உரிமையாளர் தனது நான்கு மகள்களுக்கும் ஆளுக்கு ஒரு பொறியியல் கல்லூரியை சீதனமாக கொடுக்ககூடிய மோசமான சூழலில் இருக்கிறோம். இந்த கால கட்டத்தில் உங்கள் இயக்கம் இப்படிப்பட்ட போராட்டத்தை எடுத்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது. தனிமனிதனால் எதையும் சாதிக்க முடியாது. சங்கமாக ஒன்று பட்டு போராடினால் எந்த துயரங்களையும் கடக்கலாம். வெல்ல முடியாத கோரிக்கைகளையும் வென்றெடுக்க முடியும். ஆசிரியர் இயக்கமானாலும், மாணவர் இயக்கமானாலும் தொழிலாளர் இயக்கமானாலும் சங்கமாக திரண்டு போராடினால் மட்டுமே வெல்லமுடியும்.
அந்த காலத்தில் செல்வந்தர்கள் கல்விக்காக தங்கள் நிலங்களை கொடுத்தார்கள், சேமிப்புகளை, நகைகளை கூட கொடுத்தார்கள். ஆனால் இன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்புக்காக 10 சென்ட் நிலத்தை கூட அடமானம் வைக்கவும், நகைகளை விற்று படிக்க வைக்கவும் வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி கட்டணத்திற்கு என்று தமிழக அரசு மூன்று கமிட்டிகளை நியமித்தது. ஆனால் தனியார் பள்ளிகள் நிர்ணயம் செய்த கட்டணங்களை வசூலிப்பதில்லை என்பதை நாங்கள் எங்கும் உரக்க சொல்ல தயாராக இருக்கிறோம். கல்வி துறை அதிகாரிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியும். இந்த சூழலில் பெற்றோர்கள் மாணவர்கள், ஒன்று பட்டு போராட வேண்டியது அவசியமானது ஆகும்.
ஒரு காலத்தில் கல்வி, மருத்துவம் மக்களுக்கு வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால் கல்வியை வணிகப் பொருளாக்கி தனியாரிடம் கொடுத்து விட்டு, தனியார் செய்த வணிகத்தை அரசு செய்கிறது. டாஸ்மாக்கை அரசு நடத்துகிறது. அதிலும் எலைட் பார் என சென்னையில் திறந்து அதன் வியாபார வளர்ச்சியை பெருக்கி, இப்போது மாவட்ட தலைநகரங்களில் எலைட் பார் திறக்க முயற்சி செய்து வருகிறது. பீர் என்ற மது பானத்தை குடிப்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள், மாணவர்கள். டாஸ்மாக் பெருமளவு சமுதாயத்தை சீரழிக்கிறது.
பெற்றோர்களும் மாணவர்களும் இணைந்து போராடினால் தனியார் கல்விக் கொள்ளையை முறியடிக்க முடியும். மேலும் ஆங்கிலம் படித்தால்தான், சாதிக்க முடியும் என விளம்பரம் செய்கிறார்கள். ஆங்கிலம் இல்லாமல் ஏன் முடியாது என்பதை நாம் திருப்பி கேட்க வேண்டும்.
என்னுடைய 18 ஆண்டுகால படிப்புகளில் இரண்டு ஆண்டு மட்டுமே ஆங்கிலம். கிராமத்திலிருந்து அரசு உதவி பெறும் பள்ளியில் தான் படித்தேன். யு.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானிய குழுமம் மூலம் பல கல்லூரிகளுக்கு தர நிர்ணயம் செய்யம் குழுவில் உறுப்பினராக பல்வேறு மாநிலங்களுக்கு ஆய்வுக்கு சென்றிருக்கிறேன். ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டிருக்கிறேன். தாய் மொழி தமிழ் உதவி புரிந்திருக்கிறது என்று உறுதியாக சொல்ல முடியும். படிப்பதை தாய்மொழியில் புரிந்து கொண்டு இணைப்பு மொழி மூலம் வெளிப்படுத்தும் போதுதான் அது முழுமையாகவும் சரியாகவும் இருக்கும். ஆங்கில மூலம் படித்தால் முழுமையாக புரிந்து கொள்ளப்படாமல் பகுதி அளவு புரிதல், சிறிதளவு வெளிப்படுத்தல் என்பதுதான் நிகழும்.
“ஆங்கிலம் பேச தெரியவில்லையா கவலை வேண்டாம் 1 மாதம், 15 நாளில் ஆங்கிலம்” என விளம்பரம் செய்யபடுவதை நீங்கள் பார்க்கலாம். ஆங்கிலம் இல்லாமல் சாதிக்க முடியும் என்பதை நிருபிக்க சில உதாரணங்களை சொல்ல விரும்புகிறேன். உலகில் ஏற்றுமதியில் முதல் 10 இடங்கள் உள்ள நாடுகள்
  1. சீனா
  2. அமெரிக்கா
  3. ஜெர்மனி
  4. ஜப்பான்
  5. பிரான்ஸ்
  6. தென் கொரியா
  7. நெதர்லாந்து
  8. ரஷ்யா
  9. இத்தாலி
  10. இங்கிலாந்து.
இதில் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. மற்ற நாடுகளில் அவரவர் தாய் மொழியில்தான் அரசு நிர்வாகம், கல்வி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பிரான்சில்  ஆங்கிலம் பேச தெரிந்தவர்களை தேடிபிடிக்க வேண்டும். ஜெர்மனியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிப்பு, பல்கலைக்கழகக் கல்வி அனைத்தும் ஜெர்மன் மொழிதான், அதுபோல் இரண்டாம் உலகப்போருக்குபின் வளர்ந்த ஜப்பான் நாட்டில் ஆராய்ச்சி, தொழில்நுட்பம் அனைத்திலும் ஜப்பான் மொழிதான் பயன்பாட்டுமொழி. தென்கொரியா இன்று நுகர்வு பொருள் உற்பத்தியில், எலக்ட்ரிகல் பொருள் உற்பத்தியில், ஏற்றுமதியில் சிறந்து விளங்குகிறது.
ஆங்கிலம் மூலம் சாதிக்கலாம் என்ற சிந்தனை அடிமைத்தனத்தின் விளைவு. ஆங்கிலேயர்கள் தங்களுக்கு உதவி செய்ய சிலரை ஆங்கிலம் படிக்க சொல்லி அவர்களுக்கு சில அற்ப சலுகைகளை வழங்கினர். அந்த அற்ப சலுகைகளுக்காக அனைவரும் ஆங்கிலம் கற்கும் மோகம் உருவாகி இன்று அனைத்து மக்களுக்கும் விருட்சமாக பரவியுள்ளது.
ஆங்கிலம்தான் முக்கியம் என பேசபவர்கள் நவீன உலகுக்கு ஆங்கிலம் அவசியம் என வாதிடுகிறார்கள். உலகில் நான்கில் ஒரு பங்கு மக்கள் கூட ஆங்கிலம் பேசுவதில்லை. அடுத்து, ஊரோடு ஒத்து வாழ ஆங்கிலம் தேவை என பேசுகிறார்கள். சமீபத்தில் பாராளுமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஒருவர் இந்தியில் பேசினார். அதற்கு சொன்ன காரணம் தாய் மொழியில் படித்தால், பயன்படுத்தினால் தான் செயல் திறன் வளரும் என்பதுதான். அதற்கான உரிமை வேண்டும் என பேசினார். அரசு நிர்வாகம், வணிகம் ஆகிவற்றை தம்தம் நாடுகளில் தாய் மொழியில் பயன்படுத்த வேண்டும் அப்போதான் செழுமையடையும்.
அடுத்து தகவல் தொழில் நுடபத்துறைக்கு ஆங்கிலம் அவசியம் என பேசுகிறார்கள். தென்கொரியா, ஜப்பான், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் அனைத்தும் பயன்பாடும் தாய்மொழியில்தான் இருக்கிறது.
உலகில் அடுத்த 30 ஆண்டுகள் அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா விளங்கும். மனித வளம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம். தாய்மொழி கல்வி அத்தகைய வளத்தை திறன் மிக்கதாக வளர்ச்சியடையச் செய்வதில் முழு பங்காற்றுகிறது. கல்வியில் மெட்ரிக், சி.பி.எஸ்.இ, ஆங்கிலோ இந்தியன் என பல பிரிவுகள் இருந்தன. இன்று சமச்சீர் பாடத்திட்டம் வந்த பிறகு மேற்கண்ட பிரிவுகள் தேவையில்லை என உங்களது பெற்றோர் சங்கம் மெட்ரிக் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வழக்கு போட்டுள்ளீர்கள். அது சரியானதுதான். தனியார் பள்ளிகள் இதை வைத்து கட்டணம் பறிக்கின்றன.
+1 மாணவர்கள் சேர்க்கைக்கு பெற்றோர்கள் 2 முதல் 3 லட்சம் ரூபாய் கொடுக்கிறார்கள். அரசு பள்ளி ஆசிரியர்கள் மனநிலையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இராமநாத புரம், நாமக்கல் மாவட்டத்தில் எலைட் பிரிவு என தொடங்கி சில மாணவர்களை தனியே பிரித்து சிறப்பு பயிற்சி கொடுத்து அதிக மதிப்பெண்கள் எடுக்க வைத்துள்ளனர்.
அரசு பள்ளி தரமில்லை என சொல்பவர்கள் சிந்திக்க வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்கள்தான் தனியார் பள்ளிகளின் பங்காளிகள் என்பதை மறக்ககூடாது. ஒரு சில ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்தாமல் இருக்கலாம். நாமக்கல் மாவட்டத்தில் 53 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. பெற்றோர்கள் அரசு பள்ளிகளை பயன்படுத்த வேண்டும். சக்திக்கு மீறி கடன் வாங்கி சிரமப்படாதீர்கள். உங்கள் பிள்ளைகள் நன்றாக படித்தால் மேற்படிப்புக்கு உதவி செய்ய முகம் தெரியாத மக்கள் நிறைய இருக்கிறார்கள். நானே 100 பேருக்கு மேல் மாணவர்களுக்கு உதவி பெற்று தந்திருக்கிறேன். அதன் மூலம் மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் என படித்து வருகிறார்கள்.
இந்த பகுதி பின்தங்கி இருக்கிறது. பெண்களை மேல் படிப்பு படிக்க வைக்க பெற்றோர்கள் விரும்புவதில்லை. பள்ளி படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து முடிக்க விரும்புகின்றனர். தங்கள் பொறுப்பை பெற்றோர்கள் தட்டி கழிப்பதனால்தான் கம்மாபுரம் ஊரில் இரு மாணவிகள் தம் உயிரை தாமே மாய்த்துக் கொண்ட துயர சம்பவம் நடந்தது. ஆனால் தற்போது தேர்ச்சி விகிதத்தில் முதல் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் அதிகமாக இருக்கின்றனர் என்பதை நாம் பார்க்க வேண்டும். அரசு போட்டித் தேர்வுகளில் சார். ஆட்சியர், அதிலும் துணை கண்காணிப்பாளர் பதவிக்கு பெண்கள் முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்கள். பாரதி கண்ட புரட்சி சமுதாய மாற்றம் வருகிறது. அத்தகைய மாற்றத்தில் பெற்றோர்களாகிய நீங்களும் ஈடுபட வேண்டும். சிரமம், சிக்கல் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது.
அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்தவர்கள்தான் வி.ஏ.ஓ.போன்ற தேர்வில் 40 சதவீதம் தேர்ச்சி பெறுகின்றனர். தனியார் பள்ளிகள் பாடத்திட்டம் கொள்ளை லாபம் அடிப்பதற்காகதான் இருக்கிறது. தற்போது உலக அளவில் பாடத்திட்டம் பன்னாட்டு கல்வி நிறுவனங்கள் மூலம் உருவாக்குகிறார்கள். IGCSE (integrated general certificate secondary education) இந்தியா முழுவதும் 310 இடங்களில் பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்க இருக்கிறார்கள். 18 மாநிலங்களில் பெரும் நகரங்களில் வரவிருக்கிறது.
பெற்றோர்களாகிய நாம் தான் இத்தகைய பள்ளிகூடங்கள் வருவதற்கு காரணம். சுகாதாரமான குடிநீர், தரமான கல்வி, மருத்துவம் தன் குடி மக்களுக்கு தருவது அரசின் கடமையாக இருக்க வேண்டும். உண்மையான வளர்ச்சி என்பது சாதாரண மக்களுக்கு அனைத்தும் கிடைப்பது உறுதி செய்யப்படுவதில்தான் இருக்கிறது.
அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு ஒப்பிட முடியாது என்பதற்கு பல் வேறு உதாரணங்கள் சொல்ல முடியும். தனியார் பள்ளிகள் கவர்ச்சிகரமாக கட்டிடங்கள், குளிரூட்டப்பட்ட வகுப்பறை, ஸ்மார்ட் வகுப்பு என விளம்பரம் செய்கின்றன. அரசு பள்ளிகளில் கட்டமைப்பு இது போன்று இல்லை என பிரச்சாரம் செயகிறார்கள். அனைத்து பள்ளிகளும் இது போல் இல்லை. மேலும் தனியார் பள்ளிகளில் பணி புரிபவர்கள் அரசு பள்ளிகளில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அல்லது பங்குதாரர்கள், விருப்ப ஓய்வு பெற்று தனியார் பள்ளியில் பணிபுரிவது என அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளியில் குறிப்பிட தகுந்த பங்கு ஆற்றுகிறார்கள்.
தனியார் பள்ளிகள் “மெமரி பேஸ்ட் லேனிங்” அதாவது உருப்போடுதல் முறையில் மாணவர்களை தயாரித்து 1192, 1196 என மதிப்பெண் எடுக்க வைக்கிறார்கள். அரசு பள்ளியில் அத்தகைய பயிற்சி இல்லை. மேலும் 10-வது பாடத்தை 9-ம் வகுப்பிலே படிக்க வைப்பது, 12-ம் வகுப்பு பாடத்தை 11-வது வகுப்பில் படிக்க வைப்பது என முறைகேடாக ஆசிரியர்கள் தனியார் பள்ளியில் கல்வி கற்பிக்கிறார்கள்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பது அல்லாமல், கூடுதலாக மழைநீர் சேகரிப்பு பிரச்சாரம், தேர்தல் வாக்காளர்கள் சேர்த்தல், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு, ரேசன் கார்டு பரிசோதனை என பிற வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதுடன் கல்வியும் கற்பிக்கிறார்கள்.
தனியார் பள்ளிகளில் காலை 7 முணி முதல் இரவு வரை படிப்பு படிப்பு என மாணவர்கள் குறிப்பிட்ட வேலைக்கு பழக்கப்படுத்துகிறார்கள். மேலும் இங்கு மாணவர்களுக்கு கட்டாய தனிபயிற்சி கல்வி உண்டு. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தனிபயிற்சி அதாவது “டியுசன்” குற்றமாக கருதப்படுகிறது. அரசு பள்ளியில் படித்தவர்தான் இந்திய ஜனாதிபதி திரு.அப்துல் கலாம். அது போல் நிர்வாக துறைகளில் மக்கள் நலன் சார்ந்த துறைகளில் ஐ.ஏ.எஸ்.போன்ற பதவிகளில் அரசுபள்ளி மாணவர்கள்தான் வருகிறார்கள். தனியார் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் கார்ப்பரேட் கம்பெனிக்கு தான் செல்கிறார்கள்.
அரசு பள்ளியில் சைக்கிள், மதிய உணவு, சாமட்ரி பாக்ஸ், நோட்டு புத்தகம், லேப்டாப் என அனைத்தும் பாராபட்சம் இல்லாமல் இலவசமாக அரசு தருகிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் ரூ 45,000, பிறகு கலை நிகழ்ச்சிகளுக்கு உடைகள், அதற்கு கட்டணம், விழாக்களுக்கு, சுற்றுலா, தேர்வுகளுக்கு, ஸ்போக்கன் இங்கிலீசு என அனைத்தும் பணமாக பெற்றோர்களிடமிருந்து பறிக்கபடுகிறது. இலவசம் என்றால் இன்றைய நேற்றைய முதல்வர் வழங்குவது அல்ல. அவைகள் அனைத்தும் நமது வரிப்பணம்.
ஆரம்பகல்வியில் அரசு பள்ளிகளில்தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள். படிப்படியாக மேல்நிலை கல்வியில் தனியார் பள்ளிகளில் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள். 2012-13 ஆண்டில் சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையின் போது கல்வி துறை தாக்கல் செய்த புள்ளி விபரங்கள்.
வகுப்பு தனியார்பள்ளிகள் அரசு பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி
1 முதல் 5 வரை 8,68,772 14,63,767 8,47,432
6 முதல் 8 வரை 1,92,775 13,84,000 5,76,000
9 மற்றும் 10 90,997 7,20,381 2,92,370
பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் அரசு பள்ளி மாணவர்களை, மீனை காத்திருந்து கொத்தி தூக்கும் கொக்கு போல் தனியார் பள்ளிகள் ஏஜெண்ட் வைத்து ஊருக்கு ஊர் போய் மாணவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, “450 மதிப்பெண் இருந்தால் ஹாஸ்டல் ஃப்ரி, 480 இருந்தால் ஹாஸ்டல் பிளஸ் கல்வி கட்டணம் ஃப்ரி வீடு எடுத்து தருகிறோம்” என சொல்லி நன்றாக படிக்கும் மாணவர்களை தனியார் பள்ளிகள் பன்னிரண்டாம் வகுப்பில் சேர்க்கின்றனர். இதன் மூலம் தாங்கள் தேர்ச்சி விகிதத்தை உத்திரவாதப் படுத்துகின்றனர். சராசரி மாணவனை நன்றாக படிக்க வைப்பது தான் கல்வியின் சாதனை, ஆசிரியரின் திறமை எனலாம். நன்றாக படிக்கும் மாணவனை தேர்ந்தெடுத்து படிக்க வைப்பதுதான் தனியார் பள்ளிகள் சாதனை. இதனை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேணடும். செய்திதாள்களை பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டும். டாக்டர், என்ஜினியர் என்பதை தவிர ஏராளமான படிப்புகள் இருக்கிறது. இத்தகைய படிப்புகளில் நடுத்தர வசதி படைத்தவர்கள் தான் படிக்கிறார்கள். சாதாரண குடும்பத்து மாணவர்கள் படிக்க பெற்றொர்களுக்கு விழிப்புணர்வு அவசியம்.
சென்னையில் மாநகராட்சி பள்ளி மாணவி ஐ.ஐ.டி. சேர்ந்துள்ளார். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எப்படி படிக்கிறார்கள் என்பதை ஆசிரியர், தலைமை ஆசிரியரோடு கலந்து பேச வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டம் சில உரிமைகளை வழங்குகிறது. ஆனால் தனியார் பள்ளிகள் எதையும் மதிப்பதில்லை. நீதிபதிகள் கட்டண நிர்ணயம் செய்கிறார்கள். அதையும் மீறி பல் மடங்கு பணம் பெற்றோர்களிடம் வசூலிக்கிறார்கள். கல்வி துறை அதிகாரிகளும், அமைச்சரும் கண்டு கொள்வதில்லை. தனியார் பள்ளிகள் இப்படி அத்து மீறி நடப்பது அனைவருக்கும் தெரிந்தே தான் நடக்கிறது. சட்டப்படி உள்ள எந்த உரிமைகளும் நமக்கு தானாக கிடைக்காது. வீரம் தீரம் செறிந்த மக்கள் போராட்டங்களால் தான் சட்டத்தில் உள்ள உரிமைகளை கூட நாம் வென்றெடுக்க முடியும். அதற்கு சங்கமாக திரண்டு போராட வேண்டும் என கேட்டு கொண்டு, இந்த மாநாட்டில் பேச வாய்ப்பளித்தமைக்கு மீண்டும் நன்றி கூறி அமைகிறேன். வணக்கம்.vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக