வியாழன், 15 மே, 2014

நீதிமன்றம், தேர்தல் ஆணையம்: ஜெயாவின் குற்றக் கூட்டாளிகள் !

நீதிமுறைகளுக்கு சவால் விடும் வகையில் ஆட்டம் போட்டுவரும் ஜெயாவிற்கு நீதிமன்றம் உள்ளிட்ட அதிகார அமைப்புகள் பக்கவாத்தியம் வாசிக்கின்றன;
நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராமல், அம்மாவின் செல்வாக்கை மட்டுமே நம்பி தனித்துப் போட்டியிடுவதாக அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவும் அவரது கைத்தடிகளும் கூறிவருகிறார்கள். வெளிப்பார்வைக்கு உண்மையைப் போலத் தெரியும் இந்தக் காட்சி ஒரு பொய்த் தோற்றம். தமிழக மக்களின் கண்ணுக்குப் புலப்படாத, ஒரு திரைமறைவான கூட்டணியை உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் கமிசன் ஆகியவற்றோடு அமைத்துக்கொண்டு, ஜெயா இந்த நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கிறார் என்பதே உண்மை. ஜெயாவிற்கு எதிராக பெங்களூருவில் நடந்துவரும் சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும் சென்னைப் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவரும் வருமான வரி வழக்கு ஆகிய இரண்டிலும் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்புகள்; தேர்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தக் கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் தி.மு.க. தொடுத்த வழக்குகளைத் தேர்தல் கமிசனும், உயர் நீதிமன்ற நீதிபதிகளும் அணுகிய முறை; அ.தி.மு.க.வின் பணப்பட்டுவாடா எதிர்க்கட்சிகளின் குறுக்கீடு இல்லாமல் நடைபெற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு தேர்தலுக்கு முன்பு தமிழகம் தழுவிய அளவில் தேர்தல் கமிசனால் போடப்பட்ட 144 தடையுத்தரவு – இவற்றையெல்லாம் நியாயமாகப் பரிசீலிக்கும் யாரும் மேற்கண்ட முடிவுக்குத்தான் வர முடியும்.
மைக்கேல் டி குன்ஹா
ஜெயா – சசி கும்பலுக்கு விலை போகாமல் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை நடத்தி வரும் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.
1991-96-களில் தமிழகத்தின் முதல்வராக இருந்து ஜெயா நடத்திய ஊழல், கொள்ளை தொடர்பாக ஜெயா-சசி கும்பல் மீது நாற்பதுக்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன.
சட்டத்திற்கு அப்பாற்பட்ட வழிவகைகளைக் கையாண்டும், தனது பார்ப்பன சாதி செல்வாக்கு மற்றும் அரசியல், பண பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தியும் பெரும்பாலான வழக்குகளில் இருந்து தண்டனையின்றித் தப்பித்துக் கொண்டார், ஜெயா. பிளஸண்ட் ஸ்டே விடுதி வழக்கு மற்றும் டான்சி வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களால் ஜெயா தண்டிக்கப்பட்டாலும், சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் அசாதாரணமான முறையில் அவரைக் குற்றமற்றவராக அறிவித்தன. எனினும், சொத்துக்குவிப்பு வழக்கு, வருமான வரி வழக்கு உள்ளிட்ட மூன்று, நான்கு வழக்குகள் ஊத்தி மூடிவிட வாப்பின்றி, அவரது நிம்மதியை மட்டுமல்ல, அவரது அரசியல் நப்பாசைகளையும் கெடுத்து வருகின்றன. ஒரு புறம், நீதிபதிகள், சட்ட வல்லுநர்களையே திணறடிக்கும் வகையில் மனுவுக்கு மேல் மனு போட்டும், வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கியும் இந்த வழக்குகளை ஜெயா கும்பல் இழுத்தடித்து வருகிறது என்றால், இன்னொருபுறம் நீதிமன்றங்கள் இவ்வழக்கு விசாரணையின் இக்கட்டான தருணங்களில் ஜெயாவைக் காப்பாற்றும் ரட்சகனாக நடந்துகொண்டு, இந்த வழக்குகள் நியாயமாகவும் விரைவாகவும் விசாரிக்கப்படுவதைத் தடுத்து வருகின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் பவானி சிங்தான் அரசு வழக்குரைஞராக நீடிக்க வேண்டும்; நீதிபதி பாலகிருஷ்ணாதான் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் எனக் கோரி கடந்த ஆண்டு ஜெயா-சசி கும்பல் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜெயாவிற்குச் சாதகமாக அளித்த தீர்ப்பே குற்றவாளி ஜெயாவுக்கும் நீதியரசர்களுக்கும் இடையே இருந்துவரும் தொடர்பை அம்பலப்படுத்தியது. இன்னார்தான் தனக்கு எதிராக வாதாட வேண்டும்; இன்னார்தான் தனக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும் எனக் குற்றம் சாட்டப்பட்டவர் கேட்ட அதிசயமும்; உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சௌகானும் பாப்டேயும் அந்தக் கோரிக்கையை ஏற்று தீர்ப்பளித்த விநோதமும் இந்த வழக்கில் நடந்தது கண்டு சட்ட வல்லுநர்களே விக்கித்துப் போனார்கள்.
பி.எஸ்.சௌஹான்
ஜெயாவின் ஏஜெண்டாகச் செயல்படும் உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.சௌஹான்
நீதிபதி பாலகிருஷ்ணா பதவி ஓவுபெற்ற பிறகும்கூட, அவரே இந்த வழக்கின் நீதிபதியாகத் தொடர வேண்டும் என்று ஜெயா கும்பல் மட்டுமல்ல, உச்ச நீதிமன்றமும் அவ்வாறே விரும்பியது. ஆனால், இந்த ஏற்பாடுக்குச் சம்மதிக்காமல் பாலகிருஷ்ணா கழண்டுகொண்ட பிறகு, புதிய நீதிபதியாக மைக்கேல் டி குன்ஹா கடந்த ஆண்டு இறுதியில் பதவியேற்றார். பாலகிருஷ்ணாவைப் போல புதிய நீதிபதி குன்ஹாவைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பதை ஜெயா-சசி கும்பல் புரிந்துகொண்டவுடனேயே, அக்கும்பல் வழக்கு விசாரணையை இழுத்தடிக்கும் கிரிமினல் வேலைகளை மீண்டும் தொடங்கியது.
மைக்கேல் டி குன்ஹா வழக்கின் இறுதிகட்ட விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டவுடனேயே, “தம்மிடமிருந்து கைப்பற்றப்பட்ட, அதேசமயம் இவ்வழக்கிற்குத் தொடர்பில்லாத பொருட்களைத் தம்மிடம் ஒப்படைக்க”க் கோரி ஜெயா கும்பல் கடந்த ஜனவரி மாத இறுதியில் மனு போட்டது. இம்மனுவிற்குப் பதில் அளிக்க தனக்கு இரண்டு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும்” என வாய்தா கேட்டு குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்துகொள்ள முயன்றார், அரசு வழக்குரைஞர் பவானி சிங். “இது குற்றவியல் நீதிமன்றமா, அல்லது ஒத்திவைப்பு மன்றமா” என அப்பொழுதே கேள்வி எழுப்பிய நீதிபதி குன்ஹா, பவானி சிங்கின் கோரிக்கையை ஏற்க மறுத்து ஜனவரி 31-க்குள் பதில் அளிக்குமாறு அவருக்கு உத்தரவிட்டார்.
இந்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செயப்பட்ட பின், இறுதிகட்ட விசாரணை பிப் 3 அன்று தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசு வழக்குரைஞர் பவானி சிங்கோ அன்று இறுதிகட்ட வாதத்தைத் தொடங்குவதற்குப் பதிலாக, “ஜெயாவின் ஆலோசகராக இருந்த வி. பாஸ்கரன் நீதிமன்ற அனுமதியோடு வாங்கிப் போன 55 இலட்ச ரூபாய் மதிப்பு கொண்ட வெள்ளிப் பொருட்களைச் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்த பிறகுதான் மூல வழக்கைத் தொடர வேண்டும்” எனக் கோரும் மனுவை அளித்தார். இந்த மனு அடிப்படையிலேயே பொய்யும் புரட்டுத்தனமும் நிறைந்தது; மூல வழக்கு விசாரணையை முடக்க வேண்டும் என்ற கிரிமினல் நோக்கில் போடப்பட்டது என்பது விசாரணையின்போது அம்பலமானது.
03-c-1பாஸ்கரன் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே புற்றுநோய் முற்றி இறந்து போய் விட்டதை இவ்வழக்கில் அரசு தரப்பிற்கு உதவுவதற்காக அனுமதிக்கப்பட்ட தி.மு.க. வழக்குரைஞர் நீதிமன்றத்தில் போட்டுடைத்தார். இறந்துபோன பாஸ்கரனின் மகன் சாட்சி கூண்டிலேறி, “தனது தந்தை வாங்கிப் போன வெள்ளிப் பொருட்கள் முதல் குற்றவாளியின் – ஜெயாவின் போயசு பங்களாவில் இருப்பதை” அம்பலப்படுத்தினார்.
தனக்கு ஆலோசகராக இருந்த இதே பாஸ்கரன் மீது கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளிய இழிபுகழ் பெற்றது ஜெயா கும்பல். பாஸ்கரன் இறந்துபோவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் இந்தப் பொய் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். அப்படிபட்ட நபர் இறந்துபோனது தெரியாது என்பது போல நடித்தும், அந்த வெள்ளிப் பொருட்கள் ஜெயாவின் வீட்டிலே இருப்பதை மறைத்தும் இப்படியொரு மனுவை ஜெயா கும்பலும் அரசு வழக்குரைஞரும் கூட்டுச் சேர்ந்து போட்டிருப்பது பஞ்சமா பாதகங்களுக்கும் அஞ்சாத கிரிமினல்தனம் அல்லவா! இந்த உண்மைகள் அம்பலமான பிறகும்கூட, பாஸ்கரன் இறந்து போனதைத் தான் இன்னமும் நம்பவில்லை எனச் சாதித்தார், ஜெயாவின் கைக்கூலியான அரசு வழக்குரைஞர்.
சதீஷ் கே. அக்னிஹோத்ரி
மினி பஸ்களில் உள்ள இரட்டை இலையை மறைக்கக் கோரி தி.மு.க தொடுத்த வழக்கில் ஜெயாவின் மனது புண்பட்டு விடாதபடி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற தற்காலிகத் தலைமை நீதிபதி சதீஷ் கே. அக்னிஹோத்ரி.
இம்மோசடியான மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, மார்ச் 7 அன்று அரசு வழக்குரைஞர் தனது இறுதி வாதத்தைத் தொடங்க வேண்டுமென உத்தரவிட்டார், நீதிபதி குன்ஹா. ஆனால், பவானி சிங்கோ அன்று நீதிமன்றத்திற்கு வராமல் மட்டம் போட்டு நீதிமன்ற உத்தரவைக் கேலிக்கூத்தாக்கினார். இறுதி வாதத்திற்கான தேதி மார்ச் 10-க்குத் தள்ளிவைக்கப்பட்ட அன்றும் பவானி சிங் நீதிமன்றத்திற்கு வராமல் இருந்து வழக்கு விசாரணையைச் சீர்குலைத்தார். பிறகு மார்ச் 14 அன்று நீதிமன்றத்திற்கு வந்த பவானி சிங் இறுதி வாதத்தைத் தொடங்காமல், தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி பத்து நாட்களுக்கு வழக்கை ஒத்தி வைக்கக் கோரினார். இது தொடர்பாக அவர் அளித்த மருத்துவச் சான்றிதழோ, மருத்துவரின் கையொப்பம்கூட இல்லாமல் மோசடியான முறையில் தயாரிக்கப்பட்டிருந்தது. நடப்பது நாடகம் என்பதைப் புரிந்துகொண்ட நீதிபதி குன்ஹா இறுதி வாதத்தைத் தொடங்க வேண்டுமென உத்தரவிட, பவானி சிங் மறுக்க, இதன் காரணமாக அரசு வழக்குரைஞர் தனது ஒருநாள் சம்பளத்தை (ரூ.65,000-) அபராதமாகச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டு, விசாரணையும் மார்ச் 15-க்கு ஒத்திவைக்கப்பட்டது. பவானி சிங் அன்றும் எவ்விதக் காரணமும் கூறாமல் நீதிமன்றத்திற்கு வாரமல் போனதால், அவருக்கு மறுபடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை எதிர்த்து பவானி சிங் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் வேறுவழியின்றி அரசு வழக்குரைஞர் பவானி சிங் இறுதிகட்ட வாதத்தைத் தொடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்த இறுதி வாதத்தின் பொழுது, 1991-96 காலகட்டத்தில் ஜெயா-சசி கும்பல் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் தமிழகமெங்கும் சொத்துக்களை வாங்கி குவித்தார்கள் என இவ்வழக்கின் சாட்சியங்கள் அளித்த வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் படித்துக் காட்டினார், பவானி சிங். 1991-ல் வெறும் இரண்டு கோடி சொச்சம் சொத்துக்களைக் கொண்டிருந்த ஜெயாவின் சொத்து மதிப்பு, அவர் 1996-ல் முதலமைச்சர் பதவியிலிருந்து தமிழக மக்களால் துரத்தப்பட்ட சமயத்தில் 66 கோடியாக வளர்ந்து, இன்று அச்சொத்து களின் மதிப்பு 5,000 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பது இதன் மூலம் அம்பலமானது. பவானி சிங் சிறப்பு நீதிமன்றத்தில் படித்துக் காட்டிய இந்த மலைக்க வைக்கும் சொத்துப் பட்டியலை தினகரன், முரசொலி உள்ளிட்ட தி.மு.க. ஆதரவு நாளேடுகள் மட்டுமே வெளியிட்டன. நடுநிலை நாளேடுகள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்து, தினமணி உள்ளிட்டு பல நாளேடுகள் இந்த விவரங்களை வெளியிடாமல் ஜெயாவிற்கு விசுவாசமாக நடந்து கொண்டன.
****
அருணா ஜெகதீசன்
சொத்துக் குவிப்பு தொடர்புடைய வழக்கொன்றில் தனது வரம்பை மீறி ஜெயாவின் பினாமி நிறுவனங்களை விடுவித்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன்.
வானி சிங் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயா-சசி கும்பல் கொள்ளையடித்து வைத்திருந்த சொத்து விவரங்களின் ஆதாரங்களைப் படித்துக் காட்டிக் கொண்டிருந்த அதே நேரத்தில், குற்றவாளிகள் தரப்பு இதனை முடக்கும் புதிய சதித் திட்டத்தை சென்னையில் அரங்கேற்றினர். சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த போது, அந்நீதிமன்றம் ஜெயா-சசி கும்பலின் பினாமிகளால் நடத்தப்பட்டு வந்த 22 நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கித் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து ஜெயா-சசி கும்பல் அப்பொழுதே சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. சொத்துக்குவிப்பு வழக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பிறகு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் சென்னை உயர்நீதி மன்றத்திற்குக் கிடையாது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றமோ நீண்டகாலமாக கிடப்பில் கிடந்த இந்த வழக்கைத் தூசி தட்டி எடுத்து, அதனை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் பொறுப்பை நீதிபதி அருணா ஜெகதீசனிடம் ஒப்படைத்தது. அந்நீதிபதியும், “இந்த 22 சொத்துக்களும் மூல வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்குச் சொந்தமானதல்ல” எனத் தீர்ப்பெழுதி, அந்த நிறுவனங்களின் சொத்துக்களை விடுவித்துத் தனது “பொறுப்பை”க் கனகச்சிதமாக முடித்தார். மேலும், இந்த 22 நிறுவனங்களுக்கும் சொத்துக்குவிப்பு வழக்கிற்கும் தொடர்பிருக்கிறதா என்பதை மீண்டும் விசாரிக்குமாறு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு அறிவுரையும் வழங்கினார்.
சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான மனுக்கள் எங்கு விசாரிக்கப்பட்டாலும், அதில் பவானி சிங் மட்டுமே அரசு வழக்குரைஞராக ஆஜராக முடியும். ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கிலோ பவானி சிங்கிற்குப் பதிலாக அ.தி.மு.க.வைச் சேர்ந்தவரும் தமிழக அரசு வழக்குரைஞருமான இன்பதுரை அரசு வழக்குரைஞராக ஆஜராகி, ஜெயாவிற்குச் சாதகமான தீர்ப்பை வாங்கி கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்ல, இப்படியொரு வழக்கு சென்னையில் நடப்பதை குற்றவாளிகள் தரப்பு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்குத் தெரியாமல் மூடிமறைத்து, நீதிபதியை ஏமாற்றியுள்ளனர். இந்தப் பித்தலாட்டத்தனங்கள் அனைத்திற்கும் சென்னை உயர் நீதிமன்றமும் உடந்தையாக நடந்து கொண்டுள்ளது.
பவானி சிங் மார்ச் 21 அன்று தனது இறுதிகட்ட வாதத்தை எடுத்துவைக்கத் தொடங்கிய மறுநாளே சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து இப்படியொரு வரம்பு மீறிய தீர்ப்பு வெளிவந்திருப்பதைத் தற்செயலானதாகப் பார்க்க முடியாது. இந்த வழக்கு தொடர்புடைய சாட்சிகளுள் பெரும்பாலோர் வெளிநாட்டில் இருப்பது தெரிந்திருந்தும் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியிருப்பது மூலவழக்கு விசாரணையைக் காலவரையின்றித் தள்ளிப்போடும் உள்நோக்கம் கொண்டதாகும்.
சென்னை உயர்நீதி மன்றத்தின் இத்தீர்ப்பை நீதிபதி குன்ஹா ஒதுக்கித் தள்ளியதோடு, மூல வழக்கு விசாரணையை எந்தக் காரணத்தை முன்னிட்டும் நிறுத்த முடியாது எனக் குற்றவாளிகளின் பொட்டில் அடித்தாற் போலச் சொல்லிவிட்ட பிறகு, ஜெயா-சசி-பவானி சிங் கும்பல் மூலவழக்கு விசாரணையை முடக்கும் அடுத்த சதியை டெல்லியில் அரங்கேற்றினர்.
****
ரசு வழக்குரைஞர் பவானி சிங் தன் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய மறுத்த கர்நாடகா உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இதோடு தனது உடல் நிலையையும் காரணம் காட்டி வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கும்படியும் முறையிட்டார். சிறப்பு நீதிமன்றத்தால் பவானி சிங்கிற்கு விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை 1,30,000 ரூபாதான். ஆனால், இதனை ரத்து செய்யக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய்து வழக்காடுவதற்கு, நீதிமன்றக் கட்டணம், வழக்குரைஞர் கட்டணம் எல்லாம் சேர்த்து பன்னிரெண்டு இலட்ச ரூபாய்க்கும் அதிகமாகச் செலவழித்திருக்கிறார், அவர். 1,30,000 ரூபாயைக் காப்பாற்றிக் கொள்ள பன்னிரெண்டு இலட்ச ரூபாய் செலவு செவதால் பவானி சிங்கிற்கு இலாபமில்லைதான்; ஆனால், அவரை ஆட்டுவிக்கும் ஜெயா-சசிக்கு பம்பர் பரிசே கிடைத்தது.
"ஜெயா போலீசு"
ஜெயா கலந்து கொண்ட கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில், அவர் உருவம் பொதித்த முகமூடியை கடமை தவறாது விநியோகிக்கும் “ஜெயா போலீசு”.
பவானி சிங்கின் மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.சௌஹான், செல்லமேஸ்வர் அமர்வு, வழக்கின் இந்தப் பின்னணியெல்லாம், குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவரும் கூட்டுக் களவாணித்தனத்தையெல்லாம் தெரிந்துதான், தமிழகத்தில் தேர்தல் முடியும்வரை விசாரணை நடைபெறக்கூடாது என்ற உள்நோக்கத்துடன்தான், விசாரணைக்கு மூன்று வார காலம் – ஏப்ரல் 28 வரை தடைவிதித்து, ஜெயாவின் நெஞ்சில் பால் வார்த்திருக்கிறார்கள். ஏப்ரல் 28-க்குப் பிறகாவது வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுமா என்பதற்கும் எந்த உத்தரவாதத்தையும் தீர்ப்பில் கூறாமல், “அதற்குப் பிறகும் உங்களால் (பவானி சிங்) முடியாவிட்டால், கர்நாடகா உயர் நீதிமன்றத்திடம் முறையிடுங்கள்; வேறு வழக்குரைஞருக்கு வழிவிடுங்கள்” என்று அறிவுரை வழங்கி, ஜெயா-சசி கும்பல் வழக்கை மேலும் இழுத்தடிப்பதற்கான வாய்ப்பையும் திறந்துவிட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு 7.4.2014 அன்று வெளியானது. அதற்கடுத்த இரண்டாவது நாளில்-9.4.2014 அன்று, சொத்துக்குவிப்பு வழக்கோடு தொடர்புடைய லெக்ஸ் பிராபர்டீஸ் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவொன்றை விசாரித்துவரும் கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி சத்ய நாராயணா, “சொத்துக் குவிப்பு வழக்கில் ஆரம்பம் முதல் தற்போது வரை பல நாடகங்கள் அரங்கேறி வருகிறது. வழக்கைத் தாமதம் செய்ய பல வழிகளில் முயற்சி நடக்கிறது. அனைத்து மட்டத்திலும் நாடகமே அரங்கேறி வருவதாக” விசாரணையின்போது குறிப்பிட்டார். சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை முடக்கிப் போடுவதற்கு நடந்துவரும் சதிகள், மோசடிகளை விளங்கிக் கொள்வதற்கு இதற்கு மேலும் வார்த்தைகள் தேவையில்லை.
ஊழல், கிரிமினல் வழக்குகளில் சிக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்குகளை ஓராண்டுக்குள் முடித்துத் தீர்ப்பளிக்க வேண்டும் என்று மார்ச் 10 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இத்தீர்ப்பு வந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே முக்கியமானதொரு ஊழல் வழக்கில், பதினேழு ஆண்டுகளாகக் குற்றவாளிகளால் இழுத்தடிக்கப்படும் வழக்கில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக விசாரணைக்குத் தடைவிதித்து நீதிபதிகள் தீர்ப்பெழுதுகிறார்கள் என்றால், ஊழலுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் சண்டமாருதமெல்லாம் வெற்று வார்த்தைகள்தான்; ஆளுக்குத் தக்கபடி தீர்ப்புகளை எழுதுவார்கள், சட்டங்களை வளைப்பார்கள் என்பதுதானே உண்மை. நீதியின் செங்கோல் ஜெயாவிற்கு ஏற்றபடி வளையும் என்பதற்கு இன்னொரு உதாரணம் வேண்டுமென்றால், ஜெயா-சசிகலாவிற்கு எதிராக நடந்து வரும் வருமான வரி வழக்கில், அவ்விசாரணையை மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்து உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் அமர்வு அளித்திருக்கும் தீர்ப்பைக் குறிப்பிடலாம்.
***
சொத்துக்குவிப்பு வழக்கைப் போலவே வருமான வரி வழக்கும் கிட்டதட்ட 16, 17 ஆண்டு கால பாரம்பரியம் கொண்டது. ஜெயா-சசி கும்பல், இவ்வழக்கிலிருந்து தம்மை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு கடந்த எட்டு ஆண்டுகளாக ஊறுகாய் பானைக்குள் உறங்கிக் கொண்டிருந்தது. இவ்வழக்கை நான்கு மாதங்களுக்கு முன்பாகத் தூசிதட்டி எடுத்து விசாரிக்கத் தொடங்கிய கே.எஸ். ராதாகிருஷ்ணன் அமர்வு, தோழிகளின் மனுவைத் தள்ளுபடி செய்து, வழக்கை நான்கு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த மார்ச் இறுதியில் உத்தரவிட்டது.
ஆ. ராசா மறியல்
அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதற்காக பணத்தை பதுக்கி வைத்திருப்பதைச் சோதனைச் செய்யச் சென்ற தேர்தல் அதிகாரிகள் தி.மு.க.வினரை உடன் அழைத்துச் செல்ல மறுத்ததைக் கண்டித்து நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா தலைமையில் நடந்த சாலை மறியல்.
இதனைத் தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்துவரும் சென்னைப் பெருநகரப் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.தெட்சிணாமூர்த்தி, ஜெயா – சசிகலா இருவரையும் ஏப்.3 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டவுடனேயே, வழக்கை மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், ஜெயா. இந்த மனுவைப் பழைய மனு போல கிடப்பில் போடாமல் அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாகவே, ஏப்.10 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கே.எஸ். இராதாகிருஷ்ணன் அமர்வு கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது எனக் கருத்து தெரிவித்தது. ஆனால், அடுத்த ஐந்து நாட்களில் என்ன மாயம் நடந்ததோ, மனுதாரரின் தேர்தல் பணிகளைக் கருத்தில்கொண்டு மூன்று மாத கால அவகாசம் அளிப்பதாக ஏப்.15 அன்று தீர்ப்பு எழுதியது.
ஏப்ரல் 22 அன்றோடு தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிந்துவிடும் நிலையில் இவ்வழக்கை மேலும் மூன்று மாத காலம் நீட்டித்துத் தீர்ப்பளிக்க வேண்டிய அவசியமே கிடையாது. எனினும், தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசு அமைப்பது தொடர்பான பேரங்களிலும் ஜெயா கலந்துகொள்வதற்கு வசதியாகவே இந்த கால அவகாசத்தை அளித்துள்ளனர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள். புதிய அரசில் ஜெயா பங்கு பெறும் நிலை ஏற்பட்டால், இந்த வழக்குகளின் நிலை அதோகதிதான்!
03-c-2
வருமான வரி வழக்கில் இன்னொரு சுவாரசியமான திருப்பமும் உண்டு. உச்ச நீதிமன்றம் விசாரணையை மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்து தீர்ப்பளித்த அதேநாள் காலையில் இவ்வழக்கை விசாரித்துவரும் ஆர்.தெட்சிணாமூர்த்தியை இடம் மாற்றம் செய்து, அவரது இடத்தில் நீதிபதி மாலதியை அமர்த்தி அறிவிக்கை வெளியிட்டது சென்னை உயர் நீதிமன்றம். எனினும், அன்று மாலையே நீதிபதி தெட்சிணாமூர்த்தியின் இடம் மாற்றல் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, அவரை மீண்டும் பழைய இடத்திலேயே பணியமர்த்தும் உத்தரவு வெளியிடப்பட்டது. ஜெயாவை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டதற்காக தெட்சிணாமூர்த்தி மாற்றப்பட்டார் என்று கொண்டால், சுடுகாட்டு ஊழலை விசாரித்துத் தமது முன்னாள் கூட்டாளி செல்வகணபதிக்குத் தண்டனை அளித்த நீதிபதி மாலதியை வருமான வரி வழக்கை விசாரிக்க நியமனம் செய்தது தோழிகளுக்கு உறுத்தலை ஏற்படுத்தியிருக்கக் கூடும் எனக் கருதுவதற்கு இடமுண்டு.
***
“என்னை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது” என சட்டசபையிலேயே திமிராக அறிவித்தவர்தான் ஜெயா. கடந்த பதினேழு ஆண்டுகளாக அப்பாசிச திமிரை அச்சுப்பிசகாமல் நடைமுறைப்படுத்தியும் வருகிறார், அவர். தன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு வழக்குகளின் விசாரணைகளைச் சட்டப்படியும் நியாயப்படியும் சந்திக்காமல், பல்வேறு குறுக்கு வழிகளைக் கையாண்டு நீதிமன்ற நடவடிக்கைகளைக் கேலிக்குள்ளாக்கி வருகிறார், அவர். தனக்குத் தலையாட்டாத நீதிபதிகளை மிரட்டி விரட்டியடிக்கவும் தயங்காதவர் அவர். ஆனாலும், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகூட இதுவரை பாய்ந்ததில்லை. அந்தளவிற்கு நீதிமன்றங்கள் அவரது செல்வாக்கின் முன் செல்லாக்காசாக உள்ளன.
வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் தனது கட்சிக்காரர் தம்பிதுரைக்குச் சட்ட அமைச்சர் பதவியை வாங்கிக் கொடுத்து, தன் மீதான வழக்குகள் அனைத்தையும் ஊத்தி மூடிவிடவும் முயன்றார். அது முடியாமல் போன பிறகு, தனது சுயநலம் காரணமாக வாஜ்பாயி ஆட்சியைக் கவிழ்க்கவும் செய்தார். சட்டம், நீதி பரிபாலனம் உள்ளிட்டு சொல்லிக் கொள்ளப்படும் எந்தவொரு அறத்திற்கும் கட்டுப்படாமல், அனைத்திற்கும் மேலான எதேச்சதிகாரியாக அவர் நடந்து வருகிறார்.
அவரது நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுவதாக இருந்தேபாதும் மக்களின் அறியாமை, அதிகார வர்க்கம், ஓட்டுக்கட்சிகளின் பிழைப்புவாதம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றி வருகிறார். அவர் பதவியில் இல்லாதபொழுதுகூட சோ, சுப்பிரமணிய சுவாமி, சரத் பவார், தேவே கௌடா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள்; விஜ மல்லையா, சாராய உடையார் குடும்பம், ஸ்பிக் முத்தையா உள்ளிட்ட தரகு முதலாளித்துவக் கும்பல்; இந்து, தினமணி உள்ளிட்ட பத்திரிகை குழுமங்கள்; உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம், சௌகான், கே.எஸ். இராதாகிருஷ்ணன் தொடங்கி ஓவுபெற்றுச் சென்றுவிட்ட நீதிபதி தினகர், தங்கராசு உள்ளிட்ட ஒரு பெரும் அதிகார வர்க்கக் கும்பல் – எனவொரு பெரும் பட்டாளமே ஜெயாவின் விருப்பங்களை ஈடேற்றி வைப்பதற்காக வேலை செய்து வருவது கண்கூடு.
இந்தப் பின்னணியை வைத்துக்கொண்டுதான், சொத்துக்குவிப்பு வழக்கில் நியாயமாக நடந்துகொண்ட அரசு வழக்குரைஞர் ஆச்சார்யாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, அவரைத் தாமே பதவியிலிருந்து விலகிக் கொள்ளும்படி செய்தார். ஆச்சார்யாவைப் போலத் தமக்குத் தலையாட்டாமல் நடந்துவரும் நீதிபதி குன்ஹா மீது கொலைவெறிேயாடு இருக்கும் ஜெயா கும்பல் அவருக்கு இன்னும் என்னென்ன குடைச்சல்களைக் கொடுக்குமோ?
- செல்வம் vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக