வெள்ளி, 9 மே, 2014

கலைஞர்: நீதிமன்ற வரலாற்றில் இதுவரை கண்டும் கேட்டுமிராத வெட்கக்கேடான உண்மை!

உடன்பிறப்பே,

ஏற்கனவே 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் திட்ட மிட்டு, விசாரணை
தாமதப்படுத்தப்பட்ட இன்றைய நிலையிலும் இந்த வழக்கினை தொடர்ந்து மேலும் தாமதப்படுத்த பல்வேறு தந்திரங்களும் உத்திகளும் கையாளப்படுகின்றன. அதிலே ஒன்றுதான் அரசு வழக்கறிஞரே ஒரு மனுவினைத் தாக்கல் செய்தது. அதாவது சென்னையில் உள்ள பாஸ்கரன் என்பவரிடம் கொடுக்கப்பட்ட ஜெயலலிதாவுக்குச் சொந்தமான - 1,116 கிலோ வெள்ளிப் பொருள்களை, பெங்களூர் நீதிமன்றத் துக்குக் கொண்டுவர வேண்டுமென்று ஒரு மனுவினை அரசு வழக்கறிஞர் நீதிபதியிடம் தாக்கல் செய்தார்.வழக்கு முடிகின்ற நேரத்தில், அரசு வழக்கறிஞரே முன்வந்து இவ்வாறு ஒரு மனுவினைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? வழக்கினைத் தொடர்ந்து தாமதப்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு அந்த மனு, அரசு வழக்கறிஞரால் தாக்கல் செய்யப் பட்டது. ஆனால், பேராசிரியர் சார்பில் ஒரு மனு மூலமாக, குறிப்பிட்ட அந்தப் பாஸ்கரன் என்பவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்ற விவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எனவே அரசு வழக்கறிஞர் பவானி சிங் தாக்கல் செய்த இந்த மனுவினைத் தள்ளுபடி செய்து, சிறப்பு நீதிபதி 28-2-2014 அன்று தீர்ப்பு அளித்திருக்கிறார்.
அந்தத் தீர்ப்பில்தான்: “இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூரில் நடந்து வருகிறது. நீதிபதி பி.ஏ. மல்லி கார்ஜுனையா, இந்த வழக்கினை விசாரித்தபோது, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 313இன் கீழ், குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி, வாக்குமூலம் கொடுத்துவிட்டனர். நீதிபதி பாலகிருஷ்ணா இந்த வழக்கினை விசாரித்த போது, சாட்சிகள் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. அரசுத் தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்களும் வாதத்தை முடித்து விட்டனர். இந்த வழக்கு தொடர்பாக அனைத்து விவகாரங்களும் முடிவுக்கு வந்துள்ளதாக நீதிபதி பாலகிருஷ்ணா 14-8-2013 அன்றே குறிப்பிட்டிருந்தார். அதையும் கடந்து தற்போது வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.


கடந்த 13 ஆண்டுகளாக அரசுத் தரப்பில் ஜெயலலிதா தரப்புக்குச் சொந்தமான இந்த வெள்ளிப் பொருள்களை பாஸ்கரனிடமிருந்து பெற்றுக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பது குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை”. “வழக்கில் மூன்றாவது நபர் (கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர்) சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று, சென்னையில் இருந்த தங்க, வெள்ளி ஆபரணங்கள் பெங்களூருக்குக் கொண்டு வரப்பட்ட நேரத்தில், பாஸ்கரனிடமிருந்து இந்த வெள்ளிப் பொருள் களைக் கொண்டுவர வேண்டுமென்று அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஏன் மனு தாக்கல் செய்யவில்லை?”

 
“அரசு வழக்கறிஞரான, பவானி சிங் கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து பணியாற்றி வருகிறார். அந்தக் கால கட்டங்களில் இதுபோன்ற மனு எதையும் அவர் தாக்கல் செய்யவில்லை.”  “இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ள பவானி சிங்கிற்கு, முதல் குற்றவாளி யின் வெள்ளிப் பொருள்கள் சென்னையில் இருப்பது தெரியவில்லையா? வழக்கில் இறுதி வாதத்திற்காக ஆவணங்களைப் படித்தபோதுதான் வெள்ளிப் பொருள்கள் குறித்த விவரம் அவருக்குத் தெரிந்ததாகச் சொல்வது உண்மையாகவும், நம்பும்படியாகவும் இல்லை. மேலும் வெள்ளிப் பொருள்களை வாங்கிச் சென்ற பாஸ்கரன் உயிருடன் இல்லை என்பது தெரிந்தும், அவரிடம் பொருள்களைக் கேட்கச் சொல்வதும், அவர் இறந்து விட்ட தகவல் நீதிமன்றத்தில் மரணச் சான்றிதழுடன் உறுதி செய்யப்பட்ட போதும், அரசு வழக்கறிஞர் அதனை ஏற்காமல், தனது கருத்தில் உறுதியாக இருந்து, தொடர்ந்து மனுவை வலியுறுத்து வதும் சட்டப்படி ஏற்கத் தக்கதல்ல.
 இதனைப் பார்க்கும்போது, வழக்கைக் கால தாமதம் செய்யும் நோக்கத்திலேயே அரசு வழக்கறிஞர் பவானி சிங் நடந்து கொள்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி வீட்டில் இருந்த வெள்ளிப் பொருள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு அதன் விலை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான விவரம் வழக்கு ஆவணங்களில் உள்ளது. வழக்கு விசாரணை முடியும் நிலையில், வெள்ளிப் பொருள்களைக் கொண்டு வருவதற்காக, கால நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியமில்லை. அந்த வாதமும் சரியானதல்ல. எனவே வெள்ளிப் பொருள் களைக் கொண்டுவர வேண்டுமென்ற அரசு வழக்கறி ஞரின் மனுவில் எவ்வித முகாந்திரமும் இல்லை. இது தேவையற்ற மனு என்று கருதி தள்ளுபடி செய்கிறேன்” என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங் அவர்களின் மனு பற்றி சிறப்பு நீதிபதி அவர்களே விரிவாகத் தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார் என்றால், இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் எவ்வாறெல்லாம் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு மிகவும் அனுசரணையாக நடந்து கொண்டு வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேறு உதாரணம் வேண்டுமா?
இப்படிப்பட்ட வழக்கறிஞர் பவானி சிங் அவர்கள் இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நீடிக்க வேண்டு மென்று, குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதா தரப்பினர் உச்சநீதி மன்றம் வரை சென்று வழக்கு தொடுத்து வலியுறுத்தியதின் உண்மையான பொருளும் உள்நோக்கமும் இப்போதாவது உள்ளங்கை நெல்லிக் கனியென ஊராருக்குப் புரிகிறதா இல்லையா?


சொத்துக் குவிப்பு வழக்கினைப் பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு இரண்டு வழக்கறிஞர்கள் - ஒருவர் அரசு சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு, அரசு தொடுத்த வழக்கினைப் புறக்கணித்து, தான் ஆற்றிட வேண்டிய கடமையிலிருந்து தவறி, குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதா தரப்பினருக்கு ஆதரவாக வாதாடும் அரசு வழக்கறிஞர் பவானி சிங்; மற்றொருவர் ஜெயலலிதாவிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு, அவருக்கு ஆதரவாக வாதாடும் அவருடைய சொந்த வழக்கறிஞர் பி.குமார்.
நீதிமன்ற வரலாற்றில் இதுவரை கண்டும் கேட்டுமிராத இந்த வெட்கக்கேடான உண்மையை தமிழ்நாட்டு நாளேடுகள் மறைக்க முயன்றாலும், பொது அறிவு மிகுந்த தமிழக மக்களுக்குத் தெரியாமல் போய்விடுமா?
 நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்கா 7-3-2014 அன்று இறுதி வாதம் தொடங்குமென்று அறிவித்தார். ஆனால் அன்றையதினம் அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகவே இல்லை. வழக்கு 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 10ஆம் தேதியன்றும் அரசு வழக்கறிஞர், பவானி சிங் ஆஜராகவில்லை. இதை அடுத்து வழக்கு 14-3-2014 அன்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதி இறுதி வாதத்தைத் தொடங்க உத்தரவிட்டார். அன்றைய தினம் பவானி சிங் நீதிமன்றத்தில் ஆஜராகி, உடல் நிலை சரியில்லை என்று காரணம் கூறி, வழக்கு விசாரணை யைத் தாமதப்படுத்த அவர் மேற்கொண்டு வரும் முயற்சியின் தொடர்ச்சியாக பத்து நாட்கள் அவகாசம் கேட்டுக் கொண்டதோடு, அதற்கான மருத்துவச் சான்றிதழ்களையும் சமர்ப்பித்தார். நீதிபதி அந்தச் சான்றிதழ்களைப் பார்த்து அதிருப்தி அடைந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகியும் வாதிடாத அரசு வழக்கறிஞர் பவானி சிங் அவரது ஒரு  நாள் ஊதியமான 65 ஆயிரம் ரூபாயை அபராதமாகச் செலுத்த வேண்டுமென்று உத்தரவிட்டார். 15ஆம் தேதியன்றும் பவானி சிங் நீதிமன் றத்தில் எந்தவித அறிவிப்புமின்றியும், காரணத்தைத் தெரிவிக் காமலும் ஆஜராகவில்லை. அவரது உதவியாளர் முருகேஷ் அரசு வழக்கறிஞர் வராதது பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றார். எனவே அரசு வழக்கறிஞரின் அன்றைய ஒரு நாள் சம்பளமான 65 ஆயிரம் ரூபாயையும் அபராதமாகச் செலுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞரின் வாதம் முடிந்த பிறகுதான் தங்கள் வாதத்தைத் தொடங்க முடியுமென்று கூறி விட்டார்கள். அதற்குப் பிறகு நீதிபதி அவர்கள் அரசு வழக்கறிஞர் 21-3-2014 அன்று வாதத்தைத் தொடங்க வேண்டுமென்று கண்டிப்பாக உத்தரவிட்டார்.

இதற்கிடையே அரசு வழக்கறிஞர் பவானி சிங், நீதி மன்றத்தில் ஆஜர் ஆகாததற்காக சிறப்பு நீதிமன்றம் விதித்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமென்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண ராவ் தள்ளுபடி செய்ததால், 21-3-2014 அன்று பவானி சிங் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி தனது இறுதி வாதத்தைத் தொடங்கி, இந்த வழக்கில் சாட்சியம் அளித்தோர் என்னவெல்லாம் கூறினார்கள் என்பதை யெல்லாம் தொகுத்து நீதிமன்றத்தில் தொடர்ந்து கூறி வருகிறார். பல நூறு கோடி ரூபாய்க்கு ஜெயலலிதா சொத்துக் குவித்தது பற்றி, சாட்சிகள் எல்லாம் என்ன கூறியிருக்கிறார்கள் என்பது அதன் பிறகுதான் உலகத் திற்கு ஒவ்வொன்றாகத் தெரிய வந்து கொண்டிருக்கிறது.
அந்தச் சாட்சிகள், தங்கள் சாட்சியங்களில் இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி என்னென்ன உண்மை களைக் கூறினார்கள் என்பதை நானும் ஏப்ரல் மாதம் என்னுடைய தேர்தல் சுற்றுப் பயணங்களில் எடுத்துக் கூறி, அதை ஒருசில நாளேடுகளும் வெளியிடத் தொடங்கியது தான் தாமதம்! தவறு செய்தவர்களால் தாங்கிக் கொள்ள முடியுமா? இந்த வழக்கு விசாரணையை மேலும் தள்ளி வைக்க வாய்தா வாங்கித் தாமதப்படுத்திட என்ன வெல்லாம் செய்யலாம் என்று படாதபாடுபட்டு பல்வேறு வழிகளிலும் முனை கிறார்கள். அதில் ஒன்றுதான், ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடுவதற்காக அரசினால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர், கடமை தவறி நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி, கர்நாடக அரசே அவரை விலக்கிய நிலையில், ஜெயலலிதா தரப்பு உச்சநீதிமன்றம் வரை சென்று அதே அரசு வழக்கறிஞரான பவானி சிங் அவர்களே நீடிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தது; அந்தக் கோரிக்கையினையும் ஏற்று, உச்சநீதிமன்ற நீதிபதி சவுஹான் அவர்கள்தான் அப்போதும் பவானி சிங் தொடரலாம் என்று உத்தரவிட்டார்.


அந்த அரசு வழக்கறிஞர், பவானி சிங் சிறப்பு நீதி மன்றத்தில், தொடர்ந்து ஆஜராகாத காரணத்தால், சிறப்பு நீதிபதி அபராதம் விதித்தார். அதனை எதிர்த்து பவானி சிங் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, அங்கேயும் அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த வழக்கை அதே பவானி சிங் பின்னர் உச்சநீதி மன்றத்திற்கு எடுத்துச் சென்றார்.
இந்த வழக்கில், தனக்கு எதிராக வாதாடுவதற்காக அரசால் நியமிக்கப்பட்ட குறிப்பிட்ட வழக்கறிஞரே நீடிக்க வேண்டுமென்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரும்பு வதற்கும், முயற்சிப்பதற்கும் காரணம் என்ன?  அந்தக் குறிப்பிட்ட வழக்கறிஞர், உச்சநீதிமன்றம் வரை சென்று, இந்த வழக்கினை மேலும் மூன்று வாரங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டுமென்று கோரிக்கை வைப்பதற்கான காரணம் என்ன? உண்மையிலேயே பவானி சிங்கிற்கு உடல் நலம் சரியில்லை என்றால், அந்தப் பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டியதுதானே? அல்லது அவருடைய உதவியாளரைக் கொண்டு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டியதுதானே? உடல் நலம் அவருக்குச் சரியான பிறகு, மீண்டும் அவரே வந்து விசாரணையைத் தொடரலாம் அல்லவா?
உச்சநீதிமன்றம் 2003ஆம் ஆண்டு வழக்கு விரைவிலே முடிக்கப்பட வேண்டுமென்றும், நாள்தோறும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் உத்தரவிட்ட பிறகும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கே புறம்பாக - உச்சநீதிமன்றமே மூன்று வார காலத்திற்கு வழக்கினை நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் என்ன? அந்த மூன்று வார காலம் என்பது முக்கியமான கட்டம்.

மூன்று வார காலத்திற்குள், இந்த வழக்கு நடைபெற்று, தீர்ப்பு கூறப்படுமானால், நாடாளுமன்றத் தேர்தலில் குற்றம் சாற்றப்பட்டவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடும் என்று நினைத்தோ என்னவோ, இப்படி ஒரு “வழக்கு ஒத்தி வைப்பு நாடகம்” நடைபெற்று ள்ளதோ என்று நடுநிலை யாளர்கள் சந்தேகிக்கும் நிலை  ஏற்பட்டுள்ளதல்லவா? அதன் ரகசியம்தான் என்ன?
வழக்கறிஞர் ஒருவருக்கு உடல் நலம் இல்லை என்பதற்காக, வழக்கு விசாரணையே மூன்று வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்படலாம் என்றால், இனி நாட்டிலே உள்ள அத்தனை வழக்கறிஞர்களும், வாய்தா வாங்குவதற்காக, ஆளுக்கு ஒரு மருத்துவச் சான்றிதழைப் பெற்று, மூன்று வாரம் என்றும், மூன்று மாதம் என்றும், வழக்கினை விசாரிக்கத் தடை கோருவார்களானால் அதன் விளைவு எங்கே போய் முடியும்?

உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பினை வழங்கியது பி.எஸ். சவுகான் மற்றும் ஜே. செல்லமேஸ்வர் ஆகியோர் அடங்கிய அமர்வாகும். இதில் பி.எஸ். சவுகான் அவர்கள் விரைவில் ஓய்வு பெறவிருக்கிறார் என்ற உண்மையையும் மறந்து விட முடியாது. இவரேதான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கில் பவானி சிங் அரசு வழக்கறிஞராக நீடிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்த வரும் ஆவார். பவானி சிங்கின் முக்கிய கோரிக்கை அபராதத் தொகையைப் பற்றியதுதான்; ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதி, மூன்று வார காலத்திற்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையையே ரத்து செய்கிறார் என்றால் உச்சநீதிமன்றம் எந்த அளவிற்கு மிகுந்த பெருந்தன்மையோடு(?) நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது அல்லவா?
பவானி சிங் அவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த அபராதம் இரண்டு நாட்களுக்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய். அந்தத் தொகையைச் செலுத்தாமல் இருக்க, வழக்கு தொடுத்ததன் மூலம் பவானி சிங் செலவழித்திருப்பது எவ்வளவு தெரியுமா? உச்சநீதி மன்றத்தில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் ஒரு வழக்கில் ஆஜராக இலட்சக்கணக்கில் கட்டணம் வாங்குகிறார்கள். பவானி சிங்குக்காக உச்சநீதி மன்றத்தில் வாதாடிய நாகேந்திர ராய் அவர்கள் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவர் என்பதால் அவருக்குப் பல இலட்ச ரூபாய் கட்டணமாகக் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதைத் தவிர உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இரண்டு இலட்சம் ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும். எனவே ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயைப் பாதுகாக்க, யாராவது பல இலட்சம் ரூபாயைச் செலவழிப் பார்களா? அதிலும் பவானி சிங் அவர்களின் நிதி நிலையைப் பார்த்தால், அவர் அரசு வழக்கறிஞர் என்ற முறையில் இலட்சக்கணக்கில் கட்டக்கூடிய அளவிற்கு வசதி படைத்தவராகத் தெரியவில்லை. எனவே அவரைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி, அவரிடமிருந்து பிரதிபலனாக எதையோ எதிர்பார்த்து (?) அவருக்காக உச்சநீதிமன்றத்தில் வேறு யாரோ பணம் செலவழித்து, மூத்த வழக்கறிஞரை நியமித்து வாதாடியிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது அல்லவா?
அவ்வாறு பின்பலமாக இருந்தவர்களுக்கு என்ன இலாபம்? அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீடித்தால், அவருடைய வாதம் தங்களுக்குப் பெரிதும் பயன்படும் என்று நினைப்பவர்கள் யார்? அப்படி நினைப்பவர் களுக்கு, இந்த விசாரணையில் மேலும் மூன்று வாரங்களுக்கு ஒரு வாய்தா கிடைப்பதன் காரணமாக, நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்பாக தீர்ப்பு வராமல் செய்யலாம். அப்படி தீர்ப்பு வெளிவந்து விடுமானால், அது தேர்தல் முடிவினைப் பாதிக்குமோ என்று அஞ்சுகிறார்கள் என்றால், அவர்கள் மடியிலே கனம் இருப்பதாகத்தானே பொருள்!

வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைப்பதன் காரணமாக, தேர்தலுக்கு முன்பாகத் தீர்ப்பு வருவதை ஒத்தி வைக்க விரும்புகிறார்கள் என்பதுதானே பொருள்! இந்தக் கருத்தினை நான் மட்டும் கூறவில்லை. பொருளாதாரம் மற்றும் சட்ட நிபுணரான டாக்டர் கே. ஸ்ரீதர் கூறும்போது, “பொதுவாக குற்றவாளிகள் தரப்பில்தான் வாய்தா கேட்பார்கள், ஆனால் இதில் அரசுத் தரப்பில் வாய்தா கேட்பது என்பது சரியான நடைமுறை அல்ல! பவானி சிங் தனது சொந்த செலவில் உச்சநீதிமன்றத்தை நாடவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது” என்று கூறியிருக்கிறார்.

அதுபோலவே மூத்த வழக் கறிஞர், சுரேஷ் நாயக் கூறும்போது, “இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வாதம் செய்பவர்  (பவானி சிங்) எப்படிச் செயல்படுகிறார் என்பதைச் சட்ட நிபுணர்கள் பார்த்து வருகிறார்கள். கடந்த 17 ஆண்டுகளாக சட்டத் துறைக்கு சவால் விடும் வகையில் நடந்து வரும் இவ்வழக்கின் போக்கைக் கவனிக்காத சட்ட நிபுணர்களோ அரசியல்வாதிகளோ இல்லை. பவானி சிங் அவர்களுக்கு தனி நீதிமன்றம் அபராதம் விதித்து எடுத்துள்ள நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை செல்ல வேண்டிய அவசியமில்லை. மேலும் குறைந்த அபராதத்தை ரத்து செய்வதற்காக பல லட்சம் செலவிடும் நிலையில் அவர் இல்லை. அவரை ஏதோ சில அரசியல் சக்திகள் தங்கள் சுயநலத்திற்குப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது” என்று மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான  சுரேஷ் நாயக் கூறியிருக்கிறார்.
எப்படியோ, மூன்று வார காலத்திற்கு வழக்கினை நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தடைபெற்றார்கள். அந்தத் தடையைப் பெறக் காரணம், அரசு வழக்கறிஞரின் உடல் நிலையோ, அவருக்கு விதிக்கப்பட்ட அபராதமோ அல்ல என்பது மக்களுக்கு நன்றாகப் புரிந்து விட்டது. என்ன காரணம் என்பதும் மக்களுக்குத் தெளிவாகி விட்டது.

இப்படியெல்லாம் செய்து, வழக்கை திசை திருப்பிட நினைப்பவர்கள் யார், என்ன நோக்கத்தோடு அவர்கள் அப்படிச் செய்கிறார் கள் என்பதை எளிதில் புரிந்து கொள்ளும் நிலையில் தான் தமிழகப் பொதுமக்கள் இருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக கடந்த மாதம் வரையில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் அவர்கள் தற்போது ஓய்வு பெற்று புதிதாக வந்திருக்கும் நீதியரசர் திரு. லோதா அவர்கள் கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதியன்று ஒரு சிறப்பான தீர்ப்பினை வெளி யிட்டார். அந்தத் தீர்ப்பில், “பதவியில் இருக்கும் நாடாளு மன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளில், அவை தொடரப்பட்ட, ஓர் ஆண்டுக்குள் வழக்கு விசாரணையை நீதிமன்றங்கள் முடித்து விட வேண்டும். நீதிமன்றங்கள் அவ்வாறு ஓர் ஆண்டுக்குள் விசாரணையை முடிக்க முடியாவிட்டால், அதற்கான காரணம் குறித்து அந்தந்த நீதிமன்றங் களுக்குரிய உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தீர்ப்பு அளித் ததையும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடுக் கப்பட்ட வழக்குகளின் விசாரணைக்குத் தடை விதிக்கக் கூடாது என்ற அம்சம், அந்தச் சட்டத்திலேயே இடம் பெற்றிருப்பதையும், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் மட்டும், அதற்கு எதிர்மறையாக 3 வாரங் களுக்கு உச்சநீதிமன்றமே விசாரணைக்குத் தடை விதித்திருப்பதையும் பார்த்தோம்.

அபராதம் விதித்ததை ரத்து செய்யக் கோரி, பவானி சிங் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, பவானி சிங் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், இந்த வழக்கில் அதிகப்படியான வாய்தா வாங்கியதால் நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையை ஏன் செலுத்தக்கூடாது என்று நீதிபதிகள் கேட்டனர்.
அபராதத் தொகையை, பின்னர் 20 ஆயிரமாகக் குறைத்தது மட்டுமன்றி அதனை அவசியம் செலுத்த வேண்டுமென்றும் நீதிபதிகள் கூறிவிட்டார்கள். மேலும் பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கண்டிப் பாக ஆஜராக வேண்டுமென்றும், தந்தை இறந்து விட்டார், தாய் இறந்து விட்டார் என்று சாக்கு போக்கு சொல்லக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் மூன்று வார காலம் விதித்திருந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது.
அன்புள்ள,
மு.க. ’’
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக