புதன், 21 மே, 2014

பீகார் அரசுக்கு காங்கிரஸ் நிபந்தனை அற்ற ஆதரவு !

பிகார் மாநில அரசுக்கு அளித்துவரும் ஆதரவை தொடர்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய ஜனதா தள அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை பிகார் ஆளுநர் டி.ஒய். பாட்டீலிடம் பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சௌத்ரி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அசோக் சௌத்ரி, "காங்கிரஸ் மேலிடம் எடுத்த முடிவின்படி, எங்கள் கட்சியின் 4 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளோம். ஆட்சியில் பங்கேற்பது குறித்து கட்சி மேலிடம் எதுவும் அறிவுறுத்தவில்லை.
ஐக்கிய ஜனதா தள ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளோம்' என்று கூறினார்.

மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பிகார் முதல்வர் பதவியில் இருந்து நிதீஷ்குமார் விலகினார். இதையடுத்து ஜிதன் ராம் மாஞ்சியை புதிய முதல்வராக அக்கட்சி தேர்ந்தெடுத்தது.
பிகார் ஆளுநரை திங்கள்கிழமை சந்தித்த நிதீஷ்குமார், தனது கட்சியின் 117 பேரின் ஆதரவு கடிதத்துடன் 2 சுயேச்சைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ ஒருவரின் கடிதங்களையும் வழங்கினார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் 4 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், 239 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையில் ஆளும் அரசுக்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 17 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தளம் அண்மையில் விலகியது. இதையடுத்து பிகாரில் ஐக்கிய ஜனதா தள அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கி கொண்டது. அதன்பின்னர் பிகார் அரசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது. dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக