வியாழன், 8 மே, 2014

இலவச மடிக்கணினித்திட்டத்தில் கொள்ளை லாபம் பெற்றது மைக்ரோசாப்ட்! Linux is free !

லினக்ஸ் - சுதந்திர மென்பொருள்அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்னணு கழகம் (ELCOT) சுமார் 9.12 இலட்சம் மடிக்கணிகளை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோரியது. ஒரு மடிக்கணினியின் விலை 15,000 ரூபாய் என்று நிர்ணயித்து ஐந்து ஆண்டுகளில் வினியோகிக்கப்பட வேண்டிய 68 இலட்சம் மடிக்கணினிகளுக்கு சுமார் 10,200 கோடி ரூபாய்களை திட்டமதிப்பீடாக அறிவித்தது எல்காட் (ஒரு மடிக்கணினியின் விலை பின்னர் 18,000 ரூபாயாக தொழில்நுட்ப ஏலத்தில் உயர்த்தப்பட்டது தனிக்கதை.)
மடிக்கணினியின் இயங்குதளத்தை பொறுத்தவரை விண்டோஸ் ஸ்டார்ட்டரும் லினக்ஸ் இயங்குதளமும் சேர்த்தே நிறுவப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. உண்மையில் லினக்ஸ் இயங்குதளத்தில் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான அனேக சுதந்திர மென்பொருள்கள் உண்டு. அவற்றுள் தமிழ் தட்டச்சு, அறிவியல் பயன்பாடுகள் இருக்கிறது என்பது போக வருடா வருடம் மென்பொருள்களையும் இயங்குதளத்தையும் காசு கொடுத்து புதுப்பிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதில் பாரத் ஆபரேட்டிங் சிஸ்டம் சொல்யூசன்ஸ் (Bharat Operating System Solutions – BOSS)  தமிழ் வழியான லினக்ஸ் தளத்தை மாணவர்களுக்கு எளிமைப்படுத்தி வழங்கும் முயற்சியிலும் ஈடுபட்டது.
இது அரசுத் திட்டம் என்கிற பொழுது எதற்கு தேவையேயில்லாமல் மைக்ரோசாப்ட் இயங்குதளம் நிறுவப்பட வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாடு சுதந்திர மென்பொருள் இயக்கத்திற்கான கூட்டமைப்பு தனது ஆட்சேபனையை பதிவு செய்தது. எத்தனையோ வகையான சுதந்திர மென்பொருட்கள் இருக்கும் பொழுது விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவுவது முழுக்க முழுக்க மைக்ரோசாப்டிற்கு சேவை செய்கிற வேலையேயன்றி இது எந்த வகையிலும் இலவச மடிக்கணினித் திட்டமாக இருக்க முடியாது என்பதைத் தெரிவித்திருந்தது.


மைக்ரோசாப்ட் விண்டோஸ் XP-கார்ப்பரேட் கொள்ளையின் சின்னம்’ என்ற பதிவில் ‘சுதந்திர மென்பொருட்களுக்கான இயக்கம்’ பிரச்சனையை தீர்க்கும் வழியல்ல என்றும் முதலாளித்துவ இலாப வெறியை அம்பலப்படுத்தி அரசியல் ரீதியில் எதிர்ப்பதுதான் தீர்வு என்பதோடு, இந்த வகையில் பாராளுமன்ற ஜனநாயகத்தில் திளைக்கும் சில இடதுசாரி குழுக்களின் செயல்பாடுகளை பிழைப்புவாதம் என்ற விமர்சனத்தையும் வைத்திருந்தோம். மறுமொழியாக நமது வாசகர்கள் லினக்ஸ் போன்ற சுதந்திர இயங்குதளங்கள், மைக்ரோசாப்ட் நெட்டித்தள்ளுகிற நெருக்கடிக்கு தீர்வாக இருக்குமென்றும் சில வாதங்களை வைத்திருக்கின்றனர்.
இது தொடர்பாக, அதாவது சுதந்திர மென்பொருள்கள், அதைச் சார்ந்த சமூக இயக்கங்களின் கூறுகள், பாராளுமன்ற ஜனநாயகத்தை நம்பும் இடதுசாரி அறிவுஜீவித் துறையினர் மற்றும் மாணவர்களின் மீதான பார்வையை பரிசீலிக்க வேண்டியது அவசியமாகிறது.
பாராளுமன்ற ஜனநாயகத்தில் சீரழிந்த பிழைப்புவாத கம்யூனிஸ்டு கட்சிகளில் பல்வேறு பிரிவினர்கள் இருந்தாலும் இரண்டு பிரிவினரை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒன்று, பிழைப்புவாத தொழிற்சங்கங்களை நம்பி மோசம் போகிற தொழிலாளர்கள். இரண்டு, தனியார்மய தரகு முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக கருத்தரங்குகள், விவாதங்கள் என்ற அளவில் மட்டுமே அறிவுவாதத்தை கொண்டு செல்லமுடிகிற அறிவுத்துறையினரும் மாணவர்களும். இந்த இருவகை பிரிவினரை விட அதிகமாக ஜெயலலிதா போன்றவர்களின் காலை நக்கிப் பிழைக்கிற வகையறாக்கள் மக்கள் முன் தானாகவே அம்பலப்பட்டு போனார்கள்.
சுரண்டலை உணர்ந்து கொள்வதிலும் அதற்கெதிராக போராடுவதிலும் எல்லா நாடுகளிலும் தொழிலாளர்களே முன்னணியில் இருக்கிறார்கள். எனவே தொழிலாளர் வர்க்கத்தைத் தவிர நம்பிக்கையூட்டும் ஜனநாயக சக்திகளில் இந்த அறிவுஜீவித்துறையினரும் மாணவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த வகையில் மென்பொருள் பிரச்சனையில் இவர்கள் வைக்கிற கோரிக்கைகளின் தன்மைகளை கறாராக நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.
தமிழகத்தில் சுதந்திர மென்பொருட்களுக்கான இயக்கம் அறிவுத்துறையினராலும் மாணவர்கள் மத்தியிலும் ஒரு சமூக இயக்கமாக எடுத்துச் செல்லப்படுகிறது. கிண்டி அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள், சென்னை ஐஐடி மற்றும் எம் ஐ டி மாணவர்களும் பேராசிரியர்களும் இதில் அடக்கம்.
சென்னை ஐஐடி, ஆர் எஸ் எஸ் காலிகளுக்கு ஒரு கேந்திரமான கண்ணி என்ற நிலையிலும் விவேகானந்தா ஸ்டடி சர்க்கிள் என்ற பெயரில் மூலை முடுக்கெங்கும் இந்துத்துவவெறியை கிளப்புவதே பிரதானமாக இருக்கிற நிலையிலும் சுதந்திர மென்பொருட்களுக்கான இயக்கம் போன்ற சமூக ஜனநாயக கோரிக்கைகள் முன்னெடுத்து செல்லப்படுவதை நாம் புறந்தள்ளிவிடமுடியாது. ஏனெனில் இன்றைய சூழலில் இந்திய சமூகம் பாசிசத்தை நோக்கி தள்ளப்படும் முன்முயற்சிகள் தடையின்றி அரங்கேற்றம் செய்யப்படும் அபாயத்தில் இருக்கும் பொழுது அறிவுத்துறையினரின் இது போன்ற செயல்பாடுகள் பாசிஸ்டுகளுக்கு மத்தியில் அவசியமே.
லினக்ஸ் எதிர் விண்டோஸ்
லினக்ஸ் எதிர் விண்டோஸ்
அதே சமயம், மிகவும் கேடான அழுகிநாறும் முதலாளித்துவத்தின் கோரமுகத்தை வெறும் அறிவுஜீவித்தனமான கருத்தரங்குகளினாலோ அல்லது மயிர்பிளக்கும் தொழில்நுட்பம் சார்ந்த விவாதங்களினாலோ மட்டும் முறியடித்துவிட முடியாது. இந்த வகையில் தங்களை இடதுசாரிகள் என்று அறிவித்துக் கொள்கிற மாணவர்களும் அறிவுத்துறையினரும் தமது கோரிக்கைகளில் புரட்சிகர கூறுகளை உள்ளடக்குவதும் அதைச் சார்ந்து பாட்டாளிவர்க்க நலன்களை முன்னிலைப்படுத்துவதுமே முதன்மையானதாக இருக்கமுடியும்.
முதலாவதாக சுதந்திர மென்பொருட்களுக்கான இயக்கம் என்று சொல்வதின் பின்னணியில் இருக்கிற நிலைப்பாடுகள் என்ன என்று தமிழக நிலைமைகளில் இருந்து புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம். வளர்ந்துவரும் நாடுகளில் பள்ளி, கல்லூரி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் சுதந்திர மென்பொருட்களை பயன்படுத்துகிற நிலையை உருவாக்க வேண்டும் என்று நிலைப்பாடும் இதில் ஒன்று. ஆனால் தமிழக அரசு கொண்டு வந்த இலவச மடிக் கணினித் திட்டம் இந்த நிலைப்பாட்டை சுக்குநூறாக்கியது. மைக்ரோசாப்ட் தமிழகத்துடன் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் படி தமிழ்நாட்டை அகலத் திறந்துவிடுவதன் குரூரத்தை முதலில் அனுபவித்தவர்கள் நமது பள்ளி மாணவர்களே என்பதைச் சொல்லிவிட வேண்டும்.
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்னணு கழகம் (ELCOT) சுமார் 9.12 இலட்சம் மடிக்கணிகளை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோரியது. ஒரு மடிக்கணினியின் விலை 15,000 ரூபாய் என்று நிர்ணயித்து ஐந்து ஆண்டுகளில் வினியோகிக்கப்பட வேண்டிய 68 இலட்சம் மடிக்கணினிகளுக்கு சுமார் 10,200 கோடி ரூபாய்களை திட்டமதிப்பீடாக அறிவித்தது எல்காட் (ஒரு மடிக்கணினியின் விலை பின்னர் 18,000 ரூபாயாக தொழில்நுட்ப ஏலத்தில் உயர்த்தப்பட்டது தனிக்கதை.)
மடிக்கணினியின் இயங்குதளத்தை பொறுத்தவரை விண்டோஸ் ஸ்டார்ட்டரும் லினக்ஸ் இயங்குதளமும் சேர்த்தே நிறுவப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. உண்மையில் லினக்ஸ் இயங்குதளத்தில் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான அனேக சுதந்திர மென்பொருள்கள் உண்டு. அவற்றுள் தமிழ் தட்டச்சு, அறிவியல் பயன்பாடுகள் இருக்கிறது என்பது போக வருடா வருடம் மென்பொருள்களையும் இயங்குதளத்தையும் காசு கொடுத்து புதுப்பிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதில் பாரத் ஆபரேட்டிங் சிஸ்டம் சொல்யூசன்ஸ் (Bharat Operating System Solutions – BOSS)  தமிழ் வழியான லினக்ஸ் தளத்தை மாணவர்களுக்கு எளிமைப்படுத்தி வழங்கும் முயற்சியிலும் ஈடுபட்டது.
இது அரசுத் திட்டம் என்கிற பொழுது எதற்கு தேவையேயில்லாமல் மைக்ரோசாப்ட் இயங்குதளம் நிறுவப்பட வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாடு சுதந்திர மென்பொருள் இயக்கத்திற்கான கூட்டமைப்பு தனது ஆட்சேபனையை பதிவு செய்தது. எத்தனையோ வகையான சுதந்திர மென்பொருட்கள் இருக்கும் பொழுது விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவுவது முழுக்க முழுக்க மைக்ரோசாப்டிற்கு சேவை செய்கிற வேலையேயன்றி இது எந்த வகையிலும் இலவச மடிக்கணினித் திட்டமாக இருக்க முடியாது என்பதைத் தெரிவித்திருந்தது.
எல்காட் ஐ.டி. பூங்கா
கார்ப்பரேட் நலன்களுக்கு சேவை செய்ய வைக்கப்பட்ட எல்காட்.
இருந்த போதிலும் செப்டம்பர் 2011-ல் லினக்ஸ் இயங்குதளமும் நிறுவப்படாது என்று அறிவித்தது எல்காட் நிறுவனம். அதற்கு எல்காட் முன்வைத்த காரணம் உலகப் பிரசித்தி பெற்றது. காசு கொடுத்து (சுமார் ரூ 2000 விலை) வாங்கிய விண்டோஸ் இயங்குதளத்துடன் இணையாக லினக்ஸையும் சேர்த்து நிறுவுவதற்கு கணினி ஒன்றிற்கு 100 ரூபாய் செலவழிக்க வேண்டிவரும் என்று ரூ 10,200 கோடிக்கான திட்டத்தில் தனது சிக்கன நடவடிக்கையை கூச்சமின்றி அறிவித்தது. வேண்டுமானால் தேவைப்படும் மாணவர்களுக்கு பாரத் ஆபரேட்டிங் சிஸ்டம் சொல்யூசன்ஸ் (Bharat Operating System Solutions – BOSS) மூலம் லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவ எல்காட் உதவி செய்யும் என்றும் அறிவித்தது.
இந்நிலையில் அமெரிக்க சுதந்திர மென்பொருள் இயக்கத்திற்கான ஜாம்பவான் மற்றும் போராளி ரிச்சர்டு எம் ஸ்டால்மேன், சென்னையில் நடந்த கூட்டத்தில் பங்கெடுத்ததோடு மட்டுமில்லாமல் விண்டோஸ் இயங்குதளத்தை லினக்சுடன் இணையாக நிறுவும் அரசின் செயல் “மதிய உணவிற்கு தண்ணீருடன் விஸ்கியையும் சேர்த்துத் தருவதைப் போன்றது” என்று மைக்ரோசாப்டுடான தரகுத்தனத்தை அம்பலப்படுத்தியிருந்தார்.
தமிழக சுதந்திர மென்பொருட்களுக்கான கூட்டமைப்பு, முதலாளித்துவத்தின் கொடூரத்தை நன்கு அறிந்திருந்தும் தமிழக அரசுக்கும் மைக்ரோசாப்டிற்கும் இடையே நடந்த லாபியிங் வேலைகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தாமால் ஜெயலலிதாவிற்கு ஒன்றுமே தெரியாததைப் போல மார்ச்-9, 2012 தேதியிட்ட கடிதம் ஒன்றை அனுப்பியது. அக்கடிதத்தின் முதல் பத்தியே இப்படியாக தொடர்கிறது:
“டியர் மேடம்,
6-3-2012 அன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி திரு ஜீன் பிலிப்ஸ் கோர்டியஸ் அவர்கள் தங்களைச் சந்தித்தது எங்களுக்கு தெரியவந்தது. அவர் இச்சந்திப்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ‘தகவல் தொடர்பு அறிவு இயக்கத் திட்டத்தை’ அமல்படுத்துவது தொடர்பாக 2005இல் தமிழக அரசிற்கும் மைக்ரோசாப்டிற்கும் இடையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மீதான அம்சங்களை விளக்கியிருந்தார். திரு ஜீன் தமிழகத்தில், தனது கம்பெனி மேலும் முதலீடுகளை செய்ய விரும்புவதாகக்  கூறியிருந்தார் (ஆக ELCOT, மடிக்கணினிகள் தொடர்பாக அனைத்து நிறுவனங்களுடன் ஒப்பந்தப் புள்ளிகள் கோரியது வெறும் கண்துடைப்பு மட்டுமே! அரசு எப்படி யாருக்காக இயங்குகிறது என்பதற்கான பார்வையை இங்கு நாம் தவறவிட்டுவிடக் கூடாது). தமிழக அரசுடனான இதுபோன்ற முதலீட்டுத் திட்டங்களை மைக்ரோசாப்ட் ஏற்படுத்துவது இது முதல் முறையல்ல. 2002இல் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது இந்தியப்பயணத்தின் போது, இதே போன்ற முதலீட்டுத் திட்டங்களை கூறியிருந்தார். இந்த வகையில், இது தொடர்பான சில உண்மைகளை தங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறோம். மைக்ரோசாப்டால் முன்மொழியப்படும் இது போன்ற முதலீடுகளுக்கு லாபம் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது என்பதை முதலிலேயே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்…………………………………………………………………………………….” என்பதாக அக்கடிதம் நீள்கிறது.
மைக்ரோசாப்ட்
இலவச மடிக்கணினி திட்டத்தில் கொள்ளை லாபம் பெற்றது மைக்ரோசாப்ட் மட்டுமே.
இறுதியில் இலவச மடிக்கணினி திட்டத்தில் கொள்ளை லாபம் பெற்றது மைக்ரோசாப்ட் மட்டுமே. தற்பொழுது இந்த மடிக்கணினிகள் சுடுதண்ணீர் வைக்கும் அளவிற்கு சூடாக இருப்பதாக அறிகிறோம். இது தனிக்கதை என்பதால் நமது பார்வையை இயங்குதளம் ஒட்டியே கொண்டு செல்வோம்.
செயல்பாடு என்பதன் அடிப்படையில் சுதந்திர மென்பொருளுக்கான கூட்டமைப்பு, உச்சபட்சமாக கருத்தரங்களை நடத்தியும் குறைந்த பட்சமாக ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதியதுமாக மட்டுமே இருந்தது. இதைத் தாண்டி நடத்திய போராட்டம் என்றளவிலான கூட்டங்கள் அரசுக்கு எந்தவித தார்மீக அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. மேலும் இவையனைத்தும் மக்களுக்கான இயக்கமாக அல்லாமல் வெறும் கருத்தரங்குகளாக மட்டுமே கொண்டு செல்லும் அளவிற்கு அடிப்படையாக அமைந்தது இவர்களின் அரசு குறித்த தவறான பார்வைகளே. அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் நலனுக்கான ஒடுக்குமுறைக் கருவி. இவர்களோ அதை அனைவருக்கும் பொதுவானது என்றும், அதை சில பல சட்ட வழி முயற்சிகளில் திருத்தி விடலாம் என அப்பாவித்தனமாக நம்புகின்றனர்.
மைக்ரோ சாஃப்டின் இலாபவெறியும், அத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்களது நலனுக்காக கட்சி நடத்தும் ஜெயலலிதாவின் அரசியலும் வேறு வேறு அல்ல. இதில் ஜெயலலிதாவுக்கு ஏதும் தெரியாது போல இவர்கள் வகுப்பு எடுக்கிறார்கள். மிடாஸ் நிறுவனம் மூலம் தரகு முதலாளிகளாகவும் கொள்ளையடிக்கும் அதிமுக தலைமைக்கு, மைக்ரோ சாஃப்டின் இலாபவெறியும், சதித்தனங்களும் எப்படி தவறாக தெரியும்?
சென்ற பதிவில் இதைச் சுட்டிக்காட்டும் பொருட்டு, மென்பொருள் விசயத்தில் முதலாளித்துவத்தின் இலாப வெறி குறித்து பருண்மையாக அறியமுடிகிற அறிவுத்துறையினர் மெக்டோனால்ட் உணவுவிடுதிகள் என்ற வகையில் சுதந்திர உணவுவிடுதிகள் நடத்துவதைத்தான் பிரதானப்படுத்துவார்களா? என்ற ஒரு கேள்வியை முன்வைத்திருந்தோம். ஆக தீர்வு என்ற வகையில் சுதந்திர மென்பொருட்களுக்கான இயக்கம் இந்த புளுத்து நாறும் அரசமைப்பில் ‘இரங்கத்தக்க சீர்திருத்தங்களைக்’ கூட பெறமுடியவில்லை என்பது தான் நிதர்சனம்.
இது ஒருபுறம் இருக்க லினக்ஸ் போன்ற சுதந்திர இயங்குதளங்களை பயன்படுத்தினால் மைக்ரோசாப்ட் நெட்டித்தள்ளுகிற நெருக்கடியிலிருந்து தப்பிக்க முடியும் என்று சில வாசகர்கள் கூறியிருந்தனர். அவர்களுக்கு நாம் வைக்கும் கேள்விகள் இதுதான்.
  • தமிழகத்தில் இதுபோன்ற சுதந்திர மென்பொருட்கள் பயன்படுத்துகிற வாய்ப்பை முறியடித்தது யார்?
  • இங்கும் மைக்ரோசாப்ட் போன்ற பெரு முதலைகள் ஏன் லாபியிங் வேலைகளில் ஈடுபடுகின்றன?
  • இதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிற தரகர்களான ஆளும் வர்க்கத்தையும் அரசமைப்பையும் புரிந்து கொள்ளாமல், மாற்றாமல் லினக்ஸ் போன்ற தளங்களை எப்படி மக்களுக்குச் சாதகமானதாக மாற்ற இயலும்?
  • சுதந்திர மென்பொருட்களை முழுமையாக பயன்படுத்துகிற வாய்ப்பு ஒரு சோசலிச அரசுக்குத்தான் உண்டு என்பதை இச்சம்பவங்கள் நிருபிக்கிறதா? இல்லையா?
லினக்ஸ் மேசைக்கணினி
மேலை நாடுகளில் சுதந்திர மென்பொருளுக்கான இயக்கம் தொடர்பான சமூக நடவடிக்கைகளில் நிலவுகிற கூறுகள் என்ன
இரண்டாவதாக மேலை நாடுகளில் சுதந்திர மென்பொருளுக்கான இயக்கம் தொடர்பான சமூக நடவடிக்கைகளில் நிலவுகிற கூறுகள் என்ன என்பதையும் நாம் பரிசிலீக்க வேண்டும். அமெரிக்கா போன்ற முதாலாளித்துவ நாடுகளிலேயே கூட முதலாளிகளைக் காறித்துப்பும் அளவிற்கு இணையத்தில் வீச்சான பிரச்சாரங்களைக் கொண்டு செல்கின்றனர். சென்ற பதிவில் ‘முதலாளிகள், வாழ்வையே விற்பதாகவும் வாங்குவதாகவும் பார்ப்பதற்கு நம்மை பழக்கப்படுத்துகின்றனர்’ என்ற ஒரு வாதத்தை வைத்தோம்.
பேராரசிரியர் லாரல் டேக் இன்னும் ஒரு படி மேலே செல்கிறார்:  நம்மை அறியாமலேயே நாம் நம் “விருப்பத்திற்கு மாறாக விற்பனைப் பண்டமாக” மாற்றப்படுகிறோம் என்பதை ஒரு உண்மையான ஆய்வாளருக்கே உரிய திறமையுடன் நிருபிக்கிறார். வருடத்திற்கு 140 பில்லியன் டாலர்கள் அள்ளுகிற பேஸ்புக், லைக்குகள் (Likes) மற்றும் பிரெண்ட்சிப் சேரிங்குகளைத் (Friendship Sharings) தான் பெரிதும் சார்ந்திருக்கிறது என்பதன் அடிப்படையில் அவர் வைக்கும் “பேஸ்புக் நமக்கு கூலிதரவேண்டும் (Wages For Facebook)” என்பதன் அடிப்படையிலான அறிக்கை (“Our fingerstips have become distorted from so much liking. Our feelings have gotten lost from so many friendships”) சில அறிஞர்களுக்கு சுய உணர்ச்சி செத்துவிடவில்லை என்பதைக் காட்டுகிறது.
இது தவிர Riseup.net போன்ற சிறு குழுக்கள் அமெரிக்க அரசு நம்மைக் கண்காணிப்பதை அனுமதிக்க இயலாது என்றும் அரசியல் சமூக பொருளாதார தளத்தில் அதிகாரங்கள் மக்கள் கையில் இருக்க வேண்டும் என்று சியாட்டலில் இருந்து கொண்டே அரசை எதிர்த்துப் போராடுகிற போராளிகளுக்கு யாரும் ஊடுருவிப் பார்க்க இயலாத மின்னஞ்சல் சேவைகளை வழங்குகிறது. இதுதவிர எட்வர்ட் ஸ்னோடன், ஜீலியன் அசாஞ்சேயின் விக்கி லீக்ஸ் போன்றவர்களின் பங்களிப்புகள் முதலாளித்துவத்துவ ஆளும் வர்க்க அடக்குமுறைகளை அம்பலப்படுத்த உதவுகிறது.
அமேசான் போன்ற நிறுவனங்கள் கிண்டில் சேவைகள் என்ற பெயரில் இணையதளப் புத்தகங்களை வைத்து வர்த்தகம் செய்கிற பொழுது காசு கொடுத்து வாங்க முடியாத பல்வேறு புத்தகங்களை Libgen போன்ற இணையதளங்கள் “அறிவு விற்பனைக்கு அல்ல” என்ற மானிட பண்புகளின் அடிப்படையில் சுதந்திரமாக தறவிறக்க வழிவகை செய்கிறது.
இவையெல்லாம் ஏகாதிபத்தியங்களை அம்பலப்படுத்தும் நல்ல முயற்சிகள் என்றாலும் இவையே அமெரிக்காவை வீழ்த்தி புரட்சியை கொண்டு வந்து விடாது. அப்படி புரட்சி வராமல் அறிவுத் துறையினரும் கட்டற்ற மென்பொருள் மூலம் விண்டோசை வீழ்த்தி விட முடியாது.
இவைகளை தொகுப்பாக பார்க்கிற பொழுது இவ்வியக்கங்களின் புறவயக் கூறுகள் “முதலாளித்துவம் தனக்கு சவக்குழிதோண்டுவோரையே மேலாக உற்பத்தி செய்கிறது” என்பதை நிரூப்பித்துக் காட்டுகிறது. இந்த வகையில் இணையங்களையும் மென்பொருட்களையும் மற்றும் முதலாளித்துவத்தின் பிற ஸ்தாபனங்களையும் பிரச்சார வடிவங்கள் மற்றும் போராட்ட முறைகள் என்ற அளவிலே மட்டுமே ஏகாதிபத்தியங்களை ஒழிக்க விரும்பும் புரட்சிகர அமைப்புகள் பயன்படுத்தும். ஏனெனில் நமக்கு பிரதான கடமையாக இருப்பது இந்த அநீதியான அரசமைப்பை கைப்பற்றி உழைக்கும் மக்களின் கூட்டிணைவில் பாட்டாளி வர்க்கத் தலைமையில் மாற்று மக்கள் அரசை அமைப்பதே.
இதைப் புறந்தள்ளி ‘வெறும் இணையம் தான் புரட்சி; தொழில்நுட்பம் தான் வளர்ச்சி’ என்று பார்க்கிறவர்கள் இறுதியில் முதலாளிகளின் நலனுக்காகத்தான் வேலை செய்ய முடியும். அவர்கள் தான் பன்சால் தலைமையில் இரவும் பகலுமாக குஜராத்தை குவாஞ்சோவாக காட்டுவார்கள்! தன்னையே படமெடுத்து டிவிட்டருக்கு அனுப்புவார்கள்! “பாசிசம், அழுகிநாறும்  முதலாளித்துவத்திற்கு முட்டு கொடுக்கும் வன்முறையான முயற்சி” என்று சொல்வதை நிரூபிக்க வேண்டுமானால் மோடியின் செல்பீ புகைப்படத்தை பார்க்க வேண்டும்.
இது ஒருபுறம் இருக்க, இந்தப் பதிவை நாம் சுதந்திர மென்பொருட்களுக்கான இயக்கத்தை நடத்தும் இடதுசாரி மாணவர்களையும் அறிவுத்துறையினரை  முன்வைத்தே வினவியிருக்கிறோம். ஒரு கம்யுனிஸ்ட் போராளி, இயக்கம் என்பதை கீழிருந்து மேல்நோக்கிய பாய்ச்சலாக பார்க்கிறார். சான்றாக ‘பாட்டாளி வர்க்க அரசு’ எதைப் பெற்றால் அதை எடுக்க முடியும் என்பதை நாம் தெலுங்கானாவின் நிலமீட்புப்போராட்டத்திலிருந்து எடுத்துக் கொள்ள இயலும். நிலப்பிரபுக்களுக்கு எதிராகவும் நிஜாம் அரசிற்கு எதிராகவும் விவசாயிகள் வர்க்கம் நிலத்தை மீட்டெடுப்பதிலே ஆளும் வர்க்கம் மரண அடி வாங்கியது; நிலப்பிரபுக்கள் ஓடி ஒளிந்தனர். இருந்த போதிலும் தொட்டி கொமரய்யாவை முதல் ஆளாக விவசாயி வர்க்கம் இழந்தது. இந்திய ராணுவம் நிஜாம் அரசுக்கு சார்பாக விவாயிகள் வர்க்கத்தை வெறி கொண்டு அடக்கியது. நிலத்தை மீட்டெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆண்டைக்கு எதிரான போராட்டத்தில் தொட்டி கொமரய்யா என்ன ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எம் சி ஏவா பயின்றார்?
அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தேவை கூரிய அரசியல் பார்வையும், குறையாத வர்க்க உணர்வும்தான். இதன்றி இந்த சமூக அமைப்பில் நாமே நேரடியாக எந்த சேவைகளை துவங்கினாலும் அவை வெற்றி பெறாது. சான்றாக தமிழ் வழிக் கல்வி பள்ளிகளை நாம் ஆரம்பிப்பதால் கல்வியில் தனியார் மயம் ஒழியாது, ஆதரவற்றோருக்கான பள்ளிகளை நாம் துவங்கினாலும் தொடர்ந்து நடத்த முடியாது, தொழிலாளிகளே முதலாளிகளாக நடத்தும் தொழிற்சாலைகள் முதலாளித்துவ அமைப்பில் சாத்தியமல்ல. அது போல ஏகாதிபத்தியங்களை வீழ்த்தாமல் அவர்களின் தொழில் நுட்ப ஆக்கிரமிப்பை நாம் வீழ்த்துவது குறித்து நினைக்கக் கூட முடியாது.
இதை ஒரு கம்யுனிஸ்ட் நெஞ்சிலே ஏந்தியிருப்பாரேயானால் சிங்கூரில் தொழிலாளர்கள் சுடப்பட்டிருப்பார்களா? ஜெயலலிதாவின் காலை நக்கிப் பிழைப்பார்களா? பாசிஸ்டுகளுக்கு பாதை வகுத்து கொடுத்தது எது? என்பதை பாராளுமன்ற ஜனநாயகப் பாதையில் பீடை நடை போடும் இடதுசாரிகளில் சிலராவது பரிசீலிப்பார்களா, தெரியவில்லை.
‘முதலாளித்துவ எதிர்ப்பு’ என்பது அறிவுவாதமாக மட்டுமே இருப்பதும் கைதட்டி கலைந்து செல்கிற கருத்தரங்கமாக இருப்பதும் களையப்பட வேண்டும். அறுதியிட்டுச் சொல்வதென்றால் பாட்டாளி வர்க்க அரசை ஆணையிலே வைப்பதற்கான செயல்திட்டத்தை நோக்கி நகருவதும் புரட்சிகர அமைப்புகளில் திரள்வதும் தன்னை ஒர் அணியாக மீட்டெடுத்துக் கொள்வதிலும் தராளமய தனியார்மய மறுகாலனியாதிக்க நாடுகளின் சமூக ஜனநாயகவாதிகள், அறிவுத்துறையினர் மற்றும் மாணவர்கள் செய்யவேண்டிய ஆகப் பெரும் முதற் கடமை. சமூகத்தின் புறவயமான நிலைமைகளும் தொட்டி கொமரய்யாவும் இவர்களிடம் இதைத்தான் கோருகிறார்கள்.
(குறிப்பு: சென்ற பதிவில் முதலாளித்துவம் மோசம் என்றால் எப்படித்தான் சம்பாதிப்பது என்று முக்கியமான கேள்வி ஒன்றை வைத்திருந்தார் வாசகர் ஒருவர். இது போக இந்திய மென்பொருள் துறையினரின் மறுமொழிகளையும் சேர்த்து அடுத்த பதிவில் பார்ப்போம். வினையாற்றுங்கள்)
-    மெக்கானிக் நாசர்

குறிப்புகள் எடுக்கப் பயன்பட்டவை vinavu.com
  1. ELCOT determines technical requirements for free laptops-The Hindu (26-06-2011)
  2. Free laptops not to have open source software-The Hindu (03-09-2011)
  3. It’s no ‘free laptop’ as long as it has proprietary software-The Hindu (06-02-2012)
  4. Proposal to adopt Microsoft’s proprietary software in schools: FSF India sends Letter to Chief Minister of Tamil Nadu;
  5. Political Principles of Riseup team
  6. Should Facebook pay its users?
  7. வீரஞ்செறிந்த மாபெரும் தெலுங்கானாப் போராட்டம் (1946-1951)
  8. எமது உழைப்பைத் திருடி விற்கும் பேஸ்புக்கிடம் கூலி கேட்போம்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக