ஞாயிறு, 4 மே, 2014

மூன்றாவது அணி ஆட்சி அமைக்க, காங்கிரஸ் ஒருபோதும் ஆதரவு அளிக்காது !

புதுடில்லி: ''மத்தியில் ஆட்சி அமைக்க, மூன்றாவது அணியை, காங்கிரஸ் ஆதரிக்காது,'' என, அந்த கட்சியின் துணை தலைவர் ராகுல் கூறியுள்ளதால், தேர்தலுக்கு பின், மூன்றாவது அணியை அமைக்க திட்டமிட்டிருந்த அரசியல் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஒரு அணியாகவும், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி, ஒரு அணியாகவும், லோக்சபா தேர்தலை சந்திக்கின்றன. சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ், அ.தி.மு.க., பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள், தனித் தனியாக தேர்தலை சந்திக்கின்றன. தேர்தல் கருத்து கணிப்புகள், பா.ஜ.,வுக்கு சாதகமாக இருந்தாலும், இடதுசாரி கட்சி தலைவர்கள், 'பா.ஜ., மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கூட்டணிகளுக்குமே, பெரும்பான்மை கிடைக்காது' என, உறுதியாக நம்புகின்றனர். இதனால், தேர்தலுக்கு பின், மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து, மூன்றாவது அணியை உருவாக்கி, மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு, இடதுசாரி கட்சி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.


பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை குறைவாக இருந்தால், காங்கிரஸ் ஆதரவை பெறுவதற்கும், அவர்கள் திட்டமிட்டுள்ளனர். காங்., மூத்த தலைவரும், வெளியுறவு துறை அமைச்சருமான சல்மான் குர்ஷித், 'மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைவதை தடுப்பதற்காக, மூன்றாவது அணிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்' என, கூறியிருந்தார். இதனால், மாநில கட்சிகளின் தலைவர்கள் பலர், பிரதமர் கனவில் மிதந்தனர்.

இந்நிலையில், காங்., துணை தலைவர் ராகுல், ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ''மத்தியில், மூன்றாவது அணி ஆட்சி அமைக்க, காங்கிரஸ் ஒருபோதும் ஆதரவு அளிக்காது. அந்த பேச்சுக்கே இடமில்லை,'' என, தெரிவித்துள்ளார். இதனால், பிரதமர் கனவில் மிதந்த, மாநில கட்சிகளின் தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர் dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக