திங்கள், 5 மே, 2014

வெளிநாட்டு துணை தூதரகங்களை தாக்கும் ஐ.எஸ்.ஐ திட்டம் முறியடிப்பு

புதுடெல்லி: சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம்,  பெங்களூரில் உள்ள இஸ்ரேல் துணை தூதரகம் ஆகியவற்றின் மீது  தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் உளவுப்புரிவின் (ஐ.எஸ்.ஐ)   திட்டத்தை முறியடித்துள்ளதாக மத்திய பாதுகாப்பு நிறுவனங்கள்  கூறியுள்ளன. இந்தியாவில் உள்ள துணை தூதரகங்கள் மீது தாக்குதல்  நடத்தும் சதி திட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த ஜாகிர் உசேன்  ஈடுபட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு நிறுவனங்களுக்கு தென்கிழக்கு  ஆசிய நாடு ஒன்று தகவல் தெரிவித்தது. இதையடுத்து அவரை  கண்காணிக்கும் நடவடிக்கையில் இந்தியா இறங்கியது. ஜாகிர் உசேன் இலங்கையில் தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக்  கொண்டு வந்தார். இதையடுத்து அவரை கண்காணிக்க இலங்கை  அரசின் உதவியை இந்தியா நாடியது. இறுதியாக ஜாகிர் உசேன் கடந்த  மாதம் 29ம் தேதி சென்னை வந்தபோது கைது செய்யப்பட்டார்.  அவரிடம் மத்திய பாதுகாப்பு நிறுவனங்கள் விசாரணை நடத்தியதில்  திடுக் தகவல் வெளியானது. சென்னையில் உள்ள அமெரிக்க துணை  தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் துணை தூதரகம்  ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவுப் பிரிவு  (ஐ.எஸ்.ஐ) திட்டமிட்டுள்ளது.


இதற்காக மாலத்தீவில் இருந்து 2 பேரை சென்னைக்கு அனுப்பவும்,  அவர்களுக்கு தேவையான போலி பாஸ்போர்ட், தங்குமிடம்  ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொடுக்க ஜாகிர் உசேனின் உதவியை  ஐ.எஸ்.ஐ நாடியுள்ளது. ஜாகிர் உசேனை இலங்கையில் உள்ள  பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி அமிர் ஜூபைர் சித்திக்  வழிநடத்தியுள்ளார். அமெரிக்க, இஸ்ரேல் தூதரகங்களின் படங்களும்  ஜாகிர் உசேனிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த போட்டோக்கள்  பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமிர் ஜூபைர்க்கு இ-மெயில் மூலம்  அனுப்பப்பட்டுள்ளது.

அதை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள கம்யூட்டர்  மூலம் டவுன் லோடு செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஜாகிர் உசேன் சரியான நேரத்தில் கைது செய்யப்பட்டதால்,  தூதரகங்கள் மீதான தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக மத்திய  பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த குற்றச்சாட்டை  இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மறுத்துள்ளது. இது குறித்து  பாகிஸ்தான் தூதரகத்தின் தகவல் தொடர்பாளர் முகமது தாவுத்  எதிஷாம் கூறுகையில், ‘‘இந்த குற்றச்சாட்டு யூகத்தின்  அடிப்படையிலானது. இது அவதூறு பிரசாரம் போல் தெரிகிறது.  பாகிஸ்தானும் அதன் அரசு அமைப்புகளும் பொறுப்பானவை. அவைகள்  இதுபோன்ற செயலில் ஈடுபடுவதில்லை’’ என்றார். dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக