வெள்ளி, 9 மே, 2014

ஜல்லிக்கட்டு தடை வரவேற்போம்; யானைகளை பாதுகாப்போம்!

ஜல்லிக்கட்டு தடை’ முதன்மையாக வரவேற்பதற்குக் காரணம், இதில் ஜாதிய பின்னணி. பிறகு மனிதர்கள் மீது குடல் சரிந்து விழும் அளவிற்கு கொடூர தாக்குதலும் மூன்றாவதாக ஈவு இரக்கமில்லாமல் மாடுகள் துன்புறுத்தலும்.>ஆனால், பார்ப்பன அறிவாளிகள் ஜல்லிக்கட்டை எதிர்ப்பதற்குக் காரணம் ‘மாடுகள்’ துன்புறுத்தப்படுகிறது என்கிற அவர்களின் வழக்கமான ‘மனிதாபிமானம்’ மட்டுமே. சரிதான். மாடுகள் இதில் துன்புறத்தப்படுகிறது. அதை நியாயப்படுத்த ‘பண்பாடு’ என்று காரணம் சொல்லப்படுகிறது. புளுகிராஸை விட உயர்ந்த ‘விலங்காபிமானம்’ கொண்டவர்கள் மாடுகளை ஜல்லிக்கட்டிலிருந்து பாதுகாத்தார்கள். அதனால் மனிதர்களும் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். மகிழ்ச்சி. இதே பண்பாட்டு ரீதியாக அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாவது இந்தியாவில் யானைகள். கோயில் யானைகள்.
துன்புறுத்தலில் முதன்மையானது, அவை அதன் இயல்புக்கு மாறாக காடுகளிலிருந்து மனிதர்கள் கூட்டமாக வசிக்கும் பகுதிக்கு கொண்டு வந்தது தனிமை படுத்தியது. பிறகு கோயிலில் கால்களில் சங்கிலியிட்டும் ‘பய’பக்தியோடும் துன்புறுத்தல் நடக்கிறது. நெரிசல் மிகுந்த கோயில் தெருக்களில் நடக்க முடியாமல் தவிக்கும் யானை யை பக்தி என்கிற பெயரில் கும்பலமாக மனிதர்கள் சூழ்ந்து கொண்டு ஈவ்டீசிங் செய்வதைப் போன்று, யானையை ஊர்வலமாக அழைத்துச் செல்வதும், தெருக்களில் பிச்சை எடுக்க வைப்பதும், 1 ரூபாயக்கு ஆசிர்வாதம் வாங்குவதும் பேரவலம்.
வான வேடிக்கைகள் வெடிகள் என்று கோயில் விழாக்களின் போது பேரோசையால் யானைகள் படும் துன்பத்திற்கு அளவே இல்லை.
காட்டிலிருந்து வழித் தவறி ஊருக்குள் புகுந்த யானையை வேட்டு வைத்து விரட்டுவது வாடிக்கை.காரணம், அந்த சத்தம் யானையை அச்சம் கொள்ள செய்யும் என்பதினாலேயே.
ஆனால், கோயில்களில் சங்கிலியால் கட்டப்பட்டும், மனிதர்களால் சூழப்பட்டும் அதிக சத்தத்துடன் வேட்டு வைத்து பக்தர்களின் மகிழ்ச்சிக்காகவும் புண்ணியத்திற்காகவும் யானைகள் துன்புறுத்தப்படுகிறது.
அங்குசத்தால் குத்தப்பட்டு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதால், பல நேரங்களில் ஜல்லிக்கட்டில் நடக்கும் கொலைகளைவிட கொடூரமான முறையில் யானைகளால் பாகன்கள் சின்னா பின்னமாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள்.
அதனாலும் கடுப்பான யானை பொதுமக்களை விரட்டி விரட்டி கொன்றிருக்கிறது. அவ்வளவு ஏன்?
தமிழ் நாட்டின் மகாகவி என்று சொல்லப்படுகிற பாரதியார்கூட திருவல்லிக்கேணி யானையால் தூக்கி வீசப்பட்டதால் தான் இறந்தார் என்ற செய்தியும் உண்டு.
ஆகையால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததைப்போல் கோயில் யானைகள் அல்லது அவர்கள் உச்சரிப்பிலேயே சொல்வதானால் கோ‘வி’ல் யானைகள் பக்தர்களால் சித்தரவதைக்கு உள்ளாக்கப்படுவதையும் தடை செய்ய வேண்டும்.
ஜல்லிக்கட்டை எதிர்த்து அதை ஒரு முடிவுக்கு கொண்டு வந்த ப்ளுகிராஸை சேர்ந்தவர்கள் அல்லது பார்ப்பன அறிவாளிகள் இதற்கும் ஒரு முடிவை கொண்டு வரவேண்டும்.
நாமும் அவர்களுக்கு நம்மால் ஆனா எல்லா உதவிகளையும் செய்யவெண்டும். mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக