வியாழன், 8 மே, 2014

ஜல்லிக்கட்டு' விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை: காளைகள் துன்புறுத்தலை ஏற்க முடியாது என தீர்ப்பு

புதுடில்லி : தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான, 'ஜல்லிக்கட்டு' போட்டிகளை நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. 'மனிதர்களைப் போலவே, விலங்குகளுக்கும் சில அடிப்படை உரிமைகள் உள்ளன. அவை மீறப்படுவதை ஏற்க முடியாது' என, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பாரம்பரிய விளையாட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில், காளைகளை அடக்கும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு பிரதான இடம் உண்டு. ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகையின் போது, தமிழகத்தின் பல பகுதிகளில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். முடிஞ்சா மாடுகளோடு ஒண்டிக்கு ஒண்டி மோதுங்க, இதுதான் தமிழர்களின் பாரம்பரியம். ஏறு தழுவும் வீர இளைஞனுக்கு இதுதான் சங்க இலக்கியங்கள் தந்த இலக்கணம். ஒரு மாட்டை இருபது முப்பது பேர் துரத்துறது கோழைத்தனம், காட்டுமிறாண்டித்தனங்கள். வீரமாக கலாசார அடையாளங்களாகப் போற்றப்படுவது புதிதல்ல. காலத்துக்கேற்றவாறு நம்மைத்தான் நாம் மாற்றிக் கொள்ளவேண்டும்
இதற்காக, ஆண்டு முழுவதும் விரிவான ஏற்பாடுகளை, இப்போட்டிகளை நடத்துபவர்கள் மேற்கொள்வர். இந்தப் போட்டிகளை, ஏராளமானோர் ஆர்வமாக பார்த்து ரசிப்பதும் வழக்கம்.தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் என்றில்லாமல், சில குறிப்பிட்ட கிராமங்களில் மட்டுமே, இந்த வீர விளையாட்டு நடத்தப்பட்டு வந்ததால், இதைப் பார்க்கும் ஆர்வம், பிற பகுதி மக்களுக்கு அதிகமாக இருப்பது வழக்கமான ஒன்றே.இந்நிலையில், 'ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது, காளைகள் துன்புறுத்தப்படுவதால், அந்த போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும்' என, பிராணிகள் நல அமைப்புகள் சார்பில், புகார் தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.< நல அமைப்புகள்< கடந்த ஆண்டில், இடைக்கால உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட், 'வழக்கின் இறுதி விசாரணை முடியும் வரை, கடுமையான நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திக் கொள்ளலாம்' என, அனுமதித்தது. இதையடுத்து, தீவிர கெடுபிடிகளுடன், கடும் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது.இந்த வழக்கு விசாரணையின்போது, 'ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் காளைகள், பலவிதமான கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதனால், போட்டிகளுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்' என, பிராணிகள் நல அமைப்புகள் வலியுறுத்தின.தமிழக அரசு, தன் வாதத்தில், 'அரசு மற்றும் கோர்ட் விதித்த விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன' என, தெரிவித்தது.இந்நிலையில், வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான, இரண்டு நீதிபதிகள் அடங்கிய, 'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:ஜல்லிக்கட்டை முறைப்படுத்துவதற்கு, 2011ல் தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது. ஜல்லிக்கட்டு நடத்துவதால், உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன; காளைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன. பார்வையாளர்களும், போட்டியில் பங்கேற்பவர்களும் காயப்படுகின்றனர். ஜல்லிக்கட்டை நடத்த, என்ன தான் விதிமுறைகள் அரசு கொண்டு வந்தபோதிலும், அந்த விதிமுறைகள், முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை.ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மீது, மிளகாய் பொடி கலந்த தண்ணீரை ஊற்றுவது, காளைகளின் வாலை முறுக்குவது போன்ற, பலவிதமான சித்ரவதைகளுக்கு காளைகள் உட்படுத்தப்படுகின்றன. மனிதர்களுக்கு மட்டும் தான் அடிப்படை உரிமை உள்ளது என, கூற முடியாது; விலங்குகளுக்கும் உள்ளது. அந்த உரிமையை மீறி, விலங்குகளை துன்புறுத்த முடியாது.பல நாடுகளில், ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகள் இருப்பதாகவும், இது காலம் காலமாக தமிழகத்தில் ஒரு பாரம்பரிய விளையாட்டு என்றும், அதை தடை செய்யக் கூடாது என்றும், தமிழக அரசு சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை, நியாயமானது அல்ல. விலங்குகளைத் துன்புறுத்தி, ஒரு விளையாட்டை நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனால், காலம் காலமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வந்த வீர விளையாட்டை, இனிமேல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்பட்ட காளைகள், இனிமேல், விவசாய தொழில்களில் ஈடுபடுத்தப்படும். 'ரேக்ளா ரேஸ்'களுக்கும் தடை:
'ஜல்லிக்கட்டு' போட்டிகளுக்கு தடை விதித்து நேற்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், 'ரேக்ளா ரேஸ்' எனப்படும், மாட்டு வண்டி போட்டிகளுக்கும் தடை விதித்துள்ளனர். இது குறித்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறும் போது, 'தமிழகம், மகாராஷ்டிரா போன்ற பல மாநிலங்களில், வண்டிகளில் மாடுகளை பூட்டி, அவற்றை வேகமாக ஓட்டிச் செல்லும் போட்டி நடத்தப்படுகிறது; அந்த போட்டிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது' என்றனர்.
மேலும், இத்தகைய போட்டிகள் நடைபெறாமல் தடுக்க, தேவையான கண்காணிப்பு மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்ள, விலங்குகள் நல வாரியம் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சட்டசபைகளிலும், பார்லிமென்டிலும், விலங்குகள் துன்புறுத்தலை தடுக்கும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

ஜல்லிக்கட்டிற்கு தடை எதிர்த்து மேல்முறையீடு: விழா குழுவினர் கருத்து
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு கருதப்படுகிறது. தை இரண்டாம் நாளில், அனைத்து கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், அலங்காநல்லுார், பாலமேடு ஜல்லிக்கட்டு சுற்றுலா பிரசித்தி பெற்றது. அதிர்ச்சி: ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடத்த தடை இருந்த போதும், கோர்ட் வழிகாட்டுதல்படி நடந்தன. தற்போது ஜல்லிக்கட்டு நடத்த, மீண்டும் சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது, விழாக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இதை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்து, ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு பெற்று தர வேண்டும், என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நாராயணசாமி, பேரூராட்சித் தலைவர், பாலமேடு: உழவு மாடுகளுக்கு, தை இரண்டாம் நாள் கொம்பில் துண்டு கட்டி, அதை அவிழ்க்க, மாமன் மச்சான் உறவு முறையில் இருப்பவர்களுக்கு சவால் விடுவோம். மஞ்சமலை ஆற்றில் நடக்கும் துண்டு அவிழ்க்கும் நிகழ்ச்சி, பின் ஜல்லிக்கட்டாக மாறியது. மாடு பிடி வீரர்களை, வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. ஜல்லிக்கட்டிற்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது வருத்தமளிக்கிறது.நான்கு ஆண்டுகளாக, பேரூராட்சி சார்பில் ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டு நடந்தது. காளைகள் துன்புறுத்தப்படவில்லை; வீரர்கள் காயம்படவில்லை. இத்தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்.

பாலாஜி, ஜல்லிக்கட்டு விழாக்குழு கவுரவத் தலைவர், அலங்காநல்லுார்: ஜல்லிகட்டு நிகழ்ச்சியை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் பார்ப்பர். விலங்குகள் நல வாரியத்தினர் கொடுத்த தகவலின்படி ஜல்லிக்கட்டு நடத்த, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. தமிழக பாரம்பரிய விளையாட்டிற்கு எதிரானது. தமிழக அரசு நிச்சயம் மேல்முறையீடு செய்து, ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை உள்ளது.
ராஜசேகர், ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர், மதுரை:சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. இது எதிர்பாராதது. மாநிலத்தில் நுாற்றுக்கணக்கான இடங்களில் நடந்த இந்த வீர விளையாட்டு, பல்வேறு காரணங்களால் தற்போது, 30 இடங்களில், கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடக்கிறது.ஜல்லிக்கட்டில், ஓரிரு வினாடிகள் மட்டும் காளைகள் களத்தில் நிற்கின்றன. பிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனியில் நடக்கும் இதுபோன்ற விளையாட்டுகள் குறித்தும், கோர்ட்டில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டது. 400 கிலோ எடையுள்ள மாடு, 110 கிலோ எடை வரை, சாதாரண நிலையில் தாங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி பகுதியில் கூட, 400 ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக