ஞாயிறு, 15 ஜூன், 2014

வாரணாசியை தகர்க்க சதி: 150 கிலோ வெடிபொருள்கள் சிக்கின

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் (காசி) ஒரு காரில் 3 பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 150 கிலோ வெடிபொருள்களை போலீஸார் சனிக்கிழமை கைப்பற்றினர்.
இந்துக்களின் புனிதத் தலமான காசியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாகவும் குறிப்பாக காசி விஸ்வநாதர் கோயிலை அவர்கள் குறிவைத்திருப்பதாகவும் உளவுத் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதன்பேரில் கடந்த சில நாள்களாக வாரணாசி நகரம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வந்தது.
2 பேர் தப்பியோட்டம்
கொல்கத்தா - டெல்லி நெடுஞ் சாலையில் ராம்னா சுங்கச் சாவடி யில் வாரணாசி நகர போலீஸார் சனிக்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் 2 பேர் இருந்தனர். காரை சோதனையிடுவதில் போலீஸார் கவனம் செலுத்தியபோது இருவரும் தப்பியோடி விட்டனர்.
அந்த காரின் இருக்கையில் 3 பைகளில் 150 கிலோ அமோனியம் நைட்ரேட் வெடிபொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து அந்த காரையும் வெடிபொருள்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.
முதல்கட்ட விசாரணையில் உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் இருந்து அந்த கார் வாரணாசிக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது.
காரில் இருந்து ஒரு டிரைவிங் லைசென்ஸை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அந்த லைசென்ஸ் பிஹார் மாநிலம் ரோட்டாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பிலேஷ் என்பவருக்குச் சொந்தமானது.
இதுதொடர்பாக பிஹார் போலீஸாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டு டிரைவிங் லைசென்ஸில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு போலீஸார் விரைந்துள்ளனர். வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் பிஹார் நபர்களுக்கு நிச்சயமாக தொடர்பு இருக்கக்கூடும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகள் சதி
2005 முதல் 2010 வரை வாரணாசி நகரில் பல்வேறு வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 2006 ஜூலையில் 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. 2010 டிசம்பரில் கங்கை படித்துறைகளில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுவரை நடத்தப்பட்ட தாக்கு தல்களில் ஆர்.டி.எக்ஸ், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் அமோனியம் நைட்ரேட் ஆகிய வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போது மிக அதிக எடையில் அமோனியம் நைட்ரேட் வெடி பொருள்கள் பிடிபட்டிருப்பதன் மூலம் வாரணாசி நகரில் மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பது அம்பலமாகி யுள்ளது.
போலீஸார் உஷார்
இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக காசி, அயோத்தி, மதுரா உள்ளிட்ட புனிதத் தலங்களில் போலீஸ் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மக்கள் நடமாட்டம் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி மக்களவைத் தொகுதியில் இருந்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே அந்த நகரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். போலீஸாரின் தீவிர கண்காணிப்பால் மிகப் பெரிய தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக