சனி, 10 மே, 2014

பணம் பதுக்கலால் அ.தி.மு.க., நிர்வாகிகள், அமைச்சர்கள், விசாரணைக்காக கோடநாடு ?

லோக்சபா தேர்தலில், முறையாக பணி செய்யாதவர்கள், கட்சி சார்பில்
வழங்கப்பட்ட பணத்தை, முறையாக நிர்வாகிகளுக்கு வழங்காதவர்கள், ஆகியோரிடம் விசாரணை நடத்த, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, அமைச்சர்களை அழைத்து, முதல்வர் விசாரித்து வருவதாக, வெளியான தகவல், கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழகம், புதுவை உட்பட, 40 லோக்சபா தொகுதிகளிலும், முதன்முறையாக அ.தி.மு.க., தனித்து களம் இறங்கியது. மற்ற கட்சிகளுக்கு முன்பாக, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் அறிக்கை வெளியிட்டு, தேர்தல் பிரசாரத்தை துவக்கியது. இதனால், பிரசாரத்தில் அ.தி.மு.க., முன்னணியில் இருந்தது. அப்போது, அக்கட்சிக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக கட்சியினர் நினைத்தனர்.


கடும் நெருக்கடி : மற்ற கட்சிகள் களம் இறங்கியதும், அ.தி.மு.க.,வின் உற்சாகம் குறைய துவங்கியது. உட்கட்சி பூசலால், பல தொகுதிகளிலும் ஆளும் கட்சி வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய முடியாமல் திணறினர். கடைசி கட்டத்தில், பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவாக, பா.ஜ., தலைவர்கள் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், வெங்?கயா நாயுடு போன்றோர் பிரசாரம் செய்தனர். அதன்பின், நிலைமை மாறியது. கூடவே, மின் வெட்டு பிரச்னையும் குடிதண்ணீர் பிரச்னையும் தலையெடுக்க, அ.தி.மு.க.,வுக்கு களத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இதையெல்லாம் சரிகட்டி, எப்படியும் வெற்றி கோட்டைத் தொட வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க., தரப்பு, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா என்கிற ஆயுதத்தை கையில் எடுத்தது. அனைத்து தொகுதிகளிலும், வாக்காளர்களுக்கு பணம் வழங்க, கட்சி நிர்வாகிகளிடம் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான நிர்வாகிகள், பணத்தை பதுக்கிக் கொண்டனர். இதனால், பல இடங்களில் வாக்காளர்கள் அதிருப்தி அடைந்தனர். ஒரு பகுதிக்கு கொடுத்து, மற்றொரு பகுதிக்கு பணம் போய் சேராததால், பிரச்னை ஏற்பட்டது.
இது தொடர்பானப் புகார்கள், தமிழகம் முழுவதிலும் இருந்து, கட்சி தலைமையிடம் குவிந்தன. தேர்தல் முடிந்ததும், முதல்வர் கோடநாடு சென்றார். கடந்த வாரம், நால்வர் அணியினர், கோடநாடு சென்று முதல்வரை சந்தித்தனர். அவர்களிடம் முதல்வர், தேர்தல் வெற்றி, உட்கட்சி பூசல், பணம் பதுக்கல் போன்ற விவரங்களை விளக்கமாக கேட்டுள்ளார். பணம் பதுக்கல் நடந்துள்ளதையும், யார் யாரெல்லாம் பணப் பதுக்கலில் ஈடுபட்டனர் என்பது குறித்தெல்லாம் ஆதாரங்களுடன் சொன்ன நால்வர் அணியினர், உட்கட்சி பூசலால் பல தொகுதிகளில் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக பணியாற்றியவர்கள் குறித்தும் பட்டியல் வாசித்திருக்கின்றனர். ஆனால், இவை எல்லாவற்றையும் கடந்து, அ.தி.மு.க., 30 தொகுதிகளுக்கும் மேலாக, வெற்றி பெறும் எனவும் கூறியுள்ளனர். சில தொகுதிகளில் முறையாக பணி செய்யாத அமைச்சர்கள், பணத்தை பதுக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் குறித்த விவரங்களையும் கூறிவிட்டு, அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில், புகாருக்குள்ளானவர்களை கோடநாடு வரவழைத்து, விசாரிக்க, முதல்வர் முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த விசாரணைப் படலத்தின் முதல் கட்டமாக, அமைச்சர்கள் ரமணா, செந்தில் பாலாஜி, ஆகியோர் முதல்வரை சந்தித்து திரும்பியுள்ளனர். அடுத்த கட்டமாக, அமைச்சர்கள் வளர்மதி, தோப்பு வெங்கடாசலம், தங்கமணி, பழனியப்பன், ஆகியோருக்கு, கோடநாட்டில் இருந்து அழைப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நடவடிக்கை : தர்மபுரியில் பா.ம.க., வேட்பாளர் அன்புமணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக, கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளதால், அது தொடர்பாக விசாரிக்க, அமைச்சர் பழனியப்பன் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி இருக்கிறது. அமைச்சர் வளர்மதி, மற்ற நிர்வாகிகளுடன் ஒத்துப்போகவில்லை என்றும், தென் சென்னையில் கட்சியினர் நடத்திய கோஷ்டி பூசலை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மற்றவர்கள் மீதும், பல்வேறு புகார்கள் வந்துள்ளதால், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த விசாரணைப் படலம் தேர்தல் முடிவு வெளியாவதற்குள் முடிந்து விடும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், சம்பந்தப்பட்டவர்கள் மீது ஜெயலலிதா கடும் நடவடிக்கை எடுப்பார் என, கட்சி வட்டாரத்தில் சொல்கின்றனர்.அடுத்தடுத்து அமைச்சர்கள், விசாரணைக்காக முதல்வரை சந்திப்பது, கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக