ஞாயிறு, 4 மே, 2014

மத்திய உளவுப்பிரிவு : தமிழகத்தில் மேலும் பல பயங்கரவாதிகள் ஊடுருவல் !

சென்னை: பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யால் பயிற்சி அளிக்கப்பட்ட, மேலும் பல பயங்கரவாதிகள், தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக, மத்திய உளவுப்பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பெங்களூரு - கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த, இரட்டை குண்டு வெடிப்பு பற்றி சி.பி.சி.ஐ.டி., போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர். குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட தடயங்கள், பீகார் மாநிலம், பாட்னாவில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி கலந்து கொண்ட கூட்டத்தில் வைக்கப்பட்ட குண்டுகள் போல் இருப்பதை, தேசிய பாதுகாப்பு படையினர் உறுதி செய்துள்ளனர். இது தவிர, பாட்னாவில், குண்டுவெடிப்பு நடத்திய, இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள் தான், சென்னையிலும் குண்டு வைத்துள்ளனர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குண்டுகள், இந்தியன் முஜாகிதீன் அமைப்பு துவங்கப்பட்ட, கர்நாடக மாநிலம், மங்களூரில் தயாரிக்கப்பட்டு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


ரஹ்மான் எங்கே? குண்டு வெடிப்பு நடந்த, எஸ் 4 பெட்டியில், 70வது இருக்கையில் பயணித்த ரஹ்மான் என்பவர் பற்றிய முழு தகவல் சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு கிடைக்கவில்லை. 'ஆன்-லைன்' பதிவின் போது அவர் சார்பில், தரப்பட்ட முகவரியும் போலியாக இருப்பதால், சென்னை சென்ட்ரலில், முகத்தை மூடியபடி, ஓட்டம் பிடிக்கும் வழுக்கை தலை ஆசாமி அவராக இருக்குமோ என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் பயங்கரவாதிகள் ஊடுருவல்: இதற்கிடையில், பாட்னா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகளிடம், சென்னை குண்டுவெடிப்பு பற்றி விசாரிக்கப்பட்டுள்ளது. அப்போது, 'எங்களைப் போன்று, 'ஸ்லீப்பர் செல்' பயங்கரவாதிகள் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் எங்கு உள்ளனர் என்பது, எங்களுக்கே தெரியாது. குஜராத் சம்பவத்திற்கு, பழிக்கு பழி என்ற கொள்கை கொண்ட அவர்கள், தமிழகம், ஆந்திராவில் ஊடுருவி இருக்கலாம். ஆயுதங்கள் வைத்து இருக்கும் அவர்களால், எந்த நேரத்திலும் பேரிழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு' என, தெரிவித்துள்ளனர். இதனால், மத்திய உளவுத்துறையினர், தமிழக போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கரன் சிங்கா விரைந்தார்: சென்னை, சென்ட்ரலில் நடந்த குண்டுவெடிப்பு பற்றி, பெங்களூரில் துப்பு துலங்கியுள்ளதால், சி.பி.சி.ஐ.டி., - ஏ.டி.ஜி.பி., கரன் சிங்கா, எஸ்.பி.,க்கள் அன்பு, ஜெயகவுரி தலைமையிலான போலீசார் விரைந்துள்ளனர். அங்கு, இரண்டு பேர் பிடிபட்டுள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக