வெள்ளி, 27 ஜூன், 2014

1948 வெப்பத்தை நெருங்கும் 2014 வெய்யில் ! கடல்காற்று தாமதம் ! எல் நினோ எபெக்ட் ?

 சென்னை உட்பட, தமிழகத்தின் முக்கிய நகரங்களில், வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில், 1948ல் பதிவான, அதிகபட்சமான, 43 டிகிரி செல்சியசை, தற்போதைய வெப்பநிலை நெருங்குகிறது.சுடுநீரில் குளிக்க, 'ஹீட்டர்' போட வேண்டாம்; பக்கெட் தண்ணீரை வெளியில் வைத்தால் போதும். கொதிக்கும் நீர் கிடைக்கும். உச்சி வெயிலில் வெளியில் சென்றால், உடலில் ஈரப்பதத்தை இழந்து, மனிதன் மரணிக்கும் அளவிற்கு, வெப்பம் உயர்ந்துள்ளது. குறிப்பாக, வட மாவட்டங்களில், வெப்பநிலை மிகவும் கடுமையாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளை விட, இந்தாண்டு மே, ஜூன் மாதங்களில், வெப்பம் அதிகரித்துள்ளதாக, வானிலை வல்லுனர்கள் தெரிவிக்கினறனர்.
ஆண்டுதோறும், 'கத்தரி வெயில்' எனப்படும், அக்னி நட்சத்திர காலம், மே மாதம், 24 நாட்கள் இருக்கும். இதில், மே மாதம், 15 அல்லது 16 ஆகிய தேதிகளில், வெப்பநிலை கடுமையாக உயரும். இந்தாண்டு, குறிப்பிட்ட தேதிகளில், வெப்பநிலை, 42 டிகிரி செல்சியசை தொட்டது. அதன்பின், வெப்பநிலை சற்றே குறைந்தது. சமீபத்தில், வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மழை பெய்ததால், வெப்பநிலை தணிந்து காணப்பட்டது. தென்மேற்கு பருவமழை: மற்றொரு புறம், தென்மேற்கு பருவமழை துவங்கியதால், கன்னியாகுமரி, நெல்லை மற்றும் கோவை மாவட்டங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக, அந்த மாவட்டங்களில் வெப்பநிலை குறைந்தது. வழக்கமாக, தென்மேற்கு பருவமழை காலமான, ஜூன் முதல் செப்டம்பர் வரை, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், லேசான மழை இருக்கும். அப்போது, வெப்பநிலையும் தணிந்து காணப்படும். ஆனால், இந்தாண்டு வழக்கத்தை விட மாறாக, வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இதுதவிர, இந்தாண்டு தென்மேற்கு பருவமழையும், இயல்பளவை விட குறையும் என்றும், வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.



சென்னையில்...:

சென்னையை பொறுத்தவரை, 1948ல், அதிகபட்சமாக, 43.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்து, 2012ல், 42.4 டிகிரி செல்சியசும், 2013ல், 39.7 டிகிரி செல்சியசும் தான், அதிகபட்சமாக பதிவான வெயில் அளவு. ஆனால், இந்த ஆண்டில், கடந்த மாதம், 42 டிகிரி; இம்மாதம், 41 டிகிரி செல்சியஸ் வெப்பமும், அதிகபட்ச வெப்ப அளவாக பதிவாகி உள்ளது. தொடர்ந்து, வெப்பநிலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், 1948 வெப்பநிலை சாதனையை முறியடிக்கும் என, கூறப்படுகிறது. இதர பகுதிகளில்...சென்னை தவிர, இதர பகுதிகளான, நெல்லை, மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட நகரங்களிலும், வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில், கடந்த சில தினங்களாக, மதுரை, திருச்சி, வேலூரில், 40 டிகிரி செல்சியசை ஒட்டியே, வெப்பம் பதிவாகிறது. குமரி மற்றும் கோவை மாவட்டங்களிலும், இயல்பளவை தாண்டியே வெப்பம் பதிவாகிறது. சென்னையை பொறுத்தமட்டில், தினசரி வெப்பமானது, ஆண்டு இயல்பளவை காட்டிலும், 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து உள்ளது.



புதுச்சேரியில்...

புதுச்சேரியை பொறுத்தவரை, கடந்த 2012ல், 43.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியதே அதிகபட்சம். இந்தாண்டும், தற்போது, 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி வருகிறது. இதே நிலை மேலும் தொடர்ந்தால், கடந்தாண்டு சாதனையை, இந்தாண்டு வெயில் முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

வெப்பநிலை உயர்வு குறித்து, சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது: மேற்கு திசை காற்று அதிகளவில் வீசுவதால், கடல் காற்றின் வருகை தாமதமாகி வருகிறது. இதனால், வெப்பநிலை அதிகரிக்கிறது. வெப்பநிலை மற்றும் காற்றின் ஈரப்பதத்தின் அளவு, ஒரே மாதிரியாக இருப்பதால், அனல் அதிகரிக்கிறது. வறண்ட தரைக்காற்றின் தாக்கம் குறைந்தால், ஈரமான கடல் காற்று அதிகளவில் உள்ளே வரும். அப்போது, காற்றில் ஈரப்பதம் அதிகரித்து, வெப்பநிலை குறையும். குறிப்பாக, தரைக்காற்றின் வேகம் குறைய வேண்டும். இது சென்னைக்கு மட்டுமல்ல; மற்ற பகுதிகளுக்கும் பொருந்தும். இவ்வாறு, அவர் கூறினார்.



'எல் நினோ' காரணம்:

வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் மழை அளவு குறைவதற்கு, பசிபிக் கடல் நீரோட்டத்தின் வெப்பநிலை (எல் நினோ) அதிகரிப்பும், காரணமாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, வானியலாளர் விஜயகுமார் கூறியதாவது: 'எல் நினோ' காரணமாக, பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதில் ஒன்று தான், வெப்பநிலை அதிகரிப்பு. தமிழகத்தை விட டில்லியில், வெப்பநிலை மிகவும் அதிகமாக காணப்படுகிறது. தற்போதுள்ள சூழலில், சுற்றுச்சூழல் வெப்பமானது, காற்றை விரிவடையச் செய்து, அதில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடுவதே, வெப்பநிலை அதிகரிப்பிற்கு காரணமாக அமைகிறது. மேலும், பகலின் நேரம் அதிகரிப்பதும், வெப்பநிலை அதிகரிப்பிற்கு காரணம். இவ்வாறு, அவர் கூறினார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக