வெள்ளி, 27 ஜூன், 2014

பெண்கள் விடுதிகளுக்கு 23 புதிய கட்டுப்பாடுகள் ! பொள்ளாச்சி பாலியல் கொடுமை எதிரொலி !

பொள்ளாச்சி சம்பவத்தின் எதிரொலியாக, பெண்கள் விடுதியை நடத்த 23 வகையான கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த விடுதிகளின் உரிமையாளர்களும், பெற்றோர்களும், பொது மக்களும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பொள்ளாச்சியில் உள்ள விடுதிக்குள் இரு மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பெண்கள் குழந்தைகள், இளம் பெண்கள் மற்றும் பெண்கள் விடுதி, இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் 23 வகையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதன் விவரம்:
1. கட்டடங்களுக்கான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து உரிய அதிகாரியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கட்டடங்களில் மட்டுமே விடுதி, காப்பகத்தை அமைக்க வேண்டும். அவற்றில் போதிய பாதுகாப்பு மற்றும் உரிய தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

2. இருபாலர் தங்கும் விடுதியாக இருந்தால், மாணவர்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் விடுதியை அமைக்க வேண்டும்.
3. தவிர்க்க முடியாத காரணங்களால் இருபாலரும் ஒரே கட்டடத்தில் தங்க நேரிட்டால், அவர்களுக்கு தனித்தனியான அறைகளை ஒதுக்க வேண்டும்.
4. இளம் பெண்கள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளில் காப்பாளர் அல்லது பொறுப்பாளர்களாக பெண்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.
5. 50 குழந்தைகளுக்கு ஒரு விடுதிக் காப்பாளர் இருக்க வேண்டும்.
6. விடுதிகளில் தங்கும் நபர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி தேவைக்கேற்ப 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
7. ஒன்றுக்கு மேற்பட்ட நுழைவு வாயில்கள் இருந்தால் அனைத்து வாயில்களிலும் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
8. 50-க்கும் மேற்பட்டோர் தங்கும் விடுதிகளில் டி.வி.கேமிராக்களை பொருத்த வேண்டும்.
9. விடுதி காப்பாளரோ அல்லது பாதுகாவலரோ முன் அனுமதி பெற்றே விடுப்பில் செல்ல வேண்டும். பணிக்கு வராத நேரத்தில் உரிய பொறுப்புள்ள ஆட்களை நியமிப்பதை சம்பந்தப்பட்ட விடுதிகளின் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். விடுதி காப்பாளர் அல்லது துணை காப்பாளர் எந்தவொரு நேரத்திலும் விடுதியில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
10. பாதுகாவலர்களை அவசர காரணம் ஏதுமின்றி, பெண்கள் தங்கியுள்ள விடுதி கட்டடத்துக்குள் அனுமதிக்கக் கூடாது. நுழைவாயிலின் அருகே அவர்களுக்கென அமைக்கப்பட்ட அறைகளில் மட்டுமே அவர்கள் இருக்க வேண்டும்.
11. விடுதிகள் நான்குபுற சுற்றுச் சுவர்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். மேலும், உள்ளே மற்றும் வெளியே செல்லும் வாயில்களில் தாழ்ப்பாளுடன் கூடிய கதவுகள் அமைக்க வேண்டும்.
12. விடுதியில் தங்கியிருப்பவர்கள், அவர்கள் விடுதியை விட்டு வெளியில் செல்லும் நேரம், விடுதிக்கு திரும்பும் நேரம் ஆகியவற்றை வருகைப் பதிவேட்டில் விடுதி காப்பாளர் பதிவு செய்ய வேண்டும். தூங்கச் செல்வதற்கு முன்பு, விடுதியில் தங்கியிருப்பவர்களை கணக்கெடுக்க வேண்டும்.
13. விடுதியில் தங்கியுள்ளவர்களைச் சந்திக்க பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
14. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வரவேற்பறையில் மட்டுமே பார்வையாளர்களை பாதுகாப்பாளர்களின் கண்காணிப்பில் அனுமதிக்க வேண்டும்.
15. வெளிநபர்கள் கட்டடத்துக்குள் நுழைவது முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும்.
16. இளம் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களை காண வரும் பார்வையாளர்களின் சந்திப்பு கண்டிப்பாக விடுதிக் காப்பாளரின் கண்காணிப்புக்கு உட்பட்டு நடைபெற வேண்டும்.
17. சிறு வயதுடைய ஆண் மற்றும் பெண் குழந்தைகள், இளம் பெண்கள் ஆகியோரை விடுமுறை நாள்களில் வீட்டுக்கு அனுப்பும் போது, அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரிடம் அந்த விடுதி காப்பாளர் ஒப்படைக்க வேண்டும். எந்தவொரு நேரத்திலும் தனியாகவோ வெளியாட்களுடனோ அனுப்பக் கூடாது.
18. விடுதிக் காப்பாளர் அல்லது பாதுகாவலர் பார்வையாளர்களை விடுதிக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது.
19. பார்வையாளர் புத்தகம் விடுதிக் காப்பாளரால் பராமரிக்கப்பட வேண்டும்.
20. பார்வையாளர் புத்தகத்தில் பெயர், முகவரி, உறவு முறை மற்றும் சந்திப்புக்கான நோக்கம் ஆகியன பதிவு செய்யப்பட்டு பார்வையாளரால் கையெழுத்து இடப்பட வேண்டும்.
21. விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலருக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
22. பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பாளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
23. விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர்களது தொலைபேசி எண் மற்றும் முகவரி ஆகியன காப்பகத்தின் முன்வாயிலில் எளிதில் காணக்கூடிய வகையில் பார்வையில் வைக்கப்பட வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக